
உலகத்தின் பார்வையில் நம் நாடு அதிகாரப் பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) என்று அழைக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி பாரதம் என்கிற இந்தியா என்று அழைக்கப் படுகின்றது. அதே வேளையில் இந்தியாவிற்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. நீண்ட காலமாக இந்தியாவின் பொதுவான பெயராக பாரத் அல்லது பாரதகண்டம் என்று வழங்கப்பட்டது. இந்த பெயர் உள்நாட்டு மக்களால் அழைக்கப்பட்ட பெயராக இருந்தது.
இன்றளவும் நாட்டின் பெரும்பான்மை மக்களால் பாரத் என்றே அழைக்கப்படுகிறது. பல நாடுகளை உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பைக் கொண்ட தேசத்தை, மன்னன் துஷ்யந்தனின் மகன் பரதன் சிறப்பாக ஆட்சி செய்ததால் , அவனது பெயரிலேயே இந்த நாடு நிலைத்து விட்டது. பரத கண்டம் , பரதஷேத்திரா , பாரத் வருஷ் என்று அன்றைய காலக்கட்டத்தில் அழைக்கப்பட்டது. மேலும் ஆரியர்களை குறிப்பிட்டு ஆரியவர்த்தா, ஆரியவருஷ் என்றும் அழைக்கப்பட்டது.
வட இந்தியாவை பொறுத்தவரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயரே நாட்டை குறிப்பிட இன்று வரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹிந்துஸ்தான் என்றால் ஹிந்துக்களின் பூமி என்று பொருள்படும். இந்த பெயர் அன்று மதரீதியான பெயராக இருக்க வில்லை.
பாரசீக நாட்டினர் சிந்து நதிக்கரையில் வசிக்கும் மக்களை குறிப்பிட ஹிந்து என்றும் அந்த மக்கள் வசிக்கும் நாட்டை ஹிந்துஸ்தான் என்ற பெயரிலும் குறிப்பிட்டனர்.
இந்த பெயர் அடிமை வம்ச சுல்தானிய ஆட்சி காலத்திலும் , முகலாயர் ஆட்சி காலத்திலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. மேலும் ஹிந்த் என்ற பெயரிலும் இந்தியா அழைக்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹிந்த் என்ற பெயரில் தான் இந்தியாவை குறிப்பிடுவார். பிரிட்டிஷ் ராஜிடம் இருந்து நேதாஜி கைப்பற்றிய பகுதிகளை ஆசாத் ஹிந்த் என்று பெயரிட்டார். அவரது அரசாங்க ரூபாயில் ஆசாத் ஹிந்த் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. அரேபியர்கள் இந்தியாவை அல் ஹிந்த் என்றும் சீனர்கள் யின் என்றும் அழைத்தனர்.
இந்தியா என்ற பெயரின் மூலம் கிரேக்க நாட்டினர் இப்பகுதியை குறிக்க பயன்படுத்தினர். அவர்கள் இண்டிகா என்றும் இண்டாய் என்றும் கூட அழைத்தனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிரேக்கர்களை பின்பற்றி இந்தியா என்று பதிவு செய்தது. சில நாடுகள் இண்டீஸ் என்றும் குறிப்பிட்டு இருந்தன. கிரேக்க நாட்டுக் குறிப்புகளில் இருந்த "பாலாறும் தேனாறும் பல்கி பெருகி ஓடும் இந்தியா" என்ற சொற்தொடர் ஐரோப்பிய நாடுகளின் தேடல் இந்தியாவை நோக்கி திரும்பக் காரணமானது.பிரிட்டிஷ் காலத்தில் இந்தியா என்ற பெயர் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவை தேடிய பயணத்தினால் தான் உலகம் நாகரீகம் அடைந்தது , உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டுபிடிக்க ஒரே காரணம் இந்தியா என்றால் மிகையல்ல. அமெரிக்கா கூட இந்தியாவை தேடி பயணம் செய்தபோது வழிமாறி கண்டுபிடிக்கப்பட்ட நாடு தான். அதனால் தான், அமெரிக்காவின் பூர்வகுடி மக்களுக்கு செவ்விந்தியர்கள் என்ற பெயர் சூட்டப்பட்டது. அங்கு இந்தியானா என்ற மாநிலமும் உள்ளது. இது போன்ற தேடல்களில் இரண்டு அமெரிக்க கண்டங்கள், ஆஸ்திரேலிய கண்டம் , இந்தோனேஷியா, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட பல நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தியாவிற்கு, ஜம்புதீபா என்ற பெயர் வேதங்களிலும் புராணங்களிலும் இருந்துள்ளது. கியாக்கர் , பக்யூல் என்ற பெயர்களில் திபெத்தியர்கள் நம் நாட்டை குறிப்பிட்டனர். சீனர்கள் தியான்சு என்றும், கொரியர்கள் சியான்சுக் என்றும், வியட்நாமியர்கள் தியான்ருக் என்றும் அழைத்துள்ளனர். ஹீப்ரு மொழியில் ஹோடு என்று இந்தியா குறிப்பிடப்பட்டது. ஜப்பானியர்கள் டென்ஜிகு (சொர்க்கத்தின் நிலம்) என்று பெருமையுடன் அழைத்தனர். தமிழ் இலக்கியங்களில் நாவலந்தீவு என்றும் நாவலந்தேயம் என்றும் அழைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாட்டு வரலாற்றிலும் பெருமையாக ஒரு நாடு குறிப்பிடப்பட்டு இருந்தால் , அது இந்தியாவாக மட்டும் தான் இருக்கும்.