கர்நாடக சங்கீதத்தின் தலைநகரம் சென்னை என்பது உலகறிந்த ரகசியம். இங்கிருக்கும் ரசிகர்கள் முன்னிலையில் பாடி, வாசித்து அவர்களின் அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களாக பிரசித்தி அடைகிறார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் சங்கீதம் பயிலவும் இசைக் கச்சேரிகளுக்காகவும் வந்து போய்க்கொண்டிருந்த இசை பயிலும் மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், ஒரு காலகட்டத்தில் சென்னையைத் தன்னுடைய தாயகமாக மாற்றிக் கொண்டு இங்கேயே குடியேறியதையும் சந்தீப் நாராயணன், ராமகிருஷ்ணன் மூர்த்தி போன்ற கலைஞர்களிடையே நாம் கண்டிருக்கிறோம்.
திறமை மிக்க இரண்டு இளம் வயலின் கலைஞர்கள். ஒருவர் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தவர். ஆந்திர மாநிலத்திலிருந்து மற்றொருவர். இந்த இளம் வயதிலேயே இருவரும் பக்கவாத்தியம் இசைத்த கச்சேரிகளின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தொடவிருக்கிறது. இந்த ஆண்டின் இசை விழாவில் மிக பிஸியாக கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த இருவர் யாரென அறிந்து கொள்வோமா?
ஆலங்கோடு வி.எஸ் .கோகுல்:
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் ஆலங்கோடு என்ற ஊரைச் சேர்ந்தவர் கோகுல். தனித்திறமையோடு வளர்ந்து வரும் நட்சத்திரக் கலைஞர். ஐந்து வயதிலேயே தனது பெரியப்பா சுரேந்திரன் அவர்களிடம் வயலின் கற்கத் தொடங்கியவர், 10 வயது முதல் கச்சேரி மேடைகளை அலங்கரிக்கத் தொடங்கினார். வித்வான் எடப்பள்ளி அஜித்குமார் அவர்களிடம் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார்.
தற்போது பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி கன்னியாகுமரி அவர்களால் பட்டை தீட்டப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். தினமும் விடாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையைத்தான் தன் குரு தனக்கு அன்போடு வழங்குவதாகக் கூறுகிறார் இவர்.
அகில இந்திய வானொலியின் இசைப் போட்டியில் வயலின் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர். மும்பை சண்முகானந்த சபையின் பாரத ரத்னா, எம் எஸ் சுப்புலட்சுமி ஃபெல்லோஷிப் விருது 2015 - 2017 ஆம் ஆண்டிற்கு இவருக்கு வழங்கப்பட்டது. திருப்புணித்துரா பூர்ணத்ரயீசா சங்கீத சபா இவருக்கு ‘யுவ பிரதீபா புலஸ்காரம்’ விருதினை 2022 ஆம் ஆண்டு வழங்கியது.
சமீபத்தில், ‘பரம்பரா யுவ பிரதீபா புரஸ்கார்’ எனும் விருதை காசர்கோடு, கோகுலம் கோஷாலா அமைப்பு வழங்கியது. இன்றைய நட்சத்திரக் கலைஞர்கள் பலரும் பக்கவாத்தியமாக விரும்பிக் கேட்கும் ஒரு வயலின் கலைஞரான இவர், தன் வயதுக்கு மீறிய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் மிருதங்கம் வாசிப்பதிலும் வல்லவர் என்பது பலர் அறியாத தகவல்.
V S P காயத்ரி ஷிவானி:
ஆந்திர பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த வி எஸ் பி காயத்ரி ஷிவானி, வளர்ந்து வரும் ஒரு வயலின் இசைக் கலைஞர். இசைக் கலைஞரான தம் தாயின் சங்கீதம் கேட்டு மூன்று வயது முதல் பாடத் தொடங்கியவர். ஏழாவது வயதில் தன்னுடைய முதல் குருவான ஜி ஸ்ரீனிவாச மூர்த்தி அவர்களிடம் வயலின் கற்கத் தொடங்கி, இன்று வரை அவருடைய மாணவியாகத் திகழ்கிறார். 9 வயதில் முதல் மேடைக் கச்சேரி. அதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசத்திலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல கச்சேரிகள்.
Dr. நர்மதா கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் சில காலம் பயின்ற இவர், தற்போது சங்கீத கலாநிதி எம் சந்திரசேகரன் அவர்களின் மாணவியாகத் தன் சங்கீதத்தை மெருகேற்றி வருகிறார்.20 வயது கூட நிரம்பாத ஷிவானி, இன்று மிகவும் பிஸியாகத் திகழும் ஒரு பக்க வாத்தியக் கலைஞர்.
ஆந்திராவிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ள இவரை, முதுபெரும் கலைஞர்கள் முதல் நட்சத்திரக் கலைஞர்கள், வளர்ந்து வரும் கலைஞர்கள் என பல மேடைகளில் பக்கவாத்தியம் இசைக்கக் காணலாம். வயலின் இசைக்காத வேளையில் ஒரு சங்கீத ரசிகையாக, மாணவியாக மூத்த கலைஞர்கள் மற்றும் தன் சகாக்களின் கச்சேரிகளை கேட்டு ரசிப்பதையும் நாம் பார்க்கலாம்.
சி சி ஆர் டி ஸ்காலர்ஷிப் கேம்ப்பில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் ராஜ் காட்டில் மகாத்மா காந்திஜி அவர்களின் 150 வது பிறந்த தினத்தை ஓட்டிய விழாவில் பிற மாணவர்களுடன் வயலின் இசைத்திருக்கிறார் ஷிவானி.
பால பிரதீபா புரஸ்கார் விருது, விசேஷ பிரதீபா புரஸ்காரம், சென்னை மியூசிக் அகாதெமி நடத்திய 2022 ஆம் ஆண்டின் ‘ஸ்பிரிட் ஆஃப் யூத் கான்சர்ட்டில்’ சிறந்த வயலின் இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, தவிர, இவருக்கு சமீபத்தில் செகந்திராபாத் ‘கலாசாகரம்’ அமைப்பின் 56வது ஆண்டு கலை விழாவில் ‘கலைமாமணி A. கன்னியாகுமரி அவார்ட் - சர்டிபிகேட் ஆஃப் எக்ஸலன்ஸ்’ வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வயலின் பக்க வாத்தியக் கலைஞர்களாக பங்கு கொள்ளவிருக்கும் இரு இளம் இசைக் கலைஞர்களின் வாசிப்பை இந்த இசை விழாவில் கேட்டு ரசிக்கத் தவறாதீர்கள்.