மானத்தைக் காக்கவும், சுதந்திரத்தைப் பேணவும் வாழ்வையே தியாகம் செய்த மருதுச் சகோதரர்களின் (Maruthu Brothers) மகத்துவம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
எண்களில் இரண்டுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு! மனிதர்களின் கண்கள், காதுகள், நாசிகள், கைகள், கால்கள் என்று வெளியுறுப்புக்கள் இரண்டிரண்டாக உள்ளதோடு, உள்ளுறுப்புகளான நுரையீரல், சிறுநீரகம் போன்றவையும் இரண்டிரண்டாகவே உள்ளன. சக்தியும் சிவனுங்கூட இருவர்தானே!
அதைப்போலவே அக்காலத்தில் வீரத்தையும், பக்தியையும் இரு கண்களாகவே பாவித்து வந்திருக்கிறார்கள் நமது மன்னர்கள்! மானத்தைக் காக்கவும், சுதந்திரத்தைப் பேணவும் அவர்கள் வாழ்வையே தியாகம் செய்யவும் தயங்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இறைவர்கள் தங்குமிடமாகிய ஆலயங்களை அதிகமாகவே கட்டினார்கள். வீரத்திற்குப் பக்தி துணையாகவும், பக்திக்கு வீரம் பக்கபலமாகவும் நின்று, இரண்டுமே நன்கு வளர்ந்துள்ளன.
நமது இந்திய சுதந்திர வரலாற்றுக்கு வித்திட்டவர்களும் இந்த இருவர்தான் என்று அறிகையில் நம் இதயமே விம்முகிறது. இவர்கள் இருவரும் மன்னர்களல்லர். சிவகங்கைச்சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படைத் தளபதிகள்.
வேலு நாச்சியாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெருமைக்கு உரியவர்கள். நமது நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்கள். மருதுச் சகோதரர்களின் மகத்துவம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
உடையார் சேர்வை-பொன்னாத்தாளின் புதல்வனாகப் பெரியமருதுவும் (1748), ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சின்ன மருதுவும் (1753) பிறக்கின்றனர். சிறு வயது முதலே விவேகமான வீரத்துடன் செயல்படுகின்றனர். மன்னர் மனமுவந்து அவர்களைப் படைத்தளபதிகளாக்கிக் கொள்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், ஆங்காங்கே இருந்த சுதந்திர வேட்கை கொண்ட குழுக்களையெல்லாம் ஒன்றிணைத்து, 1801-ல் 'ஜம்புத் தீவு பிரகடனம்' என்பதை ஜூன் மாதம் வெளியிட்டு, சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களைக் கதி கலங்கச் செய்கின்றனர். 1857-ல் தொடங்கப்பட்ட சிப்பாய்க் கலகத்திற்கு முன்னோடிகளாக இருந்தவர்கள், மருது சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களின் துணிவையும், போர்த்திறமையையும், சுதந்திர எண்ணம் கொண்ட குழுக்களை ஒருங்கிணைக்கும் பாங்கினையும் கண்டு அதிர்ந்த ஆங்கிலேயர்கள், 1801-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி, திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்களைத் தூக்கில் இட்டனர். அவர்களோடு சேர்த்து அவர்களின் ஆண்வாரிசுகளும் தூக்கிலிடப்பட்டதாக, சோகம் ததும்பப் பதிவிடுகிறது வரலாறு! 53 வயதில் பெரிய மருதுவும், 48 வயதில் சின்ன மருதுவும், கயிற்றில் தொங்கிக் கடமையை முடித்துக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் ஏற்றிய சுதந்திர தீபம், நாடெங்கும் பரவி, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்துள்ளது. இது அவர்களின் வீரக்கதை. பக்திக் கதையையும் கொஞ்சம் பார்ப்போமே!
காளையார் கோயில்: மருது சகோதரர்களின் ஆன்மிகப் பணிக்கு எடுத்துக்காட்டான கோயில் இது. 151 அடி உயர ராஜ கோபுரத்தை, மதுரையிலிருந்து கல் தருவித்து உருவாக்கினார்களாம். அக்கோபுரத்திலிருந்து பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம்!
“கருமலையிலே கல்லெடுத்துக் காளையார் கோயில் உண்டு பண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி!”
என்ற நாட்டுப் புறப்பாடல் இதற்குக் கட்டியங்கூறும்!
குன்றக்குடி கோயில்: மலைமேல் கோபுரமும் மண்டபமும் கொண்டது இது. ’மருதா புரி’ என்ற குளத்தையும் வெட்டினர் சகோதரர்கள். இப்பொழுதும் முருகனுக்குச் சாற்றப்படும் பொற்கவசத்தில் ‘சின்ன மருது உபயம்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
சருகணி மாதா கோயில்: மருதுச் சகோதரர்கள் மத நல்லிணக்கத்திற்கும் முன்னோடிகள் என்பதற்கான அடையாளம் இது! இம்மாதா கோயில் சிறப்புற்று விளங்க வேண்டுமென்பதற்காக அந்த ஊரையே அதற்குத் தானமாக வழங்கினார்களாம்.
சிவகங்கை திருஞான சுப்பிரமணியார் கோயில்: சிவகங்கையின் இரண்டாம் அரசர் முத்து வடுக நாதருக்கும் பட்டத்தரசி வேலுநாச்சியாருக்கும் குழந்தை இல்லாததால், மகப்பேறு உண்டானால் ஆலயம் எழுப்புவதாக மன்னர் வேண்டிக் கொள்ள, வேலு நாச்சியாருக்குப் பெண் குழந்தை பிறந்ததாம். ஆலயம் எழும்பும் முன்னரே மன்னர் போர்க்களத்தில் வீர மரணமெய்த, சகோதரர்களின் காதுகளுக்குச் செய்தி எட்ட, மன்னரின் சார்பில் கோயிலைக் கட்டி முடித்தார்களாம். அக்கோயிலின் இடப்புறத் தூணிலுள்ள கல்வெட்டு, இன்றும் இதனைப் பறைசாற்றிக் கொண்டு நிற்கிறது. மருதுச் சகோதரர்களின் நன்றியறிதலின் மாண்புக்கு ஈடுண்டோ!
திருமோகூர் கோயில்: புலவர்களையும், இலக்கிய கர்த்தாக்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்தி அழகு செய்தவர்கள் மருதுச் சகோதரர்கள் என்பதற்கான அடையாளம் இந்த ஊர். காளமேகப் புலவருக்கு இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன. முகப்பு மண்டபத்தை மருதுச் சகோதரர்களே நிர்மாணித்துள்ளனர். இக்கோயிலின் பூஜை செலவிற்காக மாங்குடி, மானாகுடி ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புள்ள பிரமாண்ட மருது சகோதரர்களின் சிலைகள் தூசு படிந்து பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.
நரிக்குடி கோயில்: மருதுகளின் சொந்த ஊரான இதில், அன்னதானமருகி விநாயகர் கோயில் மற்றும் அழகிய மீனாம்பிகை கோயில் என்று இரண்டு கோயில்களைக் கட்டியுள்ளனர். பாண்டியன் கிணறு என்ற பெயரில் கிணறு ஒன்றையும் வெட்டியுள்ளனர். பாசனத்தையும் மனதில் பதிய வைத்திருந்தார்கள் சகோதரர்கள் என்பதற்கான சான்று இது.
வீரக்குடி கோயில்: இதனைக் கட்ட பெரிய மருது உதவியுள்ளார்.
திருக்கோட்டியூர் கோயில்: கோயிலும் குளமும் புதுப்பிக்கப்பட்டு, தேர் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது சகோதரர்களால்!
திருப்பத்தூர் கோயில்: இங்கு சிவன் கோயிலை எழுப்பினார்கள் மருதுகள். தற்போது இது குன்றக்குடி ஆதீனத்திற்குச் சொந்தமாகவுள்ளது. அப்பப்பா!வீரத்திலும், பக்தியிலும் இவர்களின் சாதனைகளை எண்ணுகையில் உடலில் புதுரத்தம் பாய்கிறது!
இந்தக் குணக்குன்றுகள் தூக்கிலேற்றப்பட்டது இதே அக்டோபர் மாதத்தில்தான் (24-10-1801) என்று எண்ணுகையில் வேதனை விஞ்சி நிற்கிறது!
இவர்களின் வீரத்தையும், பக்தியையும் நாமும் பின்பற்றுவோமே!