கிரேக்க புராணக் கதைகளில் குறிப்பிடப்படும் மெதுசா என்னும் அரக்கி நம்மை மிகவும் பயமுறுத்தும் கதாபாத்திரமாகும். அவளுக்கு தலையில் முடிக்கு பதிலாக பாம்புகள் இருக்கும். தனது கண்களை நேருக்கு நேராக பார்க்கும் எந்த மனிதரையும் கல்லாக மாற்றும் சக்தி அவளுக்கு உண்டு. சில ஆங்கிலத் திரைப்படங்களில் கூட இந்த கதாபாத்திரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் பதிவில் மெதுசா அரக்கியின் மர்மங்களைத் தெரிந்துகொள்வோம்.
மெதுசா, கோர்கன்ஸ் எனப்படும் மூன்று அரக்க சகோதரிகளில் ஒருத்தி. தலை முடிக்கு பதிலாக பாம்புகளையும், தனது கண்களை நேரடியாக பார்க்கும் எவரையும் கல்லாக மாற்றும் கொடூர சக்தி கொண்டவள். அவளது சகோதரிகள் அரக்க ரூபத்தில் இருந்தாலும், மெதுசா ஒரு தனித்துவமான சாபம் பெற்று மனித ரூபத்தில் இருந்தாள்.
புராணக் கதைகளின்படி, ஒரு அழகான கன்னிப் பெண்ணாக இருந்த மெதுசாவின் மீது கடல் கடவுளான Poseidon-க்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் அதினாவின் கோவில் புனிதத்துவத்தை இறந்ததால், ஞானம் மற்றும் போர் தெய்வமான அதினா கோபமடைந்தாள். மெதுசா தனது புனித இடத்தை இழிவுபடுத்தியதற்காக தண்டிக்கப்பட்டாள். இதனால் அழகாக இருந்த மெதுசாவை தலை முடிக்கு பதிலாக பாம்புகளைக் கொண்ட ஒரு பயங்கரமான உயிரினமாக மாற்றினாள் அதினா. இதில் அவளது கண்களைப் பார்க்கும் எவரையும் கல்லாக மாற்றும் சாபமும் விடுக்கப்பட்டது.
மெதுசா ஒரு கோர்கனாக மாறியதும் அவள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டாள். அவள் சராசரி வாழ்விடங்களில் இருந்து வெகு தொலைவில் ஒரு பாழடைந்த தீவுக்கு விரட்டப்பட்டாள். அங்கு அவளது வாழ்க்கை மிகக் கொடூரமாக இருந்தது. பின்னர் எண்ணற்ற கதைகள் மற்றும் கட்டுக்கதைகள் மெதுசாவை சுற்றி எழுதப்பட்டன. இது அவளை கிரேக்க புராணங்களில் ஒரு முக்கிய நபராக மாற்றியது. ஹீரோக்களும் சாகசக் காரர்களும் அவளைத் தேடி தோற்கடிக்கும்படி கதைகள் எழுதப்பட்டன. அப்படி அவளைத் தோற்கடித்த ஒரு ஹீரோதான் பெர்சியஸ். ஒரு கண்ணாடி கவசத்தைப் பயன்படுத்தி, மெதுசாவின் கண்களை நேரடியாக பார்க்காமல், அவளது தலையை துண்டாக வெட்டினார். பின்னர் கண்ணாடி மூலமாக அவளது பார்வையை அவளுக்கே காட்டி மெதுசாவை கல்லாக மாற்றி சாகடித்தான் பெர்சியஸ்.
கிரேக்க புராணங்களில் இந்த கதை மிகவும் பிரபலமானது. இதை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத் திரைப்படங்களும் வந்துள்ளன. இவளது கொடூரமான தோற்றத்துக்கு அப்பால், சில வியக்க வைக்கும் குறியீடுகளும் உள்ளன. அழகுக்கு பின்னால் இருக்கும் ஆபத்தை பிரதிபலிக்கிறாள் மெதுசா. வாழ்க்கையில் நம்மை மயக்கும் அம்சங்களைக் கொண்ட விஷயங்கள்கூட, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை மெதுசா மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.
இறுதியில் அழகான பெண்ணாக இருந்த மெதுசா, சபிக்கப்பட்டு அரக்கியாக மாறி இறுதியில் ஒரு வீரனின் கைகளால் மறைவை சந்தித்தாள். அடுத்தமுறை ஏதேனும் திரைப்படத்தில் மெதுசாவின் உருவத்தை நீங்கள் பார்க்கும்போது, அந்த கதாபாத்திரத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையை சிந்தித்துப் பாருங்கள். இது கிரேக்க புராணங்களின் ஆழத்தை நமக்குத் தெளிவாக புரிய வைக்கும்.