உலகின் மிகச்சிறந்த கட்டுமானமாகப் பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணை!

முல்லைபெரியாறு அணை
Mullai Periyar Dam

யிரக்கணக்கான மக்களின் தாகத்தைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், கட்டடக் கலையின் நிகழ்கால வரலாற்றின் அதிசயமாகவும் திகழ்கிறது முல்லைப் பெரியாறு அணை. தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே சமீப காலமாக பிரச்னை ஏற்பட்டு இருப்பதும் இந்த அணையே காரணம். இந்த அணையின் முக்கிய சிறப்புகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

மதுரையில் பாயும் வைகை ஆறு, அம்மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கு போதுமான நீர் ஆதாரத்தைத் தரவில்லை. அப்போது மதுரையில் நிலவிய குடிநீர் பஞ்சத்தைப் போக்க கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை. தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு தண்ணீர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

1917 முதல் 1918ம் ஆண்டு வரை ஏற்பட்ட பஞ்சங்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் உருவாகி, கேரளா வழியாக வீணே கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு ஆற்றை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்குத் திருப்பி விட கட்டப்பட்ட அணைதான் முல்லைப் பெரியாறு.

ஆங்கிலேயே ஆட்சியின்போது இந்த அணையைக் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு பிறகு கைவிடப்பட்டன. அப்போது வந்தவர்தான் கர்னல் ஜான் பென்னிகுயிக். இங்கிலாந்து ராணுவத்தில் கட்டட பொறியாளராகப் பணியாற்றிய இவர் தனது சொந்த முயற்சியால் மீண்டும் இந்த அணையை கட்டும் பணிகளை தொடங்கினார். 1886ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், பிரிட்டீஷ் அரசாங்கமும் அணை தொடர்பாக 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதனைத் தொடர்ந்து 1887ம் ஆண்டில் பென்னிகுயிக், முல்லைப் பெரியாறு அணை கட்டும் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 1887ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம் குறித்த திட்ட அறிக்கையை சென்னை மாகாண அரசிற்கு அனுப்பினார். பலராலும் நிராகரிக்கப்பட்ட முல்லை பெரியாறு அணையின் கட்டுமானம் குறித்து பென்னிகுயிக் தயாரித்த திட்ட அறிக்கையை பார்த்து சென்னை மாகாண அரசு வாயடைத்துப் போனது.

Mullai Periyar Dam with Penny Quick
Mullai Periyar Dam with Penny Quick

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி கேரளா வழியாகக் கடலில் கலக்கும் பெரியாற்றின் தண்ணீரை தடுத்து, அப்போது தேங்கும் நீரை அணையின் மற்றொரு முணையில் அமைக்கப்படும் குகை வழியாக தமிழகப் பகுதிக்கு கொண்டு செல்வது என அந்தத் திட்டம் அசரடிக்கும் விதத்தில் இருந்தது. அப்படி வரும் நீரை அணைக்குக் கொண்டு வந்து, பிறகு அங்கிருந்து தமிழகத்தின் தென் மாவட்டப் பகுதிகளுக்கு விநியோகிக்க முடியும் என பென்னிகுயிக் அந்தத் திட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதைப் பார்த்து வியந்துபோன பிரிட்டீஷ் அரசாங்கமும், சென்னை மாகாண அரசும் பென்னி குயிக்கின் திறமைக்கும், தொழில்நுட்ப அறிவிற்கும் பாராட்டுதலைத் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமானம், 1887ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சுண்ணாம்பு கற்களாலும், கருங்கற்கள் கொண்டும் இந்த அணை கட்டப்பட்டது. காட்டுப் பகுதியில் இந்த அணை கட்டப்பட்டதால், அதற்காக பலவகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து பெய்த கனமழையால் அணையின் தொடக்கக்கட்ட பணிகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், ஆங்கிலேய அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது. இதனால் மனமுடைந்த பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தன்னுடைய சொத்துக்கள், மனைவி நகைகளை விற்று அதன் மூலம் கிடைத்த ஆதாரத்தின் மூலம், முல்லைப் பெரியாறு அணைக்கான பணியைத் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:
இரவில் நன்கு தூக்கம் வர இதைச் செய்தாலே போதும்!
முல்லைபெரியாறு அணை

இந்த பெரியாறு அணை 1893ல் 60 அடி உயரத்திற்கும் அதன் பின்பு 1894ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு 1895 அக்டோபர் 10ம் தேதி திறந்து வைத்தார்.

இந்த அணையின் கொள்ளளவு 15.5 டி.எம்.சி , உயரம் 155 அடி. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தேக்கடி வன சரணாலயம் உள்ளது. இதன் கீழ்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின் கீழ் இந்த அணை அமைந்துள்ளதால், ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயர் இதற்கு வழங்கப்பட்டது.

பொறியியல் தொழில்நுட்பத்தில் அனைவராலும் பாராட்டப்படும் முல்லைப் பெரியாறு அணை, உலகின் தலைச்சிறந்த கட்டுமானமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அணை நீர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மதுரையை சுற்றியுள்ள கம்பம், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com