ராசி, நட்சத்திர, மண்டல தாத்பர்யத்தோடு அமைந்த நடவாவிக்கிணறு!

Nadavavi well with Rashi, Nakshatra and Mandal concept
Nadavavi well with Rashi, Nakshatra and Mandal concept
Published on

காஞ்சிபுரத்திலிருந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில், ஐயங்கார்குளம் என்ற ஊரில் ஸ்ரீ சஞ்சீவராய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் ஒரு வித்தியாசமான கிணறு அமைந்துள்ளது. இதை, ‘நடவாவிக் கிணறு’ என்று அழைக்கிறார்கள். படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள கிணறு என்பதால் இதை, ‘நடவாவி’ என்று அழைக்கிறார்கள்.

நடவாவி கிணற்றின் நுழைவுப் பகுதியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ஒரு தோரணவாயில் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் கஜலட்சுமியின் சிற்பமும் நுழைவுத் தூணின் இருபுறங்களிலும் வீரர் அமர்ந்துள்ள யாளியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கிணற்றுக்குள் செல்ல தரைப் பகுதியில் இருந்து 48 படிக்கட்டுகளுடன் கூடிய சுரங்கம் போன்ற ஒரு அமைப்பு காணப்படுகிறது. இதன் வழியே இறங்கி 27 படிகளைக் கடந்து உள்ளே சென்றால், 12 தூண்களுடன் கூடிய ஒரு மண்டபமும் அதன் நடுவில் ஒரு கிணறும் அமைந்துள்ளதைக் காணலாம். இதுவே நடவாவிக் கிணறு என்று அழைக்கப்படுகிறது. இன்னும் 21 படிகளைக் கடந்து சென்றால் அந்தக் கிணற்றின் அடிப்பகுதியை அடையலாம். ஆக மொத்தம் இந்தக் கிணற்றை அடைய 48 படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்.

Nadavavi Kinaru
Nadavavi Kinaru

மண்டபத்தின் தூண்களில் பெருமாளின் அவதாரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நடவாவிக் கிணற்றில் மண்டபத்தைத் தாண்டி படிகள் வரை நீர் நிரம்பி காணப்படும். ஒரு மண்டலத்தைக் குறிக்கும் வகையில் 48 படிகளும், 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் மண்டபத்தை அடைய 27 படிகளும், 12 ராசிகளைக் குறிக்கும் வகையில் மண்டபத்தில் 12 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

Nadavavi Kinaru
Nadavavi Kinaru

வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இங்கே நடவாவி உத்ஸவம் நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்திற்காக இரண்டு தினங்களுக்கு முன்பாக நடவாவிக் கிணற்றில் உள்ள நீரை இறைத்து வெளியேற்றுவார்கள். அந்நாளில் காஞ்சி வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி அருள்புரிவார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சிறப்பு அலங்கரத்துடன் கிணற்றுக்குள் எழுந்தருளும் வரதராஜர் கிணற்றை மூன்று முறை வலம் வருவார். அவ்வாறு வலம் வரும்போது ஒவ்வொரு முறையும் நான்கு திசைக்கும் தீபாராதனை நடைபெறும். இதன்படி மொத்தம் 12 தீபாராதனை நடைபெறுவது வழக்கம். பழங்கள், கல்கண்டு என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை வரதராஜப் பெருமாளுக்கு அப்போது நைவேத்தியம் செய்கிறார்கள்.

Nadavavi Kinaru
Nadavavi Kinaru

உத்ஸவத்திற்குப் பின்னர் நடவாவிக் கிணற்றில் இருந்து புறப்படும் வரதருக்கு பாலாற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் பள்ளம் எடுத்து அதற்கு மேல் பந்தல் அமைத்து அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள். இதற்கு, ‘ஊறல் உத்ஸவம்’ என்று பெயர். இந்த உத்ஸவத்திற்குப் பின்னர் வரதர் புறப்பட்டு காஞ்சியை அடைவார்.

இதையும் படியுங்கள்:
ஷீரடி சாயிபாபா அமர்ந்து அருளாசி வழங்கிய ஷீலா கல்!
Nadavavi well with Rashi, Nakshatra and Mandal concept

காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் வரதர், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐயங்கார்குளம் வழியாக நடவாவிக் கிணற்றிற்கு எழுந்தருளுவார். இந்த உத்ஸவம் முடிந்ததும் பாலாறு, செலிவிமேடு, விளக்கடிகோயில் தெரு, காந்தி ரோடு வழியாக மீண்டும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளுவார்.

மறுநாள் கோயிலில் இருந்து இராமபிரான், இலக்குமணர், சீதா தேவி ஆகியோர் இந்தக் கிணற்றுக்கு வந்து எழுந்தருளுவார்கள்.  இதன் பின்னர் உள்ளூர் பக்தர்கள் நடவாவிக் கிணற்றில் புனித நீராடுவர்.  விழாவுக்குப் பின்னர் கிணற்றில் ஊற்றெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நீர் நிரப்பிவிடும். இந்த நடவாவிக் கிணற்றை சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டுமே முழுமையாகப் பார்க்க முடியும்.  பின்னர் படிக்கட்டுகள் வரை நீர் நிரம்பியுள்ள காட்சியை மட்டும்தான் நாம் காண முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com