மும்பையில் நாதஸ்வரத் திருவிழா! டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 125வது பிறந்த நாள் விழா!

மும்பையில் நாதஸ்வரத் திருவிழா! டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 125வது பிறந்த நாள் விழா!

நாதஸ்வர சக்கரவர்த்தி மறைந்த திரு. டி.என். ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 125ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம், இரண்டு நாட்கள் ‘நாதஸ்வரத் திருவிழா’வாக மும்பை ஸ்ரீசண்முகானந்தா ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபாவால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

முதல்நாள்:

த்மஸ்ரீ ஷேக் சின்ன மெளலானா சாகேப் வாசித்த நாதஸ்வரத்தை அவரது பேரன்களாகிய காசிம் பாபு சகோதரர்களிடமிருந்தும், பத்மவிபூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தாபா கான் அவர்களின் வாத்தியத்தை அவரது மகன் ரபானி முஸ்தபா கானிடமிருந்தும் பெற்று, அவை சபாவின் Ground Floorல் உள்ள ‘Maestras Treasure’ எனப்படும் இடத்தில் வைக்கப்பட்டன.

மாலையில் நாதஸ்வர வித்வான்களாகிய திரு எஸ். காசிம், திரு எஸ்.பாபு சகோதரர்கள் தலைமையில் சுமார் 60 நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வாத்தியக் கலைஞர்கள் அனைவருமே ஒரே மேடையில் அமர்ந்து அநேக கீர்த்தனைகள், பாடல்களை ஒன்றாக இசைத்த காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.

இரண்டாம் நாள்:

காலை 9 மணி அளவில் மாதுங்கா ஸ்ரீராமர் கோயிலில் இருந்து கோதண்டராமர் மற்றும் காஞ்சி பரமாச்சாரியார் உருவப் படங்கள், பூக்களால் அலங்கரித்த தேரில் வைக்கப்பட்டு மெதுவாக சாலையில் பவனி வர, அதன் பின்னே 110க்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள் மல்லாரி இசைத்தவாறே, ஸ்ரீசண்முகானந்தா சபா வரை வந்தனர். அக்காட்சியைக் கண்டு வானுலகமே தங்களது மகிழ்ச்சியை மழையாக பொழிந்து ஆசிகளை அருளியது.

இதையடுத்து, சபா மேடையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாதஸ்வரம் பயிலும், வாசிக்கும் 50 வளரும் கலைஞர்களையும், மூத்த வித்வான்களையும் கெளரவிக்கும்வண்ணம் திரு டி.என்.ராஜரத்தினம் பிள்ளை Fellowship விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், மூத்த நாதஸ்வர வித்வான் கலைமாமணி ஸ்ரீசெம்பனார் கோயில் ராமஸ்வாமி கோவிந்தஸ்வாமி பிள்ளை ராஜண்ணா (S.R.G. ராஜண்ணா) அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

திருவாவடுதுறையைச் சேர்ந்த இவர் சிறுவயதிலேயே திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயரிடம் சங்கீதத்தையும், அம்மாசத்திரம் கண்ணுசாமி பிள்ளையிடம் நாதஸ்வரத்தையும் பயின்றவர்.

இவர் வாசிக்கும் தோடி மற்றும் ஷண்முகப்பிரியா ராகங்களுக்கு இணை இவரேதான். இவரை மிஞ்ச ஒருவராலும் முடியாது. அநேக விருதுகள் பெற்றவர். கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா தபால் – தந்தித் துறை இலாகா, இவரைக் கெளரவிக்கும் பொருட்டு, இவர் உருவம் கொண்ட தபால் தலை ஒன்றை 2020ஆம் ஆண்டு வெளியிட்டது. மங்கள வாத்தியத்தின் பெருமையை நிலை நாட்டியவர்.

ஸ்ரீசெம்பனார் கோவில் நாதஸ்வர வித்வான் ராமஸ்வாமி கோவிந்த ஸ்வாமி பிள்ளை ராஜண்ணா (S.R.G. ராஜண்ணா) செம்பனார்கோவில் நாதஸ்வரக் கலை பரம்பரையைச் சேர்ந்தவர்.

‘லயத்தின் அழகான நுணுக்கங்களை தன்னுள் அடக்கி நாதஸ்வரத்தில் வாசிப்பதென்பது தனித்துவமான மாஸ்டர் கலவை. இது Rakthi மேளம் எனக் கூறப்படுகிறது.’

இத்தகைய பாரம்பரியம் இவர்களுக்கே உரித்தானது. S.R.G. ராஜண்ணா இதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com