நவராத்திரியின் மேன்மையை போற்றும் பல்லவர் காலத்து சிற்பங்கள்!

நவராத்திரி நவ கட்டுரைகள் - 5
Navratri sculpture
Navratri sculpture
Published on

வராத்திரி விழாவின் சிறப்பையும் மகிமையையும் போற்றும் வகையில் பல்வேறு புராணங்களும், இதிகாசங்களும் இருப்பது போலவே, நவராத்திரியை போற்றும்வண்ணம் பல்லவர் காலத்தில் அதிக அளவில் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டு வந்த நவராத்திரியின் வரலாற்றுக்கு இயக்கவியலாக வடிவம் கொடுத்தவர்கள் பல்லவர்கள். அதிலும் குறிப்பாக, மகேந்திரவர்மன் காலத்தில் நவராத்திரியின் சிறப்பைப் போற்றும் வகையில் சிற்பக்கலைகள் அதிகமாக வடிவமைக்கப்பட்டன. அத்தகைய சிற்பக் கலைகளை பற்றியும் அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாபலிபுரத்தில் கோடிக்கால் மண்டபம் அருகில் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட குகைக்கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் உள்ள காளியின் உருவச்சிலை ஒன்று அந்த ஊரிலேயே உள்ள மேடை மேல் மற்ற உருவ சிலைகளுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் இடது கை ஒன்று காணப்படவில்லை, உடைந்து போய் உள்ளது. இந்த சிலைதான் கொற்றவையின் புதுமையான வடிவத்தைக் கொண்ட அருமையான சிற்பம். இதுபோன்ற கொற்றவையின் உருவத்தை நமது நாட்டில் வேறு எங்குமே காண முடியாது. அவ்வளவு ஏன் உலகத்திலே வேறு எங்கும் இதுபோன்ற கொற்றவை (துர்கை ) சிலையைக் காண முடியாது. பல்லவர்கள் காலத்தில் அதிலும் குறிப்பாக மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த சிற்பம் மிகவும் பழைமை வாய்ந்தது. அப்படி இந்த சிற்பத்தின் சிறப்பு என்னவென்றால் பெரும்பாலும் கொற்றவை சிலைகள் அனைத்தும் ஆக்ரோஷமாக அமைக்கப்படுவதே வழக்கும். ஆனால், இங்குள்ள கொற்றவை சிற்பம் வீரம், பெருமிதம், உறுதி, ஆற்றல், வெற்றி முதலிய இயல்புகளை எல்லாம் உள்ளடக்கி மிகவும் சாந்தமாகக் காட்சியளிக்கிறது.

இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகாசன நிலையில் நிமிர்ந்து அமர்ந்து வீரமும் வெற்றியும் கண்களில் விளங்க பெருமிதமும் உறுதியும் வாயின் அமைப்பிலே தோன்ற நடுத்தர வயதுள்ள வீரமங்கை அமர்ந்திருப்பதைப் போல இங்குள்ள கொற்றவை சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அமைக்கப்படும் கொற்றவை சிற்பங்கள் எல்லாம் போரின் இறுதிக் காட்சியில் கொற்றவை ஆக்ரோஷமாக எழுந்தருளி அசுரனை அழிப்பது போன்றே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஒரு சிற்பத்தில் மட்டும்தான் அனைத்து குண நலன்களையும் உள்ளடக்கி அமைதியாக உட்கார்ந்து இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இச்சிற்பத்தில் துணிவு, ஆற்றல், வீரம், ஆவேசம், போன்ற பண்புகளும் பொருந்திய நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூர்த்த மதியும் நிறைந்த விவேகமும் உடைய ஒரு கொற்றவை சிற்பம் இதுவரை எங்கும் செதுக்கப்படவில்லை. பொதுவாக, சிற்பங்களில் ஏதேனும் சிதைவுகள் ஏற்பட்டால் அது வழிபாட்டிற்கு தகாத ஒன்றாகி விடுகிறது. எனவே, இடது கை உடைப்பட்ட இந்த சிற்பத்தை அப்புறப்படுத்திவிட்டு இதே வடிவத்தில் கருக்கிலமர்ந்தாள் சிலை வடிவமைக்கப்பட்டு வைத்து தற்போது வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதுதான் நாம் இப்போது மகாபலிபுரத்தில் பார்க்கக்கூடிய கருக்கில் அமர்ந்தாள் கோயில். இந்த சிலைக்கும் இடது கை உடைக்கப்பட்ட பல்லவர் காலத்திய கொற்றவை சிலைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் பல்லவர் காலத்து கொற்றவை சிலையில் வீரச்சுவை முகத்தில் நன்கு வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சிலையில் அந்த வீரச்சுவையை நம்மால் காண முடியாது. எனவே, மிகவும் பழைமையான கொற்றவை சிற்பங்கள் எல்லாம் பல்லவர் காலத்தில்தான் அதிகமாக வடிவமைக்கப்பட்டன என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இதைப்போல கொற்றவையின் மற்றொரு அவதாரமாகிய மகிஷாசுரமர்த்தினியின் உருவச் சிற்பங்களும் அதிகமாக மகாபலிபுரத்தில் காணப்படுகின்றன. எருமைத் தலைமேல் நிற்பது போல பெரும்பாலும் இத்தகைய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த எருமை தலை என்பது மகிஷாசுரன் என்ற அரக்கனை குறிக்கும். நவராத்திரி விழாவில் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்த அம்பிகை மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்று வெற்றி விழாவில் எருமை தலை உடைய மகிஷாசுர அரக்கனை தனது காலில் இட்டு மிதிப்பது போன்று இச்சிற்போம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட நவராத்திரியின் மேன்மையை சொல்லக்கூடிய பழைமை வாய்ந்த சிற்பக் கலை ஆகும்.

இதேபோன்று செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கபுரம் என்ற ஊரில் உள்ள குகை கோயிலில் நவராத்திரியின் மேன்மையை போற்றும் கொற்றவை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குகை கோயில் தற்போது அரங்கநாதர் கோயில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தக் குகையின் பாறை சுவர்களில் மகிஷாசுரமர்த்தினியின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. தலையில் மகுடமும் காதுகளில் பெரிய பொற்றோடுகளும் அணிந்துள்ள கொற்றவையின் கண்களில் அச்சம் தரும் வீர ஒளி மிளிர்கிறது. மேலும், இங்குள்ள கொற்றவையின் சிற்பமானது ஒரு காலை எருமை தலை மீது வைத்தும் மற்றொரு காலை தரையின் மீது வைத்தும் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் பழைமை வாய்ந்த பல்லவர் காலத்து சிற்பம் ஆகும். இதுபோன்ற அமைப்பு உள்ள கொற்றவையின் உருவம் வேறு எங்கும் இதுவரை காணப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறப்பு சிறுகதை: ரமணி தாத்தாவும், நவராத்திரியும்!
Navratri sculpture

அதேபோன்று, நடுவில் கொற்றவை நின்ற கோலத்தில் இருக்க இருபுறமும் போர் வீரர்கள் உட்கார்ந்த வண்ணம் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இருபுறமும் உட்கார்ந்திருக்கும் இருவரும் போர் வீரர்கள் ஆவர். அன்றைய காலகட்டங்களில் போர் வீரர்கள் கொற்றவைக்கு நவகண்டம் கொடுப்பது வழக்கம். போருக்கும் வெற்றிக்கும் தெய்வமாகிய கொற்றவையை போர் வீரர்களும் வெற்றி வீரர்களும் வழிபட்டு தங்களது உடல் உறுப்புகளை அறுத்து இரத்த காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்குப் பெயர்தான் நவகண்டம் கொடுத்தல். இந்த நவகண்டம் கொடுப்பதைப் பற்றி கலிங்கத்துப்பரணி நூல் விரிவாகக் கூறுகிறது. கொற்றம் என்றால் வெற்றி. அவ்வை என்றால் உயர்ந்தவள். வெற்றியில் உயர்ந்தவள் கொற்றவை என்பதை விளக்கும் வகையிலேயே கொற்றவை என்று பெயர் வந்தது.

இவ்வாறாக பல்லவர்கள் காலத்தில் நவராத்திரியையும், நவராத்திரியின் சிறப்புகளையும் விளக்கும் வகையில் பல்வேறு சிற்பக்கலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் பெண் தெய்வங்களை அதிகமாக வழிபட்டு வந்தார்கள் என்பதையும், அநீதியை எதிர்த்து அழிக்கும் ஆதிசக்தியாக கூர்மையான மதி நுட்பமும்,விவேகமும் நிறைந்த தெய்வங்களாக பெண் தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com