

பெண்களுக்கு மூக்கு (Nosepin) குத்தும் பழக்கத்தை ஒரு சம்பிரதாயமாக பழங்காலந்திலிருந்தே நாம் கடைபிடித்து வருகிறோம். நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த எல்லா பழக்க வழக்கங்களின் பின்னால் நிச்சயமாகவே பலவிதமான அறிவுப் பூர்வமான உண்மையும் இருக்கிறதை நாம் கண் கூடாகவே பார்க்கலாம்.
அப்படி அவர்கள் வகுத்த பலவகையான வழிமுறைகளின் படி தான், பெண்கள் மூக்குத்தி, காலில் கொலுசு, மெட்டி, கைகளில் வளையல் போன்ற ஆபரணங்களை இன்று வரை அணிந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் பெண்களின் அழகிற்காக மட்டுமல்லாம் வேறு சில ஆரோக்கியம் மற்றும் நன்மைகளுக்காகவும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், பெண்கள் மூக்குத்தி அணிவதற்கும் பல விதமான அறிவியல் மற்றும் ஆரோக்கிய ரீதியான காரணங்கள் இருக்கின்றன. இந்த மூக்குத்தியை பொதுவாக பெண்களுக்கு, பருவம் அடைந்த பிறகோ அல்லது திருமணத்திற்கு முன்னதாகவோ, அணிவிப்பது வழக்கம்.
பொதுவாக நம் தென்னிந்தியாவை பொறுத்த வரை பெண்கள் வலது பக்கத்திலும், வட இந்தியாவில் பெண்கள் இடது பக்கத்திலும் இதை அணிகிறார்கள். அவரவர்களுடைய குடும்ப பழக்க வழக்கத்தின் படி தான் மூக்குத்தியை இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ குத்தி கொள்கிறார்கள்.
ஆனால் நம் எல்லோருக்குமே, மனதில் இந்த சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதாவது, எந்த பக்கம் மூக்குத்தி அணிந்தால் நல்ல பலனை அளிக்கும் என்ற கேள்வி எழும்புகிறது. இந்த குழப்பத்திற்கான பதிலை பார்க்கலாமா?
வெள்ளி, தங்கம், வைரம், இரத்தினம் என பல உலோகங்களால் செய்த மூக்குத்தியை பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இன்றைய நாட்களில் கண்ணை கவரும் வகையில் வித விதமான மூக்குத்தியை அணிந்து கொள்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, தங்க மூக்குத்தி தான் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில், தங்கத்திற்கு உடலில் உள்ள வெப்பத்தினை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தி அதிகமாக இருக்கிறது.
பெண்களுக்கு மூக்குத்தி அணிவதால் உண்டாகும் நன்மை:
1. உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியாகும்
மூக்கின் மடல் பகுதியில் துவாரமிடும் போது அதன் வழியாக நரம்பு மண்டலங்களிலுள்ள கெட்ட வாயுக்கள் அகலும். பருவமடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் காணப்படும். மூக்கு குத்தும் போது அவை அகன்று விடும். சளி மற்றும் மூக்கு சம்பந்தமான பாதிப்புக்கள் குறையும்.
2. ஒற்றைத் தலைவலி நீங்கும்
பார்வைக் கோளாறுகள் ஏற்படாதிருக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படாதிருக்கும். அடிக்கடி ஏற்படும் மனத் தடுமாற்றத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சரி, எந்த பக்கம் குத்தினால் நல்லது?
வலது பக்கம் மூக்கு குத்தினால் இடது பக்க மூளையின் இயக்கம் சீராகயிருக்கும். அதேப் போல் இடது பக்கம் மூக்கு குத்தினால் வலது பக்க மூளை சீராகயிருக்கும். இருப்பினும், பெண்களுக்கு இடது பக்கம் மூக்கு குத்துவது தான் நன்மை பயக்கும் என கருதப் படுகிறது. இடது பக்கம் குத்துவதால், மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் வலிகளும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதாம். ஏனெனில், பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இடது பக்க மூக்கோடு தான் தொடர்புடையதாக இருக்கிறது என்பதே சில நிபுணர்களின் கருத்தாகும்.