உடலின் மூன்று தோஷங்களை சீராக்கும் எண்ணெய் குளியல்!

Oil bath
Oil bath
Published on

நாம் மறந்துபோன பழக்கங்களில் எண்ணெய் குளியலும் ஒன்று. தீபாவளி அன்று மட்டும் பலர் எண்ணெய் குளியலை  கடமையே என்று நிறைவேற்றுகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தின்படி எண்ணெய் குளியல் வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான அளவில் இருக்க உதவுகிறது. உடல் உள்ளுறுப்புகளின் சூட்டைத் தணிக்கவும், உடல் உறுப்புகள் நன்கு செயல்படவும் எண்ணெய் குளியல் உதவுகிறது.

உடலில் என்ணெய் தேய்த்துக் குளிப்பதால், சருமத்தின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு 'லிம் ஃபாட்டிக்ஸ்' என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. லிம் ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் பண்பு என்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

தற்போதைய அவசர உலகில், பலருக்கும் அழுத்தம், பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. உடல் வெப்பமடையும்போது மூளையும் வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மேற்கூறியவற்றால் ஏற்படும் நோய்கள் தவிர்க்கப்படும்.

குளியல் முறை: எண்ணெய் தேய்த்து வெகு நேரம் காத்திருக்கக்கூடாது. கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரை, காலை இளம் வெயிலில் நின்ற பிறகு குளிக்கலாம். தலை முதல் உள்ளங்கால் வரை நன்கு பரவலாக எண்ணெயைத் தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள் மூட்டு இருக்கும் இடங்களில் சற்றுப் பொறுமையாக தேய்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும். முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்ச்சியான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். பதிலாக மிளகு ரசம் போன்றவற்றை  சேர்த்துக் கொள்ளலாம்.

உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளிர்ச்சி ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆண்களுக்கு அழகு சேர்க்கும் தாடியின் வரலாறு தெரியுமா?
Oil bath

நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காக பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால் உடல் பழகிவிடும் . மேற்கூறிய தொந்தரவுகள் விலகி விடும்.

எண்ணெய் குளியலின் நன்மைகள்: எண்ணெய் குளியல் முடி உதிர்வைக் குறைக்கும், பார்வை பலப்படும், முதுமையைத் தாமதப்படுத்தும், ஆயுட்காலத்தைக் கூட்டும், சருமத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவும், உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும், உள்ளுறுப்புகள் தங்கள் செயல்களைச் சிறப்பாகச் செய்யும், நல்ல தூக்கத்தைத் தரும், உடலை மென்மையாகவும் நோய் எதிர்ப்பாற்றலுடனும் வைத்திருக்கும்.

ஆண்கள் புதன்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com