பாட்டிகளின் கஜானா சுருக்கு பை பற்றி தெரியுமா?

சுருக்கு பை
சுருக்கு பை

ன்று நாகரிக வளர்ச்சியில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நவீனமாக இருக்கலாம். ஆனால், அக்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில பொருட்களைப் பற்றி படித்தால் நமக்கு ஆச்சரியத்தைத் தரும். அவர்கள் மிக மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள். அதேசமயம் அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நேர்த்தியை கடைப்பிடித்திருக்கிறார்கள். கிராமத்தில் பாட்டிகள் பயன்படுத்தும் சுருக்கு பைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.

கிராமத்து பாட்டிகளின் சேவிங் பேங்க் சுருக்குப் பை. அங்குதான் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி சில்லறை நாணயங்களை சேமித்து வைத்து வாழ்ந்தார்கள். அதனால்தான் பாட்டிகள் அதை பாதுகாப்பாக தங்களின் இடுப்பு பகுதியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.

இடுப்பின் ஓரம் இருக்கும் இடம் தெரியாமல் தொங்கும் சுருக்கு பைகளின் உள்ளே  என்னென்ன இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும். ஒவ்வொரு சுருக்கு பைகளுக்குள்ளும் பொருளோ, பணமோ இருக்கிறதோ இல்லையோ ஆனால், நிச்சயம் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.

கி.மு., கி.பி.யை போல் சுருக்குபைக்கும் காலத்தைப் பிரிக்கலாம். ஆம், சுருக்கு பைகள் ஒவ்வொன்றும் அந்நாளைய நாட்களை நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. சுருக்குபைகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்தக் கயிறு முனைகளில் முக்கோண டிசைன்கள் வைத்து தைத்து  இருப்பார்கள். அதே பையில் ஒரு கயிற்றின் நுனியில் பல் குத்தும் குச்சிகள் இரும்பில் இருக்கும், அதில் பல் குத்தி பல்லிடுக்கில் இருக்கும் வெற்றிலைபாக்கை எடுக்கவும், எல் போன்ற ஷேப்பில் இருப்பதை காது குடையவும் பாட்டிகள் வைத்து இருப்பார்கள்.

கால் கவுலி வெற்றிலை, இரண்டு ரூபாய்க்கு பாக்கு என வாங்கி சுருக்குபையை கர்ப்பவதி போல் வைத்து இருப்பது பாட்டிகளின் தலையாய கடமை. கிராமப்புறங்களில் திருவிழாக்கள் என்றால் பாட்டிகள் உடனே புது புது சுருக்கு பைகளை வாங்க புறப்பட்டு விடுவார்கள். அதுதான் அவர்களுக்கான தீபாவளி போல.

இரண்டு மூன்று பைகளை வாங்கி வைத்துகொண்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு டப்பா, புகையிலை, சில்லறைக்காசு என இஷ்டத்துக்கு அழுத்தி வைத்து விடுவார்கள். சுருக்கு பை கிழிந்த பிறகு இன்னொன்றை மாற்றி அழகு பார்ப்பது பாட்டிகளின் வழக்கம். ஏதாவது ஒரு பாட்டி சுருக்குப்பையை ஒரு பட்டு நூல் இழைய வாங்கிவிட்டால் அவரின் சந்தோஷத்தை அளவிட்டு சொல்லவே முடியாது. சில பாட்டிகளால் இந்த சுருக்கு பையை  கூட வாங்க முடியாமல் போகும் வறுமையும் உண்டு.

இதையும் படியுங்கள்:
நமது மகிழ்ச்சியைப் பறிக்கும் தேவையில்லாத 10 பழக்கங்கள் தெரியுமா?
சுருக்கு பை

பாட்டிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத பொருட்களில் சுருக்கு பை கண்டிப்பாய் இடம்பெறும். ரோட்டோரங்களில் வியாபாரம் செய்யும் எண்ணற்ற பாட்டிகளுக்கு  தங்களின் இடுப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் சுருக்குபைதான் கஜானாவாகின்றன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் வசதி படைத்த வீட்டு பாட்டிகள் தங்களின் நகைகளைக் கூட சுருக்குபையிலேயே வைத்துக்கொள்வதுண்டு.

சிறு பிள்ளைகள் தெருவில் வந்துபோகும் ஐஸ் வண்டியை பார்த்து ஐஸ் கேட்டு அழும் போதெல்லாம் பாட்டியின் சுருக்குபைதான் அவர்களின் அழுகையை தேற்றி ஆறுதல்படுத்த ஆதரவாய் வந்து நிற்கும் அவ்வப்போது அதனுள் பதுங்கியிருக்கும் சில்லறையோடு.

இப்பொழுதும் சுருக்கு பைகள் கிடைக்கின்றன. ஆனால், அவை அந்த பாரம்பரியத்தை இழந்து ஜிகினாவால் மின்னுகிறது. பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால், அக்கால சுருக்கு பைகள் இன்னும் நம் கண் முன்னே நிற்கின்றன என்பதே நிசப்தமான உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com