ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரம் மாமல்லபுரம். இது மஹாபலிபுரம், மல்லை, மகாலிபுரம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. தலைநகராக கோயில் நகரமான காஞ்சிபுரம் விளங்கியது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னர்கள் மாமல்லபுரம் என்ற இந்தப் பகுதியில் துறைமுகம் ஒன்றை நிறுவினார்கள். முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் இத்துறைமுகம் சிறந்து விளங்கியது. நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். அவருடைய பட்டப்பெயரை இந்த துறைமுக நகரத்திற்குச் சூட்டி மாமல்லபுரம் என்று அழைக்கலானார்கள். மாமல்லபுரம் இன்று உலகப்புகழ் பெற்றுத் திகழ முதல் காரணம் பல்லவர்கள் இயற்கையில் இப்பகுதியில் அமைந்த மலைகளைக் குடைந்து குகைக் கோயில்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் என பல அற்புதங்களைக் செய்ததே.
முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் இத்துறைமுக நகரத்தில் குகைக் கோயில்களை அமைத்து சிற்பக்கலையில் புதுமைகள் பல செய்தார். இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தன் தந்தையைத் தொடர்ந்து குன்றுகளைக் குடைந்து குகைக் கோயில்களையும் மலையைச் செதுக்கிக் கோயில்களையும், திறந்தவெளியில் அமைந்த பாறைகளில் புடைப்புச் சிற்பத் தொகுதிகளை அமைத்தும் சாதனை படைத்தார்.
பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் குடைவரைக் கோயில்கள், வெட்டுக் கோயில்கள், பாறைச் சிற்பங்கள், கட்டுமானக் கோயில்கள் என நான்கு வகையான சிற்பங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டினர்.
சிம்மவிஷ்ணு என்பவரின் மகனான முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கி.பி.600 முதல் கி.பி.630 வரை ஆட்சி செய்த பல்லவ மன்னராவார். மகேந்திர வர்ம பல்லவருக்கு மத்தவிலாசன், சித்திரகார புலி, சங்கீரண கதி, சத்ருமல்லன், அவனிபாஜன் போன்ற பட்டப்பெயர்கள் உண்டு. கலை, இலக்கியம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். குடைவரைக் கோயில்களின் முன்னோடியாகவும் இவர் மதிக்கப்படுகிறார். மலைகளை வெட்டி கோயில் அமைப்பதில் இவர் சிறந்து விளங்கினார். இவர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம், சீயமங்கலம், வல்லம், திருக்கழுக்குன்றம், மண்டகப்பட்டு, மாமண்டூர், தளவானுர், சிங்கவரம், மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் முதலிய இடங்களில் மலைகளை வெட்டிக் குடைந்து கோயில்களை அமைத்தார். இவர் மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இயற்றியுள்ளார்.
மகேந்திரவர்ம பல்லவனுக்குப் பின்னர் அவருடைய மகனான நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) அரியணை ஏறினார். இவருடைய ஆட்சிக்காலத்தில் பல்லவ ராஜ்ஜியமானது வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே மதுரை வரை அமைந்திருந்தது. இவர் மல்யுத்தக் கலையில் சிறந்து விளங்கி மாமல்லன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். பல்லவர் காலத்தில் உருவாக்கிய துறைமுக நகரத்திற்கு இவருடைய சிறப்புப் பெயர் சூட்டப்பட்டு மாமல்லபுரம் என்று அழைக்கப்பட்டது. சிற்பக்கலையில் இவரும் மிகவும் ஈடுபாடு உடையவராகத் திகழ்ந்தார். நரசிம்மவர்ம பல்லவருக்கு மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன், நயநாங்குரன் என பல்வேறு பட்டப் பெயர்கள் உள்ளன.
இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நரசிம்மன் எனும் இராஜசிம்மன் மற்றும் பல்லவப் பேரரசின் கடைசி மன்னரான அபராஜிதவர்ம பல்லவன் வரை இந்த அற்புதப் பணியினைத் தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்கள். அபராஜிதவர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவப் பேரரசின் கடைசி மன்னர் ஆவார். இவர் சோழர்களால் போரில் வீழ்த்தப்பட்டார். இவரே பல்லவப் பேரரசின் கடைசி மன்னர் ஆவார். கி.பி.901ல் பல்லவர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது. பல்லவ மன்னர்கள் உருவாக்கிய குடைவரைகளும் சிற்பத்தொகுதிகளும் இன்று வரை நம் மனதில் நிலைத்து நின்று வியப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.