பந்தக்கால் நடும் முறையும்; காரணமும்!

பந்தக்கால் நடும் முறையும்; காரணமும்!

‘கல்யாணம் நிச்சயமாயிடுச்சி... முகூர்த்த தேதியும் நெருங்குது. அடுத்து, கல்யாண வேலைகளைப் பார்க்க வேண்டியதுதானே? ஒரு நல்ல நாளாப் பார்த்து முதலில் பந்தக்கால் நட்டு கல்யாண வேலைகளைத் துவங்கணும்.’ திருமணம் நடைபெற உள்ள வீடுகளில் இந்த டயலாக்கை நிச்சயம் கேட்டிருப்போம். ஒரு திருமண விழாவின் முதல் துவக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிதான் முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவது. இந்த பந்தக்கால் எதற்காக நட வேண்டும்? நடும் முறைகள் என்ன? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது? இதோ சிறு விளக்கம்.

இந்தப் பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து திருமணத்துக்கு முன்பு நடைபெறும். இந்தச் சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்தப் பந்தக்கால் நடுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகும். எல்லா சமூகத்தினரும் கடைப்பிடிக்கும் பழக்கங்களில் இது முக்கியமானதாகிறது.

பந்தக்கால் நடும் முறை: கல்யாண முருங்கை மரத்தில் உள்ள ஒரு கிளையை வெட்டி அதிலுள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.

உற்றார் உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து அதற்கு பூக்கள் சாத்தி, தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். அதை நடும் இடத்தில் உள்ள குழிக்குள் நவதானியத்தோடு நீர் மற்றும் பால் ஊற்றி மரத்துக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். இதுதான் முகூர்த்தக்கால் நடும் முறை.

இந்த பந்தக்காலை நட்ட பின், பெண் மற்றும் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்த விதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுதல் கூடாது என்பது நியதி.

பந்தக்கால் நடும் முறை வந்தது எப்படி?: அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரின் திருமணத்துக்கும் அரசரால் செல்ல இயலாது. எனவே, தன் சார்பாக அவர் ஆணைப்படி ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பதே பின்னாளில் மருவி, அரசாணைக்கோல் ஆகிவிட்டது என்பது ஒரு தகவல். அன்று அரசரின் ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது என்பதாக மகிழ்வார்கள். ஆகவே, பந்தக்கால் எனும் கல்யாண பந்தலில் கல்யாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதனை வழிபடுவது வழக்கமாகி இருக்கலாம்.

என்றாலும், திருமணம் சிறப்பாக நடைபெற இந்தப் பிரபஞ்சத்தின் உதவியும் வேண்டும் என்பதாலும் பஞ்ச பூதங்களுக்கு மரியாதை செய்யவும் இந்த விழா நடைபெறுவதாகக் கருதி மகிழ்வோமே. காரணம் எதுவாயினும் விழாக்களில் கூடும் உறவுகளின் உற்சாகம் சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com