கலாசார பண்டிகையாகக் கொண்டாடப்படும் பெட்ட பதுகம்மா மலர் திருவிழா!

Bathukamma flower festival
Bathukamma flower festival
Published on

துகம்மா (Bathukamma) என்பது தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் பெண்களால் விமர்சையாகக் கொண்டாடப்படும் மலர் திருவிழாவாகும். மகாளய அமாவாசையிலிருந்து ஒன்பது நாட்கள் துர்காஷ்டமி வரை தசராவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கொண்டாடப்படும் விழாவாகும். இந்த மலர் திருவிழாவைக் காண பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து கூடுவார்கள்.

தெலங்கானாவின் கலாசார உணர்வை பிரதிபலிக்கும் பதுகம்மா திருவிழாவுக்கு பின்னால் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சோழ மன்னன் 'தர்மங்கதா' மற்றும் 'சத்யவதி' ஆகியோரின் மகளாக பதுகம்மா பிறந்ததாகவும், போர்க்களத்தில் அவர்களுடைய 100 மகன்களை இழந்ததால் தங்கள் வீட்டில் லட்சுமி தேவியே குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.

அரச மாளிகையில் லட்சுமி தேவி பிறந்ததும் அனைத்து முனிவர்களும் அவளை, ‘பதுகம்மா’ என்று ஆசீர்வதித்தனர். பதுகம்மா என்றால் ‘வாழ வைக்கும் தாய்’ என்று பொருள். வரலாற்று ரீதியாக பதுகம்மா என்பது ‘வாழ்க்கையின் திருவிழா’ என்று பொருள். பெண்கள் பாரம்பரிய புடைவைகள், அணிகலன்கள் அணிந்து அதற்குண்டான சிறப்பு பாடல்களைப் பாடி இந்த திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

சிறிய மலர்மலை உருவாக்கல்: ஒரு மூங்கில் தட்டில் பல வண்ணங்களில் உள்ள பூக்களை ஒன்றின் மேல் ஒன்றாக கோபுரம் போல் நடுவில் இலைகளுடன் அடுக்குவார்கள். ஆவாரம் பூ, கோழிக் கொண்டை, சாமந்தி, அல்லி, டாலியா பூக்கள், தாமரைப்பூ, பரங்கிப்பூ போன்ற பலவகையான பூக்கள், இலைகளுடன் 7அல்லது 9 வரிசை கோபுரம் போல் அடுக்குவார்கள். அடுக்கின் மேல் மஞ்சள் பொடியில் தண்ணீர் கலந்து மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல் செய்து அதற்கு குங்குமம் வைத்து ‘கௌரம்மா’, ‘பதுகம்மா’ என்று அழைக்கிறார்கள். இந்த சிறிய மலர்  மலையே பதுகம்மா தேவியாக வணங்கப்படுகிறது.

Bathukamma flower festival
Bathukamma flower festival

மாலையில் இந்த பூத்தட்டை வீட்டின் முன்பு வைத்து அதனைச் சுற்றி பாடல்கள் பாடி கும்மியடிப்பதுடன் ஒவ்வொரு தெருமுனையிலும் கூடி பூத்தட்டுகளை வட்டமாக வைத்து பாடல்கள் பாடி கும்மியடிப்பார்கள். பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வைத்து கும்மி அடித்து பாடல் பாடி ஆற்றில் விடுவார்கள். சிலர் அந்தப் பூத்தட்டின் மேல் சிறு விளக்குகளை ஏற்றி வைத்து இருப்பார்கள். அந்தி சாயும் வேளையில் அழகான காட்சியாக மிகவும் ரம்யமாக இருக்கும். அந்த நீர்நிலையில் தண்ணீரே தெரியாத அளவுக்கு பூக்கள் நிறைந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
'ஹரா ஹச்சி பூ' தியரி என்றால் என்னவென்று தெரியுமா?
Bathukamma flower festival

நீர்நிலையில் கரைத்தல்: திருவிழாவின் கடைசி நாள் பெட்ட பதுகம்மா அல்லது சத்துல பதுகம்மா என அழைக்கப்படுகிறது. அன்று நீரில் கரைப்பதற்கு முன்பு மஞ்சளால் செய்த கௌரி தேவியின் மஞ்சளை பிரசாதமாக அனைவரும் எடுத்துக் கொள்வதுடன் ஒவ்வொருவரும் அருகில் உள்ளவர்களுக்கு குங்குமம் வைத்து சந்தோஷமாக இனிப்புகளை வழங்குவார்கள். பூக்களின் பண்டிகையான இதனை தெலங்கானா மாநிலம் அரசு பண்டிகையாக அறிவித்து கொண்டாடி வருகிறது. பதுகம்மாவில் பயன்படுத்தப்படும் பூக்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை சேர்க்கப்படும் ஏரி, குளங்கள் தண்ணீரை சுத்தப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலையும் சிறந்ததாக்கும்.

Bathukamma flower festival
Bathukamma flower festival

பதுகம்மா ஏன் கொண்டாடப்படுகிறது?

பதுக்கம்மா திருவிழா கௌரி தேவியை போற்றவும், செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக அவளது ஆசீர்வாதங்களைப் பெறவும், வசந்த காலத்தின் வருகையையும், இயற்கையின் மிகுதியையும் நினைவு கூற கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒன்பது நாட்களும் விதவிதமான நைவேத்தியங்கள் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சோளம், பஜ்ரா, வேர்க்கடலை, எள், கோதுமை, அரிசி, முந்திரி பருப்பு, வெல்லம், பால் போன்ற பொருட்கள் கொண்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. கடைசி நாளான துர்காஷ்டமி அன்று ஐந்து வகையான உணவுகள் தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், எள் சாதம் என  செய்யப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

இந்த விழா 9 நாட்கள் கொண்டாடப்பட்டு துர்காஷ்டமி அன்று நிறைவடைகிறது. ஒவ்வொரு நாள்  கொண்டாட்டங்களின்போது நடன நிகழ்ச்சிகள், இசை, நாடகங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் கூடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com