
பன்ட் துப்பாக்கி என்பது 19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வணிகரீதியான அறுவடை நிலத்தில் பறவைகள், குறிப்பாக நீர்ப்பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மற்றும் வேட்டையாடலில் பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய துப்பாக்கி வகையாகும். இந்த துப்பாக்கி, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பண்ட் துப்பாக்கிகள் 2 அங்குலங்கத்திற்கும் (51 மிமீ) அதிகமான துளை விட்டம் கொண்டவை மற்றும் ஒரு நேரத்தில் ஒரு பவுண்டு (0.45 கிலோ ) ஷாட் சுடும். அதாவது ஒற்றை சுடுதலில் நீரின் மேற்பரப்பில் தங்கியிருக்கும் 50 முதல் 90க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளைக் கொல்லும் திறன் கொண்டது.
13 அடி நீளம் வரை இருந்த இந்த பெரிய ஷாட்கன்கள் ஒரு தனிநபரால் தோளில் இருந்து சுடவோ அல்லது பெரும்பாலும் தனியாக எடுத்துச் செல்லவோ முடியாத அளவுக்குப் பெரியவை மற்றும் கனமானவை. ஆனால் பீரங்கித் துண்டுகளைப் போலல்லாமல், பன்ட் துப்பாக்கிகளை ஒரு மவுண்டிலிருந்து ஒரு நபரால் குறிவைத்து சுட முடியும்.
வேட்டையாடுபவர்கள், பறவைகள் மந்தையில் இருந்து தப்பிப்பதை தவிர்க்க, கம்பங்கள் அல்லது துடுப்புகளைப் பயன்படுத்தி பன்ட் துப்பாக்கிகளை மறைத்து வைப்பார்கள்.
வணிக வேட்டை மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அமெரிக்காவின் பல பகுதிகளில் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது. 1860களின் பிற்பகுதியில், பெரும்பாலான மாநிலங்கள் வணிக வேட்டைக்கு 2 கேஜ் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்தன.
அதுமட்டுமின்றி பல பறவை இனங்கள் அழிக்கப்பட்டதால், அமெரிக்கா, கனடா மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகியவை கூட்டாக 1918-ம் ஆண்டு புலம்பெயர்ந்த பறவை ஒப்பந்தச் சட்டத்தை இயற்றின. இதன் விளைவாக, குறிப்பிட்ட பறவை இனங்களை வணிக ரீதியாக வேட்டையாடுவதை முடிவுக்குக் கொண்டு வந்தன. இதன் விளைவாக, பன்ட் துப்பாக்கிகளின் தேவை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.
1995-ம் ஆண்டில், யுனைடெட் கிங்டமில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு 50க்கும் குறைவான செயல்பாட்டு 2 கேஜ் ஷாட்கன்கள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவில் பன்ட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதும் வைத்திருப்பதும் இன்னும் சட்டப்பூர்வமானது என்றாலும், புலம்பெயர்ந்த நீர்ப்பறவை வேட்டையில் அவற்றைப் பயன்படுத்துவதை கூட்டாட்சி விதிமுறைகள் தடை செய்கின்றன.
1897-ல் விக்டோரியா மகாராணியின் வைர விழாவில் இருந்து, இங்கிலாந்தின் கௌபிட்டில் உள்ள கௌபிட் வாஷ் மீது ஒவ்வொரு முடிசூட்டு விழா மற்றும் ஜூபிலியிலும் ஒரு பன்ட் துப்பாக்கி சல்யூட் நடத்தப்படுவது குறிப்பிட்டத்தக்கது. இரண்டாம் எலிசபெத்தின் வைர விழாவின் போது, 21 பன்ட் துப்பாக்கிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சுடப்பட்டன.