

வானொலி ஒலிபரப்பு கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒருவர் புதிதாக வானொலி பெட்டி வாங்க கடைக்கு சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி "இந்த வானொலி பெட்டியில் இலங்கை வானொலி வருமா?" என்பது தான். அந்தளவிற்கு இலங்கை வானொலி புகழ்பெற்றது. ஆசியாவிலேயே பழமையான வானொலி சேவையான இலங்கை வானொலி (Radio Ceylon history) (தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - SLBC), தனது 100-வது ஆண்டு மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பிபிசி (BBC) தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில், உலகின் இரண்டாவது வானொலி ஒலிபரப்பு சேவையாக 1925 டிசம்பர் 16 அன்று இலங்கையில் தனது வானொலி சேவையை முதன்முதலில் சிலோன் ரேடியோ எனும் பெயரில் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பெருமையை இது பெற்றுள்ளது. இலங்கை வானொலியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பதிவு செய்யப்பட்ட பாடல்களின் நுாலகமே உள்ளது. இதில் நம் நாட்டில் கூட கிடைக்காத அரிய ஹிந்தி பாடல்களும், உலகத் தலைவர்களின் குரல் பதிவுகளும் தனித்துவமான சேகரிப்புகளாக உள்ளன.
1922 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார். இவர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பயை " வயர்லெஸ் கிளப்"எனும் பெயரில் கொழும்பின், மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து 1924 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அப்போதைய இலங்கை கவர்னர் சர் வில்லியம் ஹென்றி ஆற்றிய உரையை ஒலிபரப்பினார்.
சோதனை வெற்றியடையவே, அடுத்த ஆண்டு பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது இலங்கை வானொலி என்பது "ரேடியோ SEAC (சவுத் ஈஸ்ட் ஆசியா கமெண்ட்)" எனும் பெயரில் மவுண்ட் பேட்டன் தலைமையில் இயங்கியது. அப்போது போர் பற்றிய தகவல்களுக்கு முன்னுரிமை கொடுத்தது. உலகப்போர் முடிவுக்கு வந்ததும் இலங்கை சுதந்திரம் பெற்றது. அதனால் இலங்கை அரசிடம் இலங்கை வானொலி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அது 1949 ம் ஆண்டு 'சிலோன் ரேடியோ 'என்று பெயரிட்டு இயங்கியது . அப்போது அதன் ஒலிபரப்பு மூன்று வகையானதாக இருந்தது . அவை 'ஆல் ஆசியா ', நேஷனல், வர்த்தக சேவை. இது, ஆசியாவின் முதல் வணிக குறுகிய அலை வானொலி நிலையம். இந்த வானொலி சேவை, 1949 அக்., 1ல், 'ரேடியோ சிலோன்' என மறுசீரமைக்கப்பட்டது.
1951 ம் ஆண்டு இலங்கை வானொலி தமிழ் வர்த்தக ஒலிபரப்பை தொடங்கியது. இதற்கு விதை போட்டவர் எஸ்.நடராசா.1953 ம் ஆண்டு தனிப்பட்ட ஒலிபரப்பை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் தொடங்கியது. தொடர்ந்து, 1967 ஜன., 5ல், 'இலங்கை ஒலிபரப்பு கூட்டமைப்பு' என, பெயர் மாற்றப்பட்டது.
1952 ம் ஆண்டு பி.வி.கேஸ்கர் எனும் மத்திய அமைச்சர் திரைப்பட பாடல்களை ஆல் இந்திய ரேடியோவில் ஒலி பரப்ப தடை விதித்தார். அந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட இலங்கை வானொலி, வர்த்தக சேவையின் மூலம் ஹிந்தி மற்றும் தமிழ் சினிமா பாடல்களை தடையின்றி ஒலிபரப்பி கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முன்பே இலங்கை வானொலி ஒலிபரப்பியது.
இலங்கை வானொலியில், மறைந்த இந்திய வானொலி அறிவிப்பாளர் அமீன் சயானி தொகுத்து வழங்கிய, 'பினாகா கீத்மாலா' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். வசீகரக் குரலுக்கு சொந்தக்காரரான அவர், 1952 - 1988 வரை அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அன்றய கால கட்டத்தில் எந்தப் பாடல் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.
இலங்கை தமிழில் வர்த்தக ஒலிபரப்பை சிற்றலையில் ஒலிபரப்பிய அதன் துல்லியமான ஒலி பரப்பு ஆசியா முழுவதும் கேட்டது. தமிழகத்தின் கடைக்கோடி கன்னியாகுமரியில் கூட எந்த விதமான இரைச்சல் இல்லாமல் தெளிவாக கேட்டது. ஒரு பரீட்சார்த்த சோதனையில் அந்த ஒலிபரப்பு வட அமெரிக்கா வரை கேட்டதாக கண்டறியப்பட்டது.
50 -70-களில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 'ரேடியோ சிலோன்' ஈர்க்காத காதுகளே இல்லை எனலாம். எஸ்.பி.மயில்வாகனம், ராஜகுரு சோனாதிபதி, பாரா ராஜசிங்கம், சாரா இம்மானுவேல், விசாலாட்சி ஹமீது, பி.ஹெச். அப்துல் ஹமீது, கே.எஸ். ராஜா போன்ற புகழ்பெற்ற அறிவிப்பாளர்களின் குரல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.
1972 ம் ஆண்டு இலங்கை வானொலி "இலங்கை ஒலிபரப்பு ஸ்தானம்"என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு இலங்கை வானொலியில் பாப் பாடல்கள், ஜாஸ் இசை, விநாடி வினா நிகழ்ச்சி, பெளத்த மதம், கிறித்தவ, இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. தற்போது நுாற்றாண்டை நிறைவு செய்துள்ள இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சேவைகளை வழங்கி வருகிறது.