கலாசார பண்பாட்டு நிகழ்வாகக் கொண்டாடப்படும் ராம்லீலா திருவிழா!

Ram Leela
Ram Leela
Published on

திருவிழா என்பது மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆன்மிக கலாசார நிகழ்வாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட திருவிழாக்கள் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளன. தற்போது நவராத்திரி விழா நாட்டின் பல பகுதிகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘ராம்லீலா’ என்ற பிரபலமான திருவிழா வடநாட்டில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ராம்லீலா விழா நவராத்திரிக்கு மறுநாளான விஜயதசமி அன்று மக்கள் முன்னிலையில் நடத்தப்படும் இராமாயண நாடக நிகழ்வாகும். துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ் எனும் இராமாயண காவியத்தை நவராத்திரி விழாவின்போது மக்கள் முன்னிலையில் நாடகமாக நடத்துவர். ராம்லீலா என்பது ராமபிரானின் ஆரம்பகால வரலாற்றில் தொடங்கி ராமபிரானின் குழந்தைப் பருவம், ராமர் சீதை தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் இராவண யுத்தம் வரை தெளிவாக சித்தரிக்கிறது. அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையில் நடைபெறும் போரின் இறுதியில் அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநிறுத்தப்படுவதை நினைவு கூறும் விதமாக விஜயதசமி அன்று இரவு இந்த விழா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புதுதில்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்த விழா வெகுசிறப்பாக பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் முதலானோரின் பிரம்மாண்டமான உருவ பொம்மைகளை நிறுத்தி வைத்து இராமர் வேடமிட்ட கலைஞர் அம்பினை எய்து எரிப்பதோடு இந்த விழா முடிவடையும். இந்த உருவ பொம்மைகள் ஒவ்வொன்றும் ஐம்பது அடி உயரத்திற்கு மேல் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த பொம்மைகள் பட்டாசுகளால் சுற்றப்படுகின்றன. சூரியன் மறையும் வேளையில் தீமையின் அடையாளமாகக் கருதப்படும் இந்த உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இந்தக் காட்சியானது கூட்டத்தினரின் ஆரவாரத்துடன் இரவு வானத்தை பட்டாசுகளின் ஒளியால் ஒளிரச் செய்யும் வண்ணமயமான காட்சியாக அமையும்.

ராம்லீலா விழாவானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றாலும் வாரணாசியில் இந்த விழா மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. வாரணாசியின் மிக முக்கியமான திருவிழாக்களில் ராம்லீலாவும் ஒன்றாகும். காசி மன்னர் ராம்லீலா ஊர்வலத்துக்குத் தலைமையேற்று யானையில் வலம் வந்து வாரணாசியில் உள்ள ராம்நகரில் ராம்லீலா விழாவினைத் தொடங்கி வைப்பார். ராம்நகரில் ராம்லீலா விழாவானது ஒரு மாத காலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ram Leela
Ram Leela

வாரணாசியில் ராம்லீலா விழாவின் இறுதி நாளன்று இராமபிரான் வேடமிட்டவர் ராவணன் வேடமிட்ட கலைஞரை அம்பெய்து அழிப்பது போல அமையும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஜா உதித் நாராயண் சிங் என்பவரால் வாரணாசி ராம்நகரில் ராம்லீலா விழா தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவினைக் காண ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் ராம்நகருக்கு வருவது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
தூத்துக்குடி மக்ரூன் தோன்றிய வரலாறு அறிவோம்!
Ram Leela

புதுதில்லி, வாரணாசி மட்டுமின்றி அயோத்தி, பிருந்தாவன், மதுரா, சத்னா, அல்மோரா, மதுபனி முதலான நகரங்களிலும் ஆண்டுதோறும் ராம்லீலா விழா கோலாகலமாக நடைபெறுகிறது. ராம்லீலா மேளா 1901ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷாவில் கொண்டாடப்படுகிறது. மேலும், உத்தரகண்ட் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ராம்லீலா விழாவானது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாட மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கலாசார நிகழ்வாகக் கருதப்படுகிறது.

யுனெஸ்கோ அமைப்பு 2008ம் ஆண்டு ராம்லீலா விழாவினை பண்பாட்டு நிகழ்வாக அங்கீகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com