இராமநாதபுரம் இராமலிங்க விலாசமும்; ஓவியங்களும்!

இராமநாதபுரம் இராமலிங்க விலாசமும்; ஓவியங்களும்!

ராமநாதபுரத்துக்குச் செல்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடம் இராமலிங்க விலாசம் அரண்மனை. இராமநாதபுரம் பகுதியை கி.பி.1605ம் ஆண்டு முதல் ஆட்சி செய்த சேதுபதி மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையே இராமலிங்கவிலாச அரண்மனையாகும்.  அரண்மனையின் நடுவில் உள்ள மாளிகையே இராமலிங்க விலாசம் ஆகும்.

மதுரை நாயக்க மன்னரான முத்துக்கிருஷ்ணப்ப மறவர் நாட்டின் பொறுப்பினை சடைக்கத் தேவர் என்பவரிடம் ஒப்படைத்தார். இராமேஸ்வரம் பகுதி வரை மறவர் நாட்டு மன்னர்கள் ஆண்டனர். சேது என்றழைக்கப்பட்ட இராமேஸ்வரத்தைக் காப்பது இவர்களுடைய கடமைகளுள் ஒன்றாக இருந்தது. இதனால் இவர்களை, ‘சேது காத்த தேவர்’ என்று அழைத்தனர்.   திருமலை நாயக்கருக்கு இரகுநாத சேதுபதி உறுதுணையாக இருந்தார். எனவே, சேதுபதிக்கு, ‘நாயக்கர், திருமலை’ என்ற பட்டத்தைக் கொடுத்தார். தங்கத்தால் ஆன இராஜஇராஜேஸ்வரி அம்மன் விக்கிரகத்தையும் பரிசாகத் தந்தார். இராஜஇராஜேஸ்வரி அம்மனே சேதுபதி மன்னர்களின் குலதெய்வமாகும். அரண்மனை வளாகத்துக்குள் ஒரு கோயில் அமைந்துள்ளது. இராமலிங்க விலாசத்தில் நவராத்திரி விழாவானது மிக முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சேதுபதி மன்னர்களுள் கி.பி.1674 முதல் கி.பி.1710 வரை ஆட்சி நடத்திய கிழவன் சேதுபதி காலத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இராமநாதபுரம் கோட்டை ஒரே ஒரு தரை வாயிலுடன் செவ்வக வடிவத்தில் 27 அடி உயரமும், 5 அடி அகலமும், சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுடன் கற்சுவர்களால் அமைக்கப்பட்டது. இக்கோட்டையினுள் இராமலிங்க விலாசம் அரண்மனை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும், தெற்கு வடக்காக 65 அடி அகலமும் கொண்டு செவ்வக வடிவத்தில் 12 அடி உயரமான மேடையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த அரண்மனையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் ஒரே மாதிரியான யாளி கற்சிற்பங்கள் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் உள்ள மகா மண்டபம் 24 உயரமான தூண்களாலும் அதைத் தொடர்ந்து தரைத்தளத்திலிருந்து 4 அடி உயரமான மேடையில் 16 தூண்களுடன் அர்த்த மண்டபம் போன்ற இடைக்கட்டு அமைப்பும், அதைத் தொடர்ந்து கருவறை போன்று அமைந்துள்ள விசாலமான அறையானது கருங்கல் வாசலுடன் அமைந்துள்ளது. இராமர் பீடம் என்று தற்போது அழைக்கப்படும் இக்கருவறை மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு மண்டபமும் அதற்கு மேலாக மன்னரும் இராணியும் நிலாக்கால இரவுகளைக் கண்டுகளிக்க மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இராமலிங்க விலாச ஓவியங்கள்: கி.பி.1725ல் ஆண்ட முத்து விஜய ரகுநாத சேதுபதி இலக்கியத்திலும் கலையிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். இராமலிங்க விலாசத்தில் உள்ள ஓவியங்கள் இவருடைய காலத்திலேயே தீட்டப்பட்டுள்ளன. இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையில் சேதுபதி மன்னர்களின் வாழ்க்கை முறை, சேதுபதி மன்னர்களின் ஐரோப்பியத் தொடர்புகள் முதலானவற்றை வெளிப்படுத்தும் பல அரிய ஓவியங்கள் இந்த அரண்னைக்குள் தீட்டப்பட்டுள்ளன. மேலும், இராமாயணத்தில் பாலகாண்ட பகுதி, ஸ்ரீமத் பாகவதக் கதைகள் மற்றும் சைவ, வைணவ கடவுளர் ஓவியங்கள், சேதுபதி மன்னர்களின் அரசியல் மற்றும் அகவாழ்வு நிகழ்வுகள் ஆகியன ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.  இதில் இராமாயண ஓவியம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

கி.பி.17ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியத் தொகுதியில் தெலுங்கு இராமாயணம் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதில் தெலுங்கிலும் தமிழிலும் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் இவ்வோவியங்களில் இடம் பெற்றுள்ளன. ஓவியம் வரையப்பட்டுள்ள முறையில் இயக்க உத்திமுறை காணப்படுகிறது. இந்த உத்தி முறை பிற இராமாயண ஓவியங்களிலிருந்து இராமலிங்க விலாசம் அரண்மணை ஓவியத்தைத் தனித்துவம் மிக்கதாக உணரச்செய்கிறது.

இரகுநாத சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் நடந்த போர், மதுரை நாயக்கர் சேதுபதிக்கு இரத்தின பட்டாபிஷேகம் செய்தல், அவரை மேலை நாட்டவர் வந்து சந்தித்தல் முதலான நிகழ்ச்சிகளும் இந்த அரண்மனையில் ஓவியங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேல் மாடியில் உள்ள ஓவியங்களில் சேதுபதி இசை, நடனத்தை கண்டு களிப்பதும் மற்றும் அவருடைய அகவாழ்வின் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன.

அரண்மனைக்குள் இரும்பினால் ஆன வேல், கத்தி, குறுவாள், துப்பாக்கி மற்றும் வளரி போன்ற போர்க்கருவிகளும், அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேய தளபதி ஜாக்சன் துரை இங்குதான் கைது செய்ய முயன்றான். கட்டபொம்மன், கர்னல் கிளார்க் என்பவனை வீழ்த்தி வெற்றியோடு வெளியேறிய இடமும் இதுவாகும்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இந்த அரண்மனையைப் பாதுகாத்து வருகிறது. இராமநாதபுரம் நகரின் மத்தியில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரையிலும் இந்த அரண்மனையினை பொதுமக்கள் பார்வையிடலாம். பிரதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com