வாரணாசிக்கு அருகில் அமைந்துள்ள ராம்நகர் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிறந்த கோட்டை ராம்நகர் கோட்டை ஆகும். இக்கோட்டை கங்கை நதியின் கிழக்குக் கரையில் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராம்நகர் கோட்டையானது காசி நரேஷ் என அழைக்கப்படும் வாரணாசியின் பரம்பரை ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டது. அக்காலத்தில் இக்கோட்டையில் இருந்துதான் மகாராஜாக்கள் பனாரஸை ஆட்சி செய்திருக்கிறார்கள். இக்கோட்டை கி.பி.1750ம் ஆண்டில் காசி நரேஷ் மகாராஜா பல்வந்த் சிங் என்பவரால் முகலாய பாணியில் சிவப்பு மணல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. முகலாய கட்டடக் கலைக்கே உரிய குவிமாடங்களும் மினாரெட்டுகளும் அமைந்துள்ளன. இக்கோட்டையில் ஒரு பகுதியில் தற்போதைய மகாராஜா வசிக்கிறார்.
கோட்டை நுழைவாயிலில் இரண்டு பீரங்கிகள் காட்சி தருகின்றன. ராம்நகர் கோட்டையினுள் ஒரு பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சரஸ்வதி பவன் என்று பெயர். இந்த அருங்காட்சியகம் கி.பி.1964ம் ஆண்டில் மகாராஜா காசி நரேஷ் விபூதி நரேன் சிங் என்பவரால் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தினுள் மகாராஜாக்கள் பயன்படுத்திய பழைய காலத்துக் கார்கள், பல்லக்குகள், விதவிதமான துப்பாக்கிகள், அக்காலத்திய மன்னர்கள் உபயோகப்படுத்திய உடைகள், போர் வாள்கள், பட்டு ஆடைகள் யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராம்நகர் கோட்டையில் தர்பார் மண்டபம் அமைந்துள்ளது. கோட்டையினுள் தரம் காரி (Dharam Ghari) என கடிகாரம் ஒன்று உள்ளது. இந்த கடிகாரம் கி.பி.1852ம் ஆண்டில் அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய வானியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. இந்த கடிகாரமானது நேரம், நாள், மாதம் மற்றும் வருடங்கள் மட்டுமில்லாமல் சூரியன் சந்திரன் மற்றும் பிற கிரகங்களின் வானியல் விவரங்களையும் காட்டக்கூடிய நுட்பமான கடிகாரமாகும். அக்காலத்தின் பொறியியல் அற்புதமாக இந்தக் கடிகாரம் கருதப்படுகிறது.
கோட்டைக்குள் வேதவியாசர் கோயில் மற்றும் தெற்கு திசை நோக்கிய முகி ஹனுமன் கோயிலும் அமைந்துள்ளன. கோட்டைக்குள் கங்கா காட் என்ற பகுதியின் வழியாகச் சென்றால் கோட்டையை ஒட்டி அமைந்துள்ள கங்கை நதியைக் காணலாம்.
ராம்நகர் கோட்டையில் ராம்லீலா மைதானத்தில் ஆண்டுதோறும் ராம்லீலா உத்ஸவம் ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படுகிறது. ராமபிரான் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடக நிகழ்ச்சி முதலான நிகழ்வுகள் இந்த உத்ஸவத்தில் நடத்தப்படும். இந்த மாதத்தில் கோட்டை மிகவும் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். நவராத்திரி விழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.
தற்போது மகாராஜா குடும்பத்தினர் இக்கோட்டையின் ஒரு பகுதியில் வசிக்கிறார்கள். இதைத்தவிர, பிற பகுதிகளைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மகாராஜா கோட்டையில் வசிக்கும்போது கொடி உயர்த்தப்படுவது மரபாக உள்ளது.
வாரணாசியிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோட்டை அமைந்துள்ளது. வாரணாசியிலிருந்து ஆட்டோவில் பயணித்து இக்கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம். வாரணாசியிலிருந்து அழைத்து வந்து நம்மை கோட்டையின் வாசலில் விட்டுவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் வெளியில் காத்திருந்து மீண்டும் வாரணாசிக்கு அழைத்து வந்து விடுகிறார்கள். இதற்கு கட்டணமாக 350 ரூபாய் வாங்குகிறார்கள். ராம்நகர் கோட்டைனை தினமும் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை பார்வையிடலாம். அருங்காட்சியகத்தைப் பார்வையிட கட்டணம் உண்டு.