டச்சுக் கட்டடக் கலையின் அடையாளத்தை பறைசாற்றும் சதுரங்கப்பட்டனம்!

டச்சுக் கோட்டை
டச்சுக் கோட்டை

சென்னைக்கு மிக அருகில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோட்டை அமைந்திருப்பது பலரும் அறியாத ஒரு தகவல். பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்த மாமல்லபுரத்திலிருந்து சரியாக பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை நகரமான சதுரங்கப்பட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ளது புகழ் பெற்ற டச்சுக் கோட்டை. இந்த ஊரினை டச்சுக்காரர்கள் சுருக்கமாக சட்ராஸ் என்று அழைக்க, அந்தப் பெயரே தற்போது வரை நீடிக்கிறது. பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் இது துணை துறைமுகப்பட்டினமாக விளங்கியது.

கி.பி.1359ம் ஆண்டின் கல்வெட்டின்படி இந்த ஊர் ராஜநாராயணன் பட்டினம் என்றும் பின்னர் விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில் சம்பூவராயர்பட்டினம் என்றழைக்கப்பட்டு பின்னர் ராமராயரின் ஆளுகையின் கீழ் வந்தபோது இவ்வூர் சதிரவாசகன்பட்டினம் என்று மாற்றமடைந்துள்ளது. இந்த சதிரவாசகன்பட்டினம் என்பதுதான் பிற்காலத்தில் மருவி சதுரங்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டிருக்கக்கூடும்.

கோட்டையின் உட்புறம்
கோட்டையின் உட்புறம்

முதலில் புலிக்காட் என்றழைக்கப்படும் பழவேற்காடு பகுதியில் கி.பி.1606ம் ஆண்டில் வந்த நெதர்லாந்து நாட்டினரான டச்சுக்கார்கள் ஆடைகள் மற்றும் நறுமணப்பொருட்களை ஏற்றுமதி செய்தார்கள். அங்கு செங்கற்களைக் கொண்டு ஒரு கோட்டையினை அமைத்தார்கள். பிறகு கி.பி.17ம் நூற்றாண்டில், அதாவது கி.பி.1622ல் சதுரங்கப்பட்டினத்தில் ஒரு கோட்டையை அமைத்தார்கள். இக்கோட்டையினுள் ஒரு தானியக்கிடங்கு, குதிரை லாயம், யானை கட்டுமிடம், உணவுக்கூடம், நடனக்கூடம் என பல வசதிகள் அமைக்கப்பட்டன. நாற்புறமும் பெரிய மதில்களை உடையதாகவும் நாற்புறமும் பீரங்கிகளும் நிறுவப்பட்டிருந்தன.

கோட்டையின் உட்புறம்
கோட்டையின் உட்புறம்

டச்சுக்காரர்கள் தாவர எண்ணெய் உற்பத்திக்காகவும், மெல்லிய ஆடைகள் நெசவு செய்யும் இடமாகவும் இப்பகுதியைப் பயன்படுத்தினார்கள். இங்கு சுட்ட செங்கற்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தரமான மஸ்லின் துணிகளும் நெய்யப்பட்டன. இவற்றோடு நறுமணப்பொருட்கள் முதலானவை ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு இப்பகுதியில் இருந்த துறைமுகம் மூலமாக கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கோட்டையின் உட்புறம்
கோட்டையின் உட்புறம்

சத்ராஸ் கோட்டையில் கி.பி.1620 முதல் கி.பி.1769 வரை அமைக்கப்பட்ட பல அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்லறைகளும் காணப்படுகின்றன.

இக்கோட்டையைக் கைப்பற்றும் நோக்கத்தில் ஆங்கிலேயர்கள் கி.பி.1782ல் ஆங்கிலேய கடற்படைத் தளபதி சர்.எட்வர்டு ஹியுஸ் தலைமையில் கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்தினார்கள். டச்சுக்காரர்கள் பிரெஞ்சுப் படைத்தளபதி பெய்லி-டி-சஃரான் தலைமையில் எதிர்த்துத் தாக்கினார்கள். இப்போரில் டச்சுக்காரர்களே வென்றார்கள். பின்னர் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் கி.பி.1818ல் இக்கோட்டையைக் கைப்பற்றினார்கள். இதன் பின்னர் இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. தற்போது இந்திய தொல்லியல் துறையால் இது பராமரிக்கப்பட்டு வருகிறது.

கல்லறை
கல்லறை

சென்னை மற்றும் புதுச்சேரிக்கு மத்தியில் சதுரங்கப்பட்டினம் அமைந்துள்ளது. சென்னை, செங்கற்பட்டு, வேலூர் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து சதுரங்கப்பட்டினத்திற்கு நேரடிப் பேருந்து வசதி உள்ளது. பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே கோட்டை அமைந்துள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை இக்கோட்டையினை பொதுமக்கள் பார்வையிடலாம். காலையில் புறப்பட்டால் இக்கோட்டையினைப் பார்வையிட்டு பல்லவர்களின் துறைமுக நகரமான மாமல்லபுரத்தினையும் பார்வையிட்டு மாலை வீடு திரும்பி விடலாம். டச்சுக் கட்டடக் கலையின் அடையாளமாக இன்றும் இந்தக் கோட்டை அணி செய்து கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com