தமிழர்களைப் போல் அணிகலன்களைப் பயன்படுத்தியவர்கள் வேறு எந்த நாட்டவர்களும் இல்லை எனும் அளவிற்கு அவர்கள் ஆண்டாண்டுக் காலமாகத் தம்மை அழகுபடுத்திக்கொள்ள அணிகலன்களை அணிந்து வருகிறார்கள். தமிழர்கள் பயன்படுத்திய அணிகலன்கள் நுட்பமான வேலைப்பாடு நிறைந்தவை. கலைநயம் நிறைந்தவையாகவும் வியப்பூட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் ஆடவர் மற்றும் பெண்டிர் என இருபாலரும் அணிகலன்களை விரும்பி அணிந்துள்ளனர். அக்காலத்தில் தலை முதல் கால் வரை அணிகலன்களை அணியும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.
தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் பூக்கள், சங்கு, சிற்பி, கொட்டைகள் முதலான பொருட்களை நார்களில் கோர்த்து பயன்படுத்தப்பட்ட அணிகலன்கள் பிற்காலத்தில் விலையுயர்ந்த பொன், வெள்ளி, நவரத்தினங்கள் முதலான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன.
பழங்காலத்தில் குறிஞ்சி நிலப் பெண்கள் மலர்களை தலையில் சூடி அழகு பார்த்தனர். பின்னர் நார்களால் மலர்களை இணைத்து மாலையாக அணிந்தனர். நாளடைவில் இயற்கையாகக் கிடைக்கும் சிறு காய்கள், கொட்டைகளைக் கோர்த்து அவற்றை அணியத் தொடங்கினர்.
அணிகளால் தங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் மனிதில் எழ, சிவப்புக் குன்றிமணி, கழற்சிக்கொட்டை, நெல்லிக்காய், மிளகுக்காய் முதலானவற்றைக் கோர்த்து மாலையாகவும் காதணிகளாகவும், கையணிகளாகவும், இடுப்பணிகளாக, கால் அணிகளாக அணியத் தொடங்கினர்.
நெய்தல் நில மக்கள் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்ததால் கடலில் கிடைக்கும் முத்து, சங்கு போன்றவற்றின் மூலம் செய்த அணிகலன்களை அணிந்தனர். உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவற்றால் ஆபரணங்களைச் செய்து அணிய வேண்டும் என்ற எண்ணம் எழுந்து பின்னர் அதுவே வழக்கமாகிப்போனது.
சங்க காலத்தில் பெண்களும் ஆண்களும் உடைகளால் மட்டுமின்றி, அணிகலன்களால் தமது உடல் முழுவதையும் அலங்கரித்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அணிகலன்கள் தலை அணிகள், காதணிகள், கழுத்தணிகள், இடையணிகள், கையணிகள், விரலணிகள், காலணிகள் என பல பகுதிகளில் அணியும் வகையில் விதவிதமாக செய்யப்பட்டன.
பெண்கள் தலையில் அணியும் இலம்பகம், கடிகை, சரம், சூழி, திருகுபூ, நெற்றியில் அணியும் சுட்டி, காதில் அணியும் கொப்பு, ஓலை, சின்னப்பூ, குண்டலம் மற்றும் குழை, தண்டட்டி, கழுத்தில் அணியும் கொத்து, கொடி, பவளத்தாலி, இடையில் அணியும் மேகலை மற்றும் பாண்டில், கையில் அணியும் கொப்பு, கொந்திக்காய்ப்பூ, கைவிரல்களில் அணியும் சிவந்திப்பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ, கால்விரலில் அணியும் கால் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி போன்ற பலவகையான அணிகலன்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.
சங்ககாலப் பெண்கள் இடுப்புக்கு சற்று கீழே மேகலை எனும் அணிகலனை அணியும் வழக்கத்தை வைத்திருந்தனர். மணியும், பவளமும் கொண்டு அழகிய வேலைப்பாட்டுடன் பாம்புரி போல முன்புறம் வளைந்து காணப்படும் மேகலை என்ற அணிகலனுக்கு படுகால் என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. மேகலை வகையைச் சேர்ந்த மற்றொரு அணிகலன் பாண்டில் என்பதாகும். இது வட்டவடிவமான பொற்காசு மாலையாகும். தொடி என்பது வளையலைக் குறிக்கும் அணிகலன். பைந்தொடி என்றால் தங்க வளையலைக் குறிக்கும் சொல்லாகும்.
ஆண்கள் வீரக்கழல், வீரக்கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்து வடம், கடுக்கண், குண்டலம் என பலவிதமான அணிகலன்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.