நாடகக் கலையுலகின் இமயம் சங்கரதாஸ் ஸ்வாமிகள்!

Shankaradas Swamigal
Shankaradas Swamigal
Published on

றிவியல் முன்னேற்றம் இல்லாத அந்தக் காலத்தில் நாடகம் என்பது மக்கள் பொழுதுபோக்குக்கு சிறந்ததாக இருந்தது. இன்றைய திரைத்துறைக்கு முன்னோடியாக இருந்தது அன்றைய நாடகக் கலையே. இந்த நாடகக்கலையின் தந்தையாக போற்றப்படுபவர்தான் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ் நாடகக் கலையை பொறுத்தவரையில் சுவாமிகள் காலத்துக்கு முன், சுவாமிகளின் காலத்துக்கு பின் என்று ஆராயும் அளவிற்கு சுவாமிகள்  நாடகக்கலைக்கு ஆற்றிய தொண்டு சிறப்பு மிக்கது.

சங்கரதாஸ் சுவாமிகள் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி என்னும் சிற்றூரில் 1867ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை தாமோதரன். தாயார் பேச்சியம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சங்கரன். நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆக இவர் அறியப்பட்டார். 16 வயதிலேயே சொந்தமாக கவிதைகளை எழுதியதே தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறுவயதிலிருந்தே இவர் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தற்கு சான்று. தமது தந்தையாரிடமும் பின்னர் பழனி தண்டபாணி சுவாமிகளிடமும் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவர், தனது 24ம் வயதில் முழு நேர நாடகக் கலைஞராக ஆனார்.

இலக்கண, இலக்கியங்களில் சிறந்தவராக இருந்ததால் இவரது நாடகங்கள் மொழிவளம் பெற்றவையாகத் திகழ்ந்தன. அப்போது நாடகங்களுக்கு இசையும் பாட்டும் அஸ்திவாரம் என்பதால் சங்கரதாஸ் சுவாமிகள் புதுக்கோட்டை மான் பூண்டியா பிள்ளையிடம் இசைப் பயிற்சியை முறைப்படி கற்றார்.

சங்கரதாஸ் சுவாமிகள் முதன் முதலில் நாடக நடிகராகவே தமது நாடக வாழ்க்கையை துவங்கினார். இவர் ஏற்று நடித்த இரணியன், ராவணன், எமதர்மன், சனீஸ்வரன், கடோத்கஜன் போன்ற வேடங்களுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது  அசுரன் வேடங்களை ஏற்று நடித்து வந்த  ஒரு காலகட்டத்தில் தனது வேடத்தைப் பார்த்து பயந்து மயங்கி விழுந்து இறந்த பெண்ணின் மரணம் தந்த பாதிப்பில் தனது  பாதையை நாடக நடிகரிலிருந்து நாடக ஆசிரியருக்கு மாற்றினார். வள்ளி வைத்தியநாத ஐயர், அல்லி இராமேஸ்வர ஐயர் ஆகியோரின் நாடக சபைகளில் சில காலம் ஆசிரியராக இருந்த சுவாமிகள், பின்னர் வேலு நாயரின் சண்முகானந்த சபையில் ஆசிரியராகப் பணிபுரிந்து பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகத்திற்கு பாடல்களை எழுதி உள்ளார். இதைத் தொடர்ந்து, ‘சமரச சன்மார்க்க நாடக சபை’ என்ற சொந்த நாடகக் குழுவை சில காலம் நடத்தினார். சுவாமிகளின் காலத்தில் நாடகக் குழுக்களில் பெரும்பாலும் சிறுவர்களைக் கொண்டே நாடகங்கள் நடத்தப்பட்டன. அதில் நடித்த சிறுவர்கள் இவரால் கவரப்பட்டனர். நாடகத்துக்கு தேவையான தலைசிறந்த மொழி அறிவும் நாடக உருவாக்க புதுமையும் சுவாமிகளிடம் இருந்ததால் இவருக்கு பெரிய மாணவர் கூட்டமே இருந்தது எனலாம். இவரின் வழித்தோன்றல்களாக தோன்றிய அந்த மாணவர்களில் பலர் திரைத்துறையிலும் ஜொலித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, டி.கே.எஸ்.சகோதரர்கள், நவாப் பி.எஸ்.ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, யதார்த்தம் டிபி பொன்னுசாமி பிள்ளை,  சாரங்கபாணி, பாலாமணி ஆகியவர்கள்.

நாடக ஆசிரியராகப் பணியாற்றியவர் சிறிது காலத்துக்கு பிறகு தானே நாடகம் அமைத்து இயக்கி, அரங்கேற்றி நாடகத்துக்கு பெருமை சேர்த்தார். சங்கரதாஸ் ஸ்வாமிகள் மொத்தம் 50 நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் சிம்பலைன், ரோமியோ ஜூலியட், ஜூலியஸ் சீசர் ஆகியன ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்கள் என்பது சிறப்பு. சுவாமிகள் எழுதி, இயக்கிய அனைத்து நாடகங்களும் சிறப்புடையவை எனினும், சத்தியவான் சாவித்திரி, நல்லதங்காள், வீர அபிமன்யு, பவளக்கொடி சரித்திரம், வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், கோவலன் சரித்திரம், ராம ராவண யுத்தம், மதுரை வீரன், சித்ராங்கி விலாசம், நளத் தமயந்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய நாடகங்கள் வெகு சிறப்பு மிக்கவையாகும். சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் ஆயிரக்கணக்கான முறைகள் அரங்கில் நடிக்கப்பட்டு மக்களின் பெருத்த வரவேற்பை பெற்றன.

தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படை செல்வங்கள் சுவாமிகள் இயற்றிய நாடகங்கள்தான் என்றால் அது மிகையல்ல. கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து கொண்டிருந்த நாடகக்கலையை உயர்த்திப் பிடித்தது மட்டுமல்லாமல், தனது காலத்துக்கு பின்னரும் நாடகக் கலையை தம் நாடகங்கள் மூலம் நிலைநிறுத்தினார். உண்மையில் சுவாமிகளின் வழி பற்றியே மற்ற நாடகக் கலைஞர்கள் நாடகங்களை முறைப்படி நடத்தியதால் சுவாமிகளின் மறைவுக்குப் பின்னரும் அவரின் புகழ் ஓங்கியது எனலாம்.

ஒருசமயம் சென்னையில் சுவாமிகள் நினைவு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சுவாமிகளை, ‘நாடக உலகின் இமயமலை’ என்று குறிப்பிட்டார். அந்த அளவிற்கு சுவாமிகளின் நாடகத் தொண்டு அமைந்திருந்தது.

நாடகத்திற்காகவே தனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்த அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர் எழுதிய பாடல்கள் தமிழகம் முழுவதும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்திலும் மாட்டு வண்டியில் தனது குழுவினரை அழைத்துச்சென்று வேட்டு வெடித்து நாடகம் நடைபெறப்போவதை மக்களுக்கு அறிவித்து மின்சார வசதி இன்றி பெட்ரோமாக்ஸ் ஒளியில் நாடகங்களை நடத்திக்காட்டிய சாதனையாளர் சங்கரதாஸ் ஸ்வாமிகள்.

ஒரே இரவில் ஒரு நாடகத்தை முழுமையாக எழுதி முடிக்கும் திறமையும் இவருக்கு இருந்தது. அவ்வை சண்முகம் கதாநாயகனாக நடித்து 4 மணி நேரம் நடக்கும் இந்த நாடகத்திற்கு தேவையான உரையாடல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் இவர் ஒரே இரவில் எழுதியது இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனை.

இதையும் படியுங்கள்:
பிரிட்டிஷ் அரசுக்கெதிரான சிப்பாய்க் கலகம் நடைபெற்ற வேலூர் கோட்டை!
Shankaradas Swamigal

55 ஆண்டுகள் வாழ்ந்து நாடகக் கலைக்கு அரும் பணி ஆற்றிய சுவாமிகள், 1922ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி புதுச்சேரியில் மரணமடைந்தார். இவரின் நினைவாக சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள கலையரங்கத்துக்கும் மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்குக்கும் சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலை நாடகத்துறைக்கு, ‘தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் கலைத்துறை’ என பெயரிடப்பட்டுள்ளது சிறப்பு.

இன்று திரைத்துறையின் அசுர வளர்ச்சி காரணமாக மக்களுக்கு நாடகங்கள் பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டாலும், நாடக ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் நாடகக் கலையின் தந்தையான சங்கரதாஸ் சுவாமிகளை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com