
சரஸ்வதி பூஜையன்று, கலை மற்றும் கற்பிக்கும் தெய்வமாகிய சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். அவரின் கரங்களில் இருக்கும் பெருமை வாய்ந்த இசைக் கருவி வீணையாகும். சரஸ்வதி தேவியின் அனைத்து படங்களிலும், அவரது கைககளில் வீணை கண்டிப்பாக இருக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த வீணையைப் பற்றிய சில விபரங்களைத் தெரிந்து கொள்ளலாமா?
வீணை, இந்திய பாரம்பரிய மற்றும் தென்னிந்திய கர்நாடக இசைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தந்தி இசைக்கருவி. வேதகாலம் முதலேயே தோன்றிய பழமையான இந்திய நரம்புக் கருவி எனலாம்.
தஞ்சாவூர் வீணை, ருத்ர வீணை, சரஸ்வதி வீணை என அநேக வகைகள் உள்ளன. வீணை செய்ய, பலா மரம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரே மரத்துண்டிலிருந்து தண்டையும், குடத்தையும் செதுக்கி வீணை செய்யப்படுகிறது. குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாடிகள் கீற்றப்பட்டிருக்கும். வீணையின் குடப்பகுதி மீது, பலவிதமான வட்டவடிவ ஒலித் துளைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
பல்லாண்டு காலமாக இருக்கும் வீணையுடன், புல்லாங்குழல், தபலா போன்ற இசைக் கருவிகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவை எல்லாமே மரத்தால் செய்யப்பட்டவை.
மரங்களின் இயற்கையான பண்புகள் காரணம். சிறந்த ஒலித்தன்மையை இக்கருவிகள் வழங்குகின்றன. தவிர, மரத்தை உபயோகப்படுத்தி தொழில் புரியும் கைவினைக் கலைஞர்களின் திறமை, இசைக்கருவிகளின் அழகிய வடிவமைப்பு மற்றும் ஒலிகளை மேம்படுத்துகின்றன.
இசைக் கருவிகள் செய்ய, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழர் கலாச்சாரத்தை வளர்க்க இசைக்கருவிகள் உதவுகின்றன.
சரஸ்வதி தேவி, மரங்களில் வசிப்பதாக கூறப்படுகிறது. ஆதலால், இசைக் கருவிகள் வாக்தேவியாக கருதப்படுகின்றன. நவராத்திரி சமயம், சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் வாத்தியங்கள் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன.
காரணம்..?
ஒரு சமயம், சரஸ்வதி தேவிக்கும், லக்ஷ்மி தேவிக்கும் இடையில், யார் உயர்ந்தவர் ? என பெரிய சர்ச்சை உண்டானது. இருவரும் பிரம்ம தேவனிடம் சென்று முறையிட்டனர். பிரம்ம தேவர், லக்ஷ்மி தேவியே உயர்ந்தவரெனக் கூறினார். கோபமுற்ற சரஸ்வதி தேவி, பிரம்மன் கையிலிருந்த சிருஷ்டி தண்டத்தை எடுத்துக் கொண்டு மறைத்து விட்டார். பிரம்ம தேவருக்கு, சிருஷ்டிக்கும் தொழில் செய்ய இயலவில்லை. மகாவிஷ்ணுவிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்.
ஒரு சில விநாடிகள் யோசித்த மகாவிஷ்ணு, பிரம்மதேவரிடம், அஸ்வமேத யாகம் செய்தால், மற்றொரு சிருஷ்டி தண்டம் தருவதாக வாக்களிக்க, பிரம்ம தேவரும் யாகத்திற்கு ஏற்பாடு செய்தார்.
தன்னை தவிர்த்து, பிரம்மா தனியாக யாகம் செய்யக் கூடாதென எண்ணி கோபமுற்ற சரஸ்வதி தேவி, யாகசாலையை எரித்துவிட நெருப்பை உருவாக்கினாள். அப்போது, மகாவிஷ்ணு அந்த நெருப்பு ஜ்வாலையைத் தாங்கிப் பிடித்தார்.
சரஸ்வதி தேவி பூவுலகம் வந்து, மரங்கள் மற்றும் நீர் நிலைகளில் சிறிது காலம் மறைந்து வாழ்ந்ததால், மரத்தால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், வாக் தேவியாக கருதப்பட்டு வழிபடப்படுகின்றன.
உபரி தகவல்கள்
கச்சபீ வீணை, சிவபெருமானால் பிரம்ம தேவருக்கு அளிக்கப்பட, அது சரஸ்வதி தேவியிடம் சென்றது. பழங்கால வீணை கச்சபீ.
ருத்ர வீணை, வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. துருபத் இசை வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சிவபெருமானின் பெயர் கொண்ட ருத்ர வீணை ஆழமான மற்றும் கம்பீரமான ஒலிக்குப் பெயர் பெற்றது.
தஞ்சாவூர் வீணை நாட்டிலேயே புவியியல் குறியீடு பெற்ற முதல் வீணையாகும்.
புகழ் பெற்ற வீணைக் கலைஞர் தனம்மாள், வீணை தனம்மாள் என்றே அழைக்கப்பட்டவர். தனம்மாள் பாணியை உருவாக்கிய பெருமையைக் கொண்டவர்.