பௌத்த கலாசாரத்தின் புகழ்பாடும் புண்ணிய பூமி சாரநாத்!

தாமேக் ஸ்தூபி
தாமேக் ஸ்தூபி
Published on

த்திரப்பிரதேச மாநிலம், வாரணாசியிலிருந்து 13 கிலோ மீட்டர் வடகிழக்கில் அமைந்த ஒரு சிறிய நகரம் சாரநாத். சாரநாத், சாமாத, மிரிகதாவ, மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான என பலவிதமான பெயர்களில் அறியப்படுகிறது.   சரித்திரப் புகழ் பெற்ற சிற்பக்கலை நகரங்களான தமிழகத்தின் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் போன்று சரித்திரப் புகழ் பெற்ற பௌத்த நகரமே சாரநாத்.

சாரநாத்தில் புத்தர் கோயில், ஸ்தூபிகள், அருங்காட்சியகம், அசோகர் நிர்மாணித்த தூண், அகழ்வாய்வு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் மான் பூங்கா, தாமேக் ஸ்தூபி, சௌகண்டி ஸ்தூபி போன்ற கலைநயம் கொஞ்சம் முக்கியமானவற்றை கண்டு ரசிக்கலாம்.

மான் பூங்கா: புத்தர் பல ஆண்டுகால தவத்திற்குப் பின்னர் புத்த கயாவில் ஞானம் பெற்றார். தான் பெற்ற ஞானத்தை தம் முதல் ஐந்து சீடர்களிடம் எடுத்துரைப்பதற்காக புத்தர் சாரநாத்திற்கு வந்தார். சாரநாத்தின் ஒரு பகுதியான மான்கள் நிறைந்த அமைதி தழுவிய இந்தப் பகுதிக்கு விஜயம் செய்தார். அவர் தனது முதல் பிரசங்கத்தை மான் பூங்காவில்தான் நிகழ்த்தினார். சாரநாத்தில் அமைந்துள்ள பௌத்த சமய இடங்களில், ‘இசிபதானா’ என்றழைக்கப்படும் மான் பூங்கா மிகவும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. சாரநாத்தில் மான் பூங்காவில் அமைந்துள்ள ஒரு மரத்தடியில் புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதை போதித்தார்.

புத்தர் கோயில்
புத்தர் கோயில்

புத்தர் கோயில்: ஒரு பூங்கா போன்ற இடத்தில் புத்தரின் சிலைகள், புத்தர் கோயில், இந்தியாவின் தேசிய சின்னம், நிற்கும் நிலையில் ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலை போன்றவற்றைக் காணலாம்.

அகழ்வாராய்ச்சி மையம்: சாரநாத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் இடம் இது. இந்திய தொல்லியல் துறை இந்தப் பகுதியை நிர்வகிக்கிறது. காலை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்த பகுதியைப் பார்வையிட அனுமதிக்கிறார்கள். அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களை தகவல் பலகைகளை எழுதி வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

அகழ்வாராய்ச்சி மையம்
அகழ்வாராய்ச்சி மையம்

அருங்காட்சியகம்: புத்தர் சாரநாத்தில் தனது போதனைகளை நிகழ்த்தியதன் நினைவாக மன்னர் அசோகர் இப்பகுதியில் கி.மு.250ம் ஆண்டில் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்கங்களை அமைத்தார். பீடத்தில் தர்ம சக்கரத்தை நிறுவினார். இந்த கல்தூண் தற்போது சாரநாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தூணில் நான்கு சிங்கங்கள் நான்கு புறங்களிலும் அமைந்துள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை மற்றும் நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளை வலியுறுத்துகின்றன. பீடத்தின் கிழக்குப் பகுதியில் யானை, மேற்கு பகுதியில் குதிரை, தெற்குப் பகுதியில் எருது மற்றும் வடக்குப் பகுதியில் சிங்கம் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன. மலர்ந்த தாமரை மலர் ஒன்றும் காணப்படுகிறது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சாரநாத் புத்தர் சிலை
சாரநாத் புத்தர் சிலை

தாமேக் ஸ்தூபி: சாரநாத்தில் தாமேக் ஸ்தூபி அமைந்துள்ளது. இந்த ஸ்தூபி கி.பி.500ல் அமைக்கப்பட்டது. தாமேக் ஸ்தூபியானது ரிஷிபத்தனா அதாவது ரிஷி வருகை புரிந்த இடம் என்று அழைக்கப்படுகிறது. தாமேக் ஸ்தூபி பல முறை சீரமைக்கப்பட்டுள்ளது. புத்த பிக்குகள் தங்குவதற்கும் சமய சடங்குகளைச் செய்வதற்கும் இத்தகைய ஸ்தூபிக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  செங்கற்களால் கட்டப்பட்ட உருளை வடிவத்திலான இந்த ஸ்தூபி 43.6 மீட்டர் உயரமும் 28 மீட்டர் விட்டமும் கொண்டதாக அமைந்துள்ளது. கி.பி.640ல் இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் தனது பயணக் குறிப்பில் தாமேக் ஸ்தூபி வளாகத்தில் ஆயிரத்து ஐநூறு பிக்குகள் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சௌகண்டி ஸ்தூபி: குப்தர்களின் காலத்தில் சாரநாத்தில் எண் கோண வடிவத்திலான சௌகண்டி  ஸ்தூபி நிறுவப்பட்டது. சௌகண்டி ஸ்தூபியானது புத்தர் தனது ஐந்து சீடர்களை முதன் முதலில் இந்த இடத்தில் சந்தித்ததன் நினைவாக உருவாக்கப்பட்டது. இதன் பின்னரே தனது உரையினை புத்தர் நிகழ்த்தியுள்ளார். கி.பி.5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஸ்தூபி பௌத்த கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com