சீனப் பெருஞ்சுவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியப் பெருஞ்சுவரைப் பற்றித் தெரியுமா? மேலும், இந்தியப் பெருஞ்சுவர்தான் சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக உலகத்திலேயே மிக நீளமான பெருஞ்சுவர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? என்ன இவ்வளவு பீடிகை போடுகிறேன் என்று நினைக்கிறீர்களா?
நான் குறிப்பிடும் இந்தியப் பெருஞ்சுவர் ராஜஸ்தானில் உதய்ப்பூரிலிருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கும்பல்கர்க் கோட்டையைச் சுற்றியுள்ள கோட்டை பெருஞ்சுவர். கும்பல்கர்க் கோட்டையின் பெருஞ்சுவர் கிட்டத்தட்ட 36 கிலோமீட்டர் நீளமுடையது. அதாவது 22 மைல் நீளமுடையது. இது ஏழு கதவுகளும், மேலும் பல்வேறு கொத்தளங்களும் அடங்கியது. இதன் அகலம் சில இடங்களில் 15 அடிக்கும் அதிகமாக உள்ளது.
இது 15 ஆம் நூற்றாண்டில் பிரபல மேவார் மன்னர் ராணா கும்பாவால் கட்டப்பட்டது. கி.பி 1443 இல் கட்டத் தொடங்கப்பட்ட இந்தக் கோட்டை கி.பி. 1458 இல் கட்டி முடிக்கப்பட்டது.
கும்பல்கர்க் கோட்டை மிகவும் கடினமான யாராலும் உட்புக முடியாத கோட்டை. இது தன்னுடைய வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே எதிரிகளால் கைப்பற்றப்பட்டது. அக்பரின் தளபதியான ஷாபாஸ்கான் கி.பி 1577 இல் ஆறு மாதம் முற்றுகைக்குப் பிறகு இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். ஆனால் இந்தக் கோட்டைக்கு சொந்தக்காரரான மேவார் மன்னர் மகாராணா பிரதாப் கி.பி 1583இல் மறுபடி இதனைத் தன் வசம் கொண்டு வந்தார். மகாராணா பிரதாப் இந்தக் கோட்டையில் தான் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ராஜஸ்தானை ஆண்ட மேவார் ராஜ வம்சத்தின் முக்கிய கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோட்டையை வடிவமைத்தவர் மந்தன் என்ற பிரபல கட்டடக்கலை நிபுணர். அவர் தனது கட்டடக்கலை நுணுக்கங்களை ராஜ்வல்லப் என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
நிற்க.
உலகத்தின் இரண்டாவது பெருஞ்சுவர் மட்டுமல்ல. மூன்றாவது பெருஞ்சுவரும் இந்தியாவில் தான் உள்ளது. அந்த மூன்றாவது பெருஞ்சுவர் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையைச் சுற்றி அமைந்துள்ளது. இந்தப் பெருஞ்சுவர் கும்பல்கர்க் பெருஞ்சுவரை விட கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர்கள் சுற்றளவு குறைவு.
முதலிடத்திலுள்ள உலகின் மிகப்பெரிய சுவரான சீனப்பெருஞ்சுவரின் சுற்றளவு 21,000 கிலோமீட்டர்கள். அதனுடன் ஒப்பிடும் போது, இரண்டாவது பெருஞ்சுவரான கும்பல்கர்க் பெருஞ்சுவர் 36 கிலோமீட்டர்கள் தான் என்றாலும், அதனைப் போன்றே அம்சங்களைக் கொண்டது.
எனவே, நீங்கள் உலகின் மிகப் பெரிய சுவரான சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க முடியவில்லையே என்று நினைத்து வருந்த வேண்டாம். உடனே உதய்ப்பூருக்குப் பயணம் செய்யுங்கள். உலகின் இரண்டாவது பெருஞ்சுவரைக் காணுங்கள். முடிந்தால், அருகிலுள்ள ஜெய்ப்பூருக்குப் பயணம் செய்து, மூன்றாவது பெருஞ்சுவரையும் காணுங்கள்.