

செம்பட்டை முடி (Red hair) ஒருகாலத்தில் மர்மம், பயம், துரதிர்ஷ்டம் என பல மூடநம்பிக்கைகளின் சின்னமாகக் கருதப்பட்டது. அந்த வகையில், அச்சமும் ஆச்சரியமும் கலந்த செம்பட்டை முடியின் வினோத வரலாற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்!
செம்பட்டை முடிக்குப் பின்னல் இருக்கும் பயங்கரமான வரலாறுகள்:
செம்பட்டை முடி கொண்டவர்கள் பண்டைய எகிப்தில் பலியிடப்பட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் 'பிசியோக்னமி' நூல்களில், செம்பட்டை முடி கொண்டவர்கள் நரிகளோடு ஒப்பிடப்பட்டனர். நரிகளைப்போல இவர்களும் தந்திரமானவர்கள்; கெட்ட குணம் கொண்டவர்கள் என்ற தவறான பார்வை கிரேக்கர்களிடம் இருந்தது.
புதிய ஏற்பாட்டில் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸின் தோற்றம் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இடைக்கால ஓவியர்கள் யூதாஸை செம்பட்டை முடி கொண்டவராகவே சித்தரித்தனர். இதன் மூலம் பொதுமக்கள் செம்பட்டை முடியை துரோகத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டனர்.
16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் 'சூனியக்காரிகள் வேட்டை' தீவிரமாக இருந்தபோது, இந்த பயம் ஆபத்தானதாக மாறியது. சாத்தானுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அப்பாவிப் பெண்கள் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட காலம் அது.
அக்காலத்தில் உடலில் உள்ள மச்சங்கள், பிறவி வடுக்கள் மற்றும் செம்பட்டை முடி ஆகியவை சூனியக் காரிகளுக்கான அடையாளங்களாகப் பார்க்கப்பட்டன. உண்மையில் இதற்கும் சூனியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.எனினும், அந்த காலத்தில் ஒரு சமூகத்தில் மாறுபட்டு, அரிதாகக் காணப்படும் மனிதர்கள் எளிதில் இலக்காக்கப்பட்டனர்.
நாட்டுப்புறக் கதைகளிலும் இந்த மூடநம்பிக்கை நீடித்தது. ஸ்காட்லாந்து நாட்டுப்புறக் கதைகளின்படி, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வழியில் முயல், நாய் அல்லது செம்பட்டை முடி கொண்ட மனிதர்களைக் கண்டால் அன்றைய தினம் கடலுக்குச் செல்ல மாட்டார்கள். அது துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று நம்பினர். அதேபோல், புத்தாண்டின் முதல் நாளில் வீட்டிற்குள் நுழையும் முதல் நபர் கறுப்பு முடி கொண்டவராக இருந்தால் அதிர்ஷ்டம் என்றும், அதுவே செம்பட்டை முடி கொண்டவராக இருந்தால் அது பெரும் துரதிர்ஷ்டம் என்றும் நம்பப்பட்டது.
செம்பட்டை முடியின் பின்னால் உள்ள அறிவியல்:
செம்பட்டை முடியைப் பற்றிய விசித்திரக் கதைகளுக்குப் பின்னால் ஒரு எளிய மரபியல் உண்மை ஒளிந்துள்ளது. செம்பட்டை முடி தோன்ற, நமது உடலில் உள்ள MC1R என்ற மரபணுதான் காரணம். இந்த மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள், உடலில் உள்ள கறுப்பு-பழுப்பு நிறமியான 'யூமெலனின்' அளவைக் குறைத்து, சிவப்பு-மஞ்சள் நிறமியான 'பியோமெலனின்' உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதன் காரணமாகவே, கருமையான கூந்தல் கொண்ட பெற்றோருக்குக் கூட திடீரென செம்பட்டை முடியுடன் குழந்தை பிறக்கிறது.
உலக மக்கள் தொகையில் வெறும் 1 முதல் 2 சதவீதம் மக்கள் மட்டுமே இயற்கையான செம்பட்டை முடியைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியப் பகுதிகளில், அதிலும் குறிப்பாக செல்டிக் வம்சாவளி மக்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.
இதிலிருந்து, பயம், ஆச்சரியம், அறியாமை ஆகியவற்றின் கலவையே மூடநம்பிக்கைகளுக்குக் காரணம் என்பதை இன்றைய அறிவியல் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இருப்பினும், இன்றும்கூட செம்பட்டை முடி கொண்டவர்களை 'கோபக்காரர்கள்', 'அதிதீவிரமானவர்கள்' என்று ஸ்டீரியோடைப் செய்யும் வழக்கம் மறைமுகமாக உள்ளது வருந்தத்தக்கது.