சிங்கையின் இசைத் தம்பதி!

சிங்கையின் இசைத் தம்பதி!

கடல் கடந்து விரியும் நம் கலை

கலைஞர்கள் – குருமார்கள் – கலை நிறுவனங்கள்

ஆற்றும் அற்புதப் பணி! ஓர் அறிமுகம்.

சிங்கப்பூரில் வசித்து வரும் இசைத் தம்பதியர் வி.ஆனந்த் - வைஷ்ணவி ஆனந்த். இருவரும் பாரத தேசத்தின் பொக்கிஷமான கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியத்தைக் கடல் கடந்து எடுத்துச் சென்று, சிங்கப்பூரில் 'சேத்தாஸ்' (Center for Holistic Enrichment Through Arts) என்ற அமைப்பை நிறுவி கலைச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைச் சந்தித்த போது நமக்குக் கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

தன் பாட்டி திருமதி. லீலா கோபாலனிடம் வாய்ப்பாட்டில் பயிற்சியைத் தொடங்கிய வைஷ்ணவி, பிறகு பம்பாயில் திரு. ஆலத்தூர் பஞ்சாபகேசய்யர், திருமதி. விஜயலக்ஷ்மி நாதன் ஆகியோரிடமும், மேம்பட்ட பயிற்சியை ஆலப்புழை G. வெங்கடேசன் அவர்களிடமும் பெற்றிருக்கிறார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற சபாக்களிலும் அரங்குகளிலும் பல கச்சேரிகள் செய்துள்ள இவர் தன் குருவோடு சேர்ந்தும் பல கச்சேரிகள் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

பரத நாட்டியத்தைத் தன் தாயார் திருமதி. டாக்டர். ஜெயஸ்ரீ ராஜகோபாலனிடமும், டாக்டர். பத்மா சுப்ரமணியன் அவர்களிடமும் கற்றுத் தேர்ந்தார். ஸோலோவாகவும் நாட்டியக் குழுவோடு சேர்ந்தும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் இவர். நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்த அனுபவத்தோடு நட்டுவாங்கம் இசைப்பதிலும் வல்லமை பெற்றவர்.

அவரது கணவர் திரு. ஆனந்த் முதலில் போரிவில் (Boriville) கண்ணன் அவர்களிடம் வயலின் இசையைக் கற்றார். பிறகு செம்பூரில் உள்ள 'தி ஃபைன் ஆர்ட்ஸ் பள்ளி'யில் சேர்ந்து திருமதி. கோமதி சீதாராமனிடம் ஏழு வருடம் பயின்றார். பிறகு குரு திருமதி. டி.ஆர். பாலாமணி அவர்களிடம் கற்றுக் கொண்டார். 2001இல் கலாச்சார அமைச்சகத்தின் ஸ்காலர்ஷிப் உதவியுடன்   கன்னியாகுமரி அவர்களின் சீடரானார். இந்தியா, மற்றும் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்து வருகிறார்.

சிங்கப்பூரில் குடியேறுவதற்கு முன்,சென்னையில் பல அலுவலக வேலைகளுக்கிடையே இசை மீதிருந்த அதீத ஆர்வத்தால் வாய்ப்பாட்டு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்த இசைத் தம்பதியர், ஆனந்த் மற்றும் வைஷ்ணவி ஆனந்த். நண்பர்களின் அன்பான  வற்புறுத்தலுக்கு இணங்கி ஒரு சில மாணவர்களைக் கொண்டு வாய்ப்பாட்டு மற்றும் பரத நாட்டியத்தை வைஷ்ணவியும், அவரது கணவர் ஆனந்த் வயலின் இசையையும் கற்றுத் தரத் தொடங்கினார்கள். பிறகு 2014ல் 'சேத்தாஸ்' என்ற அமைப்பை நிறுவி, கற்றலின் ஒரு பகுதியாக விஷுவல் ஆர்ட்ஸ் மற்றும் யோகக்கலையையும் சேர்த்திருக்கிறார்கள்.

2015இல் 'வீணை ஆராதானா', ' 2017இல் 'அனுபவா' என்ற முழுநீளக் கச்சேரிகள் , 2019ல் 'வேணு ப்ராவாஹா" என்ற புல்லாங்குழல் உற்சவம், கொரானா கொடுந்தொற்றின் போது வளரும் கலைஞர்களுக்காக  'ஸ்வானுபாவா' போன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள், இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 2021இல் 'சத ஏகைக ராக வைபவம்' என்ற தலைப்பில் நூறு நாட்களுக்கு வலைப் பதிவாக, சங்கீத கலாநிதி, வயலின் மேதை கன்னியாகுமரி அவர்கள் சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 100 அரிய ஏகைக க்ருதிகளைத் தேர்ந்தெடுத்து, வாசித்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழையும் வெளியிடட்டிருக்கிறார்கள். குரு கன்னியாகுமரி அவர்களின் நூறு சீடர்கள் வயலின் வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக இது அமைந்தது என்கிறார் திருமதி. வைஷ்ணவி ஆனந்த்.

அங்குள்ள மாணவர்களின் இசையார்வம் பற்றிக் கேட்டபோது, "மாணவர்கள் செவி வழிச் செய்தி மூலமாகக் கேட்டறிந்து எங்கள் பள்ளியில் வந்து சேர்கிறார்கள். பிரத்யேகமாக நாங்கள் எந்த விளம்பரமும் செய்வதில்லை. 40 பேர் வாய்ப்பாட்டு, 30 பேர் நாட்டியம், மற்றும் 10 பேர் வயலின் கற்று வருகிறார்கள்.

இந்தியாவில் இருப்பது போலல்லாமல் இங்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் வகுப்புகளுக்கு வருகிறார்கள். அவர்களுடைய சொந்த முயற்சியாலும் பெற்றோர்கள் ஊக்குவிப்பதாலும் அவர்கள் சிறப்பாகக் கற்றுக் கொண்டு கச்சேரி செய்யும் அளவுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள்".

ஒரே துறையில் தம்பதிகள் பணியாற்றும் பொழுது, கருத்து வேறுபாடு, அல்லது நிகழ்ச்சிகள், இசைப் பயிற்சி, வகுப்புகள் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டிய  தருணங்கள் வரக்கூடும். குடும்ப வாழ்க்கையையயும் கலைச் சேவையையும் எந்தவித சச்சரவுமில்லாமல் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது,

"நாங்கள் இருவரும் ஒரே துறையில் சேர்ந்து பணியாற்றும் பொழுது, கலை நிகழ்ச்சிகள் அல்லது இசைப் பயிற்சி வகுப்புகள் சில சமயம் ஒரே நேரத்தில்   நடத்த வேண்டிவரும். அப்பொழுது  நாங்கள் எங்களுடைய  நிகழ்ச்சி நிரலை சற்று மாற்றியமைத்துக் கொள்கிறோம்.

நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு இசை அமைக்கும்போது  நாங்கள் இருவரும்  கருத்துப் பரிமாற்றம் செய்து இணைந்து பணியாற்றுவோம். இசைத் துறையில் இருவருக்கும் அதீத ஈர்ப்பு உள்ளதால், ஸ்ருதியும் லயமும் சேர்வது போல் இணைந்து கலைச் சேவையை செய்து வருகிறோம்", என்று பதிலளித்தனர்.

அரியக்குடி பாணி, பத்மா சுப்ரமணியன் பாணி, கன்னியாகுமரி பாணியில்  பல குருமார்களிடமிருந்து தாங்கள் கற்றதை சிரத்தையாகப் பரப்பி, குரு சிஷ்ய பாரம்பரியத்தை வளர்த்து வரும் இவர்கள், "நிருத்யாலயா, SIFA, Tfa, அப்ஸரா ஆர்ட்ஸ் போன்ற அமைப்புகளின் முலமாக இருவரும் இசை, நடன நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறார்கள்.

கல்கி ஆன்லைன் வாசகர்கள் சார்பில், தங்கள் கலைச்சேவையைத் தொடர அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com