காஞ்சியின் கலைக்களஞ்சியமாகத் திகழும் அறியப்படாத ஆறு கோயில்கள்!

ஸ்ரீஐராவதீஸ்வரர்
ஸ்ரீஐராவதீஸ்வரர்

‘நகரேஷு காஞ்சி’ என்று மகாகவி காளிதாசனால் போற்றப்பட்ட பெருமை உடைய நகரம் காஞ்சிபுரம். நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது இதன் பொருள். தற்போது காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் இந்த நகரம் முற்காலத்தில் கச்சியம்பதி, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைன காஞ்சி, புத்த காஞ்சி, திருஅத்தியூர், பல்லவேந்திரபுரி, காமபீடம், காமக்கோட்டம், பிரமபுரம், ஆதிபீடம், சிவபுரம், சத்யவிதரக்ஷேத்ரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்கள் கி.பி.300 முதல் கி.பி.850 வரை, அதாவது மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். இலங்கையை அடுத்த மணிபல்லவம் என்ற தீவிலிருந்து வந்த இவர்களுடைய கொடி சிம்மக் கொடியாகும்.

காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஏராளமான கற்றளி வகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சிவகாஞ்சி பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களாகும். இதைத் தவிர, பலரால் அதிகம் அறியப்படாமல் ஆறு அபூர்வமான கோயில்கள் காஞ்சிபுரம் நகருக்குள்ளேயே பெரிய காஞ்சிபுரம் என தற்போது அழைக்கப்படும் சிவகாஞ்சி பகுதியிலேயே அமைந்துள்ளன என்பது வியப்பான உண்மை.

பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கைலாசநாதர் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில்கள் கலைநயத்துடன் காண்போரை வியக்கவைக்கும் வண்ணத்தில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், மக்களால் அதிகம் அறியப்படாத ஆறு கலைநயமிக்க கோயில்களும் அளவில் சிறியதாகக் கட்டப்பட்டுள்ளன.   பிரம்மாண்டமான கற்றளி வகைக் கோயில்களை அமைக்க முடிவு செய்த பல்லவ மன்னர்கள் அதற்கு முன்னோட்டமாக இந்த ஆறு கோயில்களை வடிவமைத்துத் திட்டமிட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட, கலைநயமிக்க, மக்களால் அதிகம் அறியப்படாத அத்தகைய ஆறு கலைக்கோயில்கள்: 1. ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில், 2. ஸ்ரீமதங்கீஸ்வரர் திருக்கோயில், 3. ஸ்ரீமுக்தேஸ்வரர் திருக்கோயில், 4. ஸ்ரீஜீரஹரேசுவரர் திருக்கோயில், 5. ஸ்ரீம்ருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில், 6. ஸ்ரீபிறவாதீசுவரர் திருக்கோயில். இந்த ஆறு கோயில்களுமே தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

1. ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்:

ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயில்
ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயில்

ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனால் கி.பி.8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காஞ்சி புராணத்தின்படி ஐராவதம் என்ற வெள்ளை யானை இத்தலத்து ஈசனை வழிபட்டு இந்திரனின் வாகனமாக மாறும் நிலையை அடைந்தது என்று கூறப்படுகிறது. ஐராவதம் வணங்கியதால் இத்தலத்து ஈசன் ஐராவதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலின் நுழைவாயில் மிகச்சிறியதாக அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் ஒரு சிறிய மூன்று நிலை இராஜகோபுரம் காணப்படுகிறது. இது சமீப காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம். உள்ளே நுழைந்ததும் பலிபீடம் ஒரு சிறிய மண்டபத்தில் நந்தி அமைந்துள்ளன. விமானம் ஏதும் இல்லாமல் இக்கோயில் மிகச்சிறியதாக காட்சி அளிக்கிறது. அர்த்தமண்டபம் மற்றும் கருவறை என்ற அமைப்போடு இக்கோயில் திகழ்கிறது. கருவறையில் பல்லவர்களுக்கே உரிய தாரா லிங்கம் காட்சி தருகிறது. கருவறைச் சுவர்களில் கலைநயமிக்க சிற்பங்கள் காட்சி தருகின்றன.   அர்த்த மண்டபத்தின் இடது புறத்தில் சக்கரதான மூர்த்தி, ஊர்த்துவத் தாண்டவ மூர்த்தி, திரிபுராந்தகர் முதலான சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் மேற்கு ராஜ வீதியில் நெல்லுக்காரத் தெருவும் மேற்கு ராஜ வீதியும் இணையும் இடத்தில் கச்சபேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.

2. ஸ்ரீ மதங்கீஸ்வரர் திருக்கோயில்:

ஸ்ரீ மதங்கீஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ மதங்கீஸ்வரர் திருக்கோயில்

பல்லவ மன்னரான இராஜசிம்ம பல்லவன் (கி.பி.700 முதல் கி.பி.728 வரை ஆட்சியாண்டு) துவக்கப்பட்ட இக்கோயில் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.731 முதல் கி.பி.796 வரை) காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 1400 வருடங்கள் பழைமையான இக்கோயில் பல அற்புதமான சிற்பங்களைக் கொண்டு இன்று வரை காண்போரைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

சிறிய நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் தென்படுவது ஒரு சிறிய மேடையில் நந்திச் சிற்பம். வலதுபுறத்தில் சற்று தொலைவில் ஆலயம் காட்சி தருகிறது. மணல் கற்களால் கட்டப்பட்ட ஸ்ரீ மதங்கீஸ்வரர் ஆலயம் அளவில் மிகச்சிறியதாகக் காணப்படுகிறது. ஆனால், இத்தலத்திலுள்ள சிற்பங்கள் வியக்க வைக்கும் அளவிற்கு நுணுக்கத்துடன் அமைந்துள்ளன.

மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் கருவறைக்குள் அமைந்துள்ள ஈசனை வழிபட கோயிலின் முன்புறத்தில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் நான்கு பக்க முனைகளிலும் சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள வீரனின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் பல்லவர்களுக்கே உரிய சிம்மத்தூண்கள் அழகுற காட்சி தருகின்றன. கோயிலுக்கு நேர் எதிரே ஒரு சிறிய மேடையில் நந்திதேவர் அமைந்துள்ளார்.

முகமண்டபம் மற்றும் கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தின் கருவறைக்குள் 16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ளது. லிங்கத்தின் முன்னால் நந்தியின் சிற்பம் அமைந்துள்ளது. லிங்கத்தின் பின்புறச்சுவற்றில் சோமாஸ்கந்த வடிவம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் கருவறை நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலர்கள் அமைந்துள்ளனர். இம்மண்டபத்தின் உட்புறச் சுவர்களில் கைலாய மலையை அசைக்கும் இராவணனின் புடைப்பச் சிற்பம் அற்புதமாகக் காட்சி தருகிறது. மேலும் கஜசம்ஹாரமூர்த்தி, கங்காதர மூர்த்தி மற்றும் ஊர்த்துவதாண்டவ மூர்த்தி முதலான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் வெளிப்புறச் சுவர்களில் யோக நிலையில் அமர்ந்த சிவபெருமான், லிங்கோத்பவர், நடனமாடும் சிவபெருமான், பிரம்மன், திருமால், துர்கை, சண்டேஸ்வர அனுகிரஹ மூர்த்தி முதலான கலைநயமிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல சிற்பங்கள் கால ஓட்டத்தால் சிதைந்த நிலையில் காட்சி தருகின்றன. கோயிலின் நான்கு மூலைகளிலும் கீழ்ப்புறத்தில் யானை ஒன்று அமர்ந்து இக்கோயிலைத் தாங்கியுள்ளதைப் போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சி புராணத்தில் இத்தலத்தின் சிவலிங்கமானது மதங்கி முனிவரால் நிறுவப்பட்டு வழிபடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மதங்கி முனிவர் இத்தலத்து ஈசனை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றலைப் பெற்றதாக ஐதீகம். ஸ்ரீமதங்கீஸ்வரர் திருக்கோயில் பெரிய காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹஸ்பிடல் ரோட்டில் அமைந்துள்ளது.

3. ஸ்ரீமுக்தேஸ்வரர் திருக்கோயில்:

ஸ்ரீமுக்தேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீமுக்தேஸ்வரர் திருக்கோயில்

தற்காலத்தில் முத்தீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீமுக்தேஸ்வரர் கோயில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கல்வெட்டின் மூலம் இத்தலம் தர்மமஹாதேவீச்சுரம் என்றும் மாணிக்கேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. மணற்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் கிழக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சதுர வடிவிலான மூன்று நிலைகள் கொண்ட விமானமும் வட்ட வடிவ கருவறையும் அமைந்துள்ளன. மணற்கற்களில் புடைப்புச் சிற்பங்களை எளிதில் வடிவமைக்க இயலும் என்பதால் பல்லவர்கள் தாங்கள் கட்டிய பெரும்பாலான கோயில்களை மணற்கற்களைக் கொண்டு கட்டினார்கள்.

கருவறையில் லிங்கத்தின் பின்புறத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவுடன் சோமாஸ்கந்தர் சிற்பம் காணப்படுகிறது.  முக மண்டபத்தின் உட்புறச் சுவர்களில் வடக்குப் பக்கச் சுவற்றில் ராவணன் கைலாச மலையினைத் தூக்கிப்பிடித்திருக்கும் சிற்பமும், கஜசம்ஹார மூர்த்தி சிற்பமும் அமைந்துள்ளன. மேலும், காலாந்தக மூர்த்தி, கங்காதரர், நடராஜர் முதலான புடைப்புச் சிற்பங்களும் இக்கோயிலில் காணப்படுகின்றன. தெற்குப் பக்கச் சுவற்றில் ராவண அனுக்கிஹர மூர்த்தி மற்றும் சிவனின் சிற்பங்களும் அமைந்துள்ளன. கருவறைக்கு வெளியே இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் மற்றும் சி்ம்மத்தூண்கள் காணப்படுகின்றன.

கருவறை மற்றும் முகமண்டபத்தின் வெளிப்புறச் சுவர்களில் பல அற்புதமான சிற்ப வடிவங்கள் காட்சி தருகின்றன.  குறிப்பிடத்தக்க வகையில் பிட்சாடனர், ஊர்த்துவத் தாண்டவ மூர்த்தி, துர்கை, சண்டேச அனுக்கிரஹ மூர்த்தி, சூரியன், சந்திரன், சுப்பிரமணியர், ஹரிஹரன், லிங்கோத்பவர், கணபதி, யமன், சிவயோகினி, தட்சிணாமூர்த்தி முதலான சிற்பங்கள் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு காண்போரை வியக்க வைக்கின்றன.

அதிஷ்டானத்தில் பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகளும் சோழர் கால கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் 28வது ஆட்சியாண்டில் நிலம் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்குப் பகுதி சுவற்றில் கி.பி.1030ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் முதலாம் ராஜேந்திர சோழனின் 18வது ஆட்சியாண்டில் எழுதப்பட்ட மெய்க்கீர்த்தி கல்வெட்டில் கிராம சபைகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இக்கோயில் கிழக்கு ராஜவீதியில் அமைந்துள்ளது.

4. ஸ்ரீஜுரஹரேசுவரர் திருக்கோயில்:

ஸ்ரீஜுரஹரேசுவரர் திருக்கோயில்
ஸ்ரீஜுரஹரேசுவரர் திருக்கோயில்

பல்லவ மன்னன் இராஜசிம்மன் என்றழைக்கப்படும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இக்கோயிலில் விக்ரம சோழன், விஜயநகர மன்னர் கம்பண்ணா ஆகியோரின் ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் உள்ளன. அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகிய அமைப்புகளோடு திகழும் இத்தலம் ஒரு கற்றளி வகைக் கோயிலாகும். அர்த்த மண்டபத்தினுள் இருபக்கமும் சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகியோர் காட்சி தருகின்றனர். கருவறை கோட்டங்கள் சிற்பங்கள் ஏதுமின்றி காட்சி தருகின்றன.

கிழக்கு திசை நோக்கி அமைந்த இக்கோயிலானது மூன்று நிலை இராஜகோபுரத்துடனும் மதில் சுவருடனும் காட்சி தருகிறது. பலிபீடம் மற்றும் நந்தி சிலை அமைந்துள்ளன. இக்கோயில் கருவறைக்குள் மிகச்சிறிய ரூபத்தில் லிங்கம் அமைந்துள்ளது. லிங்கத்தின் பின்புறம் அரிதாக இந்திரனின் சிலை காணப்படுகிறது.  கருவறைக்கு வெளியே ஒருபுறத்தில் இந்திராணியின் சிலையும் மறுபுறத்தில் குபேரனின் சிலையும் அமைந்துள்ளன. இக்கோயில் கருவறையின் வெளிப்புறம் பார்ப்பதற்கு கஜப்ருஷ்ட வடிவம் போலத் தோன்றும். ஆனால், இக்கருவறை விமானம் ஸ்ரீரங்கத்தைப்போல பிரணவாகார வகை விமானமாகும். வேறெங்கும் இல்லாத விதமாக கருவறைக்குள் மூன்று கல் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் ஒருசேர இத்தல இறைவன் பக்தர்களுக்கு அளிப்பதாக ஐதீகம்.

தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இத்தலத்திற்கு வந்து ஜுரஹரேஸ்வரரை வழிபட்டால் காய்ச்சல் நீங்கி, ஆரோக்கியம் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இத்தலத்தின் தீர்த்தம் முற்காலத்தில் வேப்பேரிக் குளம் என அழைக்கப்பட்டு, தற்போது உப்பேரிக் குளம் என அழைக்கப்படுகிறது. ஏகாம்பரேஸ்வரர் சன்னிதி தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

5. ஸ்ரீம்ருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில்:

ஸ்ரீம்ருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீம்ருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில்

இறவாத்தானம் மற்றும் இறவாதீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீம்ருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் 16 தூண்களைக் கொண்ட மகாமண்டபம் என்ற அமைப்போடு திகழ்கிறது. இராஜசிம்மனால் கட்டப்பட்ட இந்த கலைக்கோயிலின் தீர்த்தம் ஞானதீர்த்தம் என்ற வெள்ளைக் குளமாகும். இத்தலம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இரண்டு அடுக்குகள் கொண்ட இத்தலத்தின் விமானம் பிரம்ம சந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது.

மார்கண்டேயர், சுவேதன் முதலானோர் வழிபட்ட பெருமை உடையது இக்கோயில்.   மார்கண்டேயன், சுவேதன் முதலானோர் பிரம்ம தேவனின் அறிவுரைப்படி காஞ்சி மாநகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறவா நிலையை அடைந்துள்ளனர் என்பது தல வரலாறு. சுவேதனன் தனது மரணம் நெருங்கியதை உணர்ந்து இவ்விறைவனை வழிபட்டு மரணத்தை வென்றான்.

கருவறையில் லிங்கம் காட்சி தர, பின்பக்கச் சுவற்றில் சோமாஸ்கந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இறவாத்தானம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் துர்கை, கங்காதரர், காலசம்ஹாரமூர்த்தி முதலான சிற்பங்கள் காட்சி தருகின்றன. இக்கோயில் கம்மாளத் தெருவில் பச்சைவண்ணர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

6. ஸ்ரீபிறவாதீசுவரர் திருக்கோயில்:

ஸ்ரீபிறவாதீசுவரர் திருக்கோயில்
ஸ்ரீபிறவாதீசுவரர் திருக்கோயில்

காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பிய இராஜசிம்ம பல்லவனால் (கி.பி.700 முதல் கி.பி.728 வரை ஆட்சியாண்டு) அமைக்கப்பட்ட ஒரு ஆலயம் ஸ்ரீபிறவாதீசுவரர் ஆலயமாகும். இந்த ஆலயமும் மணற்கற்களைக் (Sand Stone) கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இரண்டு அடுக்கு விமானத்தை உடைய இக்கோயிலின் கருவறை எண்கோண வடிவத்தில் காட்சி தருகிறது. முகமண்டபம் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது.

வாமதேவ முனிவர் மறுபிறப்பிற்கு பயந்து பிறவாமை வரத்தினை அளிக்குமாறு தாயின் கருவில் இருக்கும்போதே இறைவனை வேண்டியதாகவும், இறைவன் கருவிற்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்குக் காட்சி தந்து காஞ்சிக்கு வந்து எம்மை பூஜித்தால் பிறவி அணுகாது என்று அருளியதாக வரலாறு. வாமதேவரும் பூமியில் பிறந்து பின்னர் காஞ்சிக்குச் சென்று லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றதாக தல வரலாறு. இதனாலேயே இக்கோயில் ஈசன் பிறவாதீசுவார் என்ற திருநாமம் பெற்றார்.

கருவறையில் லிங்கம் காட்சி தர, பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர், பிரம்மா விஷ்ணுவோடு காட்சி தருகிறார். தேவ கோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மனும் அமைந்துள்ளனர். வெளிப்புறச் சுவர்களில் துர்கை, கஜலட்சுமி முதலான தெய்வங்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் சிவராத்திரி அன்று மட்டுமே திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோயில் இதுவெனவும் கூறப்படுகிறது. இக்கோயிலும் கம்மாளத் தெருவில் பச்சைவண்ணர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை காஞ்சிபுரத்திற்குச் சென்று மேற்காணும் கலைப் பொக்கிஷங்களைக் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com