மெட்ராஸ்: இந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

madras-name-secrets
madras-name-secretscredits AI Image
Updated on

தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இன்றைய சென்னை, பல நூற்றாண்டுகால வரலாற்றைத் தன் மடியில் சுமந்து நிற்கிறது. இன்று நாம் காணும் இந்த மாநகரம், ஆரம்பத்தில் சோழ மற்றும் பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பல்லாவரம், எழும்பூர் போன்ற இடங்கள் தனித்தனியாகச் செயல்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. இப்போது இருப்பதுபோல, அவை அன்று ஒரு முழுமையான நகரமாகச் சேர்ந்து இருக்கவில்லை. ஒட்டுமொத்தப் பகுதியையும் குறிக்கப் பொதுவான பெயர்கள் இருந்தன; உதாரணத்திற்கு: புலியூர் கோட்டம், தொண்டை மண்டலம்.

1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய பிறகு, இந்தப் பெரிய நகரத்திற்கு 'மெட்ராஸ்' என்று பெயர் வைத்தார்கள். மெட்ராஸ் என்று பெயர் வந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  • மதராஸப்பட்டினம்: அங்கிருந்த ஒரு மீனவ கிராமத்தின் பெயரிலிருந்து இது வந்திருக்கலாம்.

  • போர்ச்சுக்கல் சர்ச்: போர்ச்சுக்கீசியர்கள் கட்டிய தேவாலயத்திற்கு 'Madra de Deus' என்று பெயர், அதிலிருந்து மெட்ராஸ் வந்திருக்கலாம் என்பது ஒரு வாதம்.

  • மதரஸா (Madrasa): ஆற்காடு நவாப் காலத்தில் அங்கிருந்த அரபுப் பள்ளியின் (Madrasa) பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

  • மீனவத் தலைவர்: அந்தப் பகுதியில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவத் தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.

ஆங்கிலேயர் காலத்தில் கோட்டைக்குத் தெற்குப் பக்கத்தில் இருந்த மக்கள் இப்பகுதியைச் 'சென்னப்பட்டணம்' என்றுதான் அழைத்தார்கள். இதற்குக் காரணம், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி கோட்டை கட்டுவதற்காக அந்த நிலத்தைச் சந்திரகிரி மன்னர்களின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி நாயக்கரிடம் இருந்து வாங்கியதுதான்.

நிலத்தைக் கொடுத்த வெங்கடபதி நாயக்கர், "என்னுடைய தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாக இந்த இடத்திற்குச் 'சென்னப்பட்டணம்' என்று பெயரிட வேண்டும்" என்ற நிபந்தனையுடன் நிலத்தைக் கொடுத்தார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு அந்த வார்த்தை உச்சரிக்கக் கடினமாக இருந்ததால், அதிகாரப்பூர்வமாக 'மெட்ராஸ்' என்றே வைத்தனர். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச்சென்ற பிறகும், ஆங்கிலத்தில் 'மெட்ராஸ்' என்றும் தமிழில் 'சென்னை' என்றும் புழக்கத்தில் இருந்தது.

இதையும் படியுங்கள்:
தஞ்சை மண்ணின் கலைப்பொக்கிஷம்: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியத்தட்டு!
madras-name-secrets

1996-ஆம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாக அனைத்து மொழிகளிலும் 'சென்னை' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1639-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த நில உரிமைப் பத்திரத்திலேயே (Grant) 'சென்னப்பட்டணம்' மற்றும் 'மதராஸப்பட்டினம்' ஆகிய இரண்டு பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com