செஞ்சிக் கோட்டை குறித்து சில சுவாரசியத் தகவல்கள்!

செஞ்சிக் கோட்டை குறித்து சில சுவாரசியத் தகவல்கள்!

விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது செஞ்சி கோட்டை. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்தக் கோட்டை குறித்த பத்து சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

சோழர் காலத்தில், ‘சிங்கபுரி’ என்றழைக்கப்பட்டது செஞ்சி. இதுவே திரிந்து செஞ்சி என்று ஆனது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின் ஆனந்தகோன் என்ற குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13ம் நூற்றாண்டில் நிறுவினார்.‌

அதைத் தொடர்ந்து 13ம் நூற்றாண்டிலேயே கோன் சமூக ராஜவம்சத்தால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. ஆனந்த கோன் எனும் அரசரால் கட்டப்பட்டு, பின்னர் கிருஷ்ண கோன் எனும் அரசரால் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோட்டை மூன்று மலைகளை அரணாகக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டு, மிகப்பெரிய அரணாக விளங்கியது. செஞ்சி கோட்டை மட்டும் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்திருக்கிறது.

செஞ்சி கோட்டை சத்ரபதி சிவாஜியால், ‘இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை’ என்று பாராட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை, ‘கிழக்கின் ட்ராய்’ என்று அழைத்தனர்.

வீர சிவாஜியின் கூற்றுக்கிணங்க, 1690 முதல் 1697ம் ஆண்டு வரை, மாபெரும் முகலாயர்கள் படை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டபோதும், கிட்டத்தட்ட 3000 நாட்கள் அவர்களால் உட்புக முடியவில்லை. வீர சிவாஜியின் இளைய மகன் ராஜாராம் இங்கு தங்கி இருந்து, பின்னர் தப்பித்து மகாராஷ்டிரா சென்று மன்னனாகப் பதவி ஏற்றார். எனவே, மராத்தியர்களுக்கு இது ஒரு புகலிடமாக விளங்கியது.

மராத்தியர்களிடமிருந்து 1698ல் முகலாயர்வசம் சென்ற பின்னர் முகலாயர்கள் சார்பில் படைத்தளபதி ஸ்வரூப் சிங் இந்தக் கோட்டையை ஆண்டு வந்தார். அவருக்குக் கப்பத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.‌ பின்னர் 1714ம் ஆண்டு அவரது மகன் ராஜா தேசிங்கு பட்டத்துக்கு வந்தார். அவரிடம் ஆற்காட்டு நவாப் கப்பம் செலுத்துமாறு கேட்க, போர் மூண்டது. 80,000 குதிரைகளைக் கொண்ட நவாப் படையை ஆயிரத்துக்கும் குறைவான குதிரை வீரர்கள் கொண்ட சிறிய படை மோதி, ராஜா தேசிங்கு வீர மரணம் அடைந்தார். இது இன்றும் நாட்டுப்புறப் பாடல்களில் சிறப்பித்துப் பாடப்படுகிறது.

எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், நெற்களஞ்சியம், படை வீரர்கள் பயிற்சிக் கூடம், சிறைச்சாலை, செஞ்சியம்மன் கோயில், குளம் என பலவற்றை உள்ளடக்கியது இந்தக் கோட்டை.

இங்கிருந்த அருமையான நீர் மேலாண்மை, பெரும் படையெடுப்புகளை தைரியமாகக் கையாள உதவியது.

இந்தக் கோட்டை நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான், மராத்தியர்கள், முகலாயர்கள், ஆற்காடு நவாப், பிரஞ்சு படை, ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு அரச வம்சங்களுக்கு மாறிய பின்னர், ஹைதர் அலிக்கு சொந்தமாக இருந்து, பின்னர் கடைசியில் ஆங்கிலேயர் வசம் வந்தது. ஆங்கிலேயர்கள் இதனை முக்கியமான கோட்டையாகப் பயன்படுத்தவில்லை. அதனால் அது, தனது முக்கியத்துவத்தை இழந்தது.

விஜயநகர நாயக்கர்கள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் முக்கியமாக இயங்கினர். அவை: தஞ்சை, மதுரை, செஞ்சி. இதில் செஞ்சி நாயக்கர்கள் இந்தக் கோட்டையை பலப்படுத்தி ஆட்சி செய்தனர்.

1921ம் ஆண்டு, இது முக்கியமான தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. வரலாற்றுப் பெருமைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட செஞ்சி கோட்டையை சமயம் கிடைத்தால் நீங்களும் ஒரு முறை சென்று கண்டு களித்து வாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com