ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரம் மாமல்லபுரம். இது மஹாபலிபுரம், மல்லை, மகாலிபுரம் எனும் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் பல அற்புதமான சிற்பங்கள் அமைந்துள்ளன. குடைவரைக் கோயில்களும் ஏராளமாக அமைந்துள்ளன.
மாமல்லபுரத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு சிற்பத் தொகுதியானது, ‘அர்ஜுனன் தபசு’ என்று அழைக்கப்படுகிறது. ஸ்தல சயனப் பெருமாள் கோயிலின் பின்பகுதியில் அர்ஜுனன் தபசு சிற்பங்கள் அமைந்துள்ளன. இந்த சிற்பத் தொகுதி 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உடைய இருபெரிய பாறைகளில் பலவிதமான உருவங்களுடன் வடிக்கப்பட்டுள்ளன.
சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைச் சிற்பங்கள் அடங்கிய இந்த அர்ஜுனன் தபசு சிற்பத் தொகுப்பானது பல்லவர்கள் இந்த உலகிற்கு அளித்த கொடை என்றால் அது மிகையாகாது. இந்த பெரிய பாறையின் நடுவில் இயற்கையாகவே ஒரு இடைவெளி அமைந்து இதை இரண்டு பாகங்களாகப் பிரித்துக் காட்டுகிறது. இதில் தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாக கன்னிகை, யானை, சிங்கம், சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் என அனைத்து வகையான சிற்பங்களும் காணப்படுகின்றன.
இந்த சிற்பத் தொகுதியில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு மனித உருவமும், அவனுக்கு அருகில், சூலாயுதத்தை ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவன் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது. இது பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக அர்ஜுனன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்த கதையைக் குறிப்பதாகக் கருதி சிலர் இதனை, ‘அர்ஜுனன் தபசு’ என அழைக்கின்றனர். வேறு சிலர் இந்த சிற்பத் தொகுதிகளை, ‘பகீரதன் தவம்’ என்று அழைக்கின்றனர்.
தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினானாம். ஆனால், கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்தானாம். சிவன் கங்கையைத் தனது தலையில் தாங்கி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பது புராணக் கதை.
இந்த முழு சிற்பத் தொகுதியும் நான்கு நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலே உள்ளவை விண்ணுலகத்தையும் அடுத்ததாக விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் இடைப்பட்ட உலகத்தையும் மூன்றாவதாக மண்ணுலகையும் கீழ்ப்பகுதியில் பாதாள உலகத்தையும் குறிப்பிடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டைகளில் காணப்படும் அகழி போன்ற அமைப்பும் இந்த சிற்பத் தொகுதியின் கீழ் காணப்படுகிறது. இப்பகுதியில் மழைக்காலங்களில் பொழியும்.
நீரானது தேங்காமல் வடியும்படியான அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் இந்த அகழியில் தண்ணீர் தேங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், உடலின் கீழ்ப்பகுதி பறவை மேற்பகுதி மனித அமைப்பில் காட்சி தரும் கின்னரர்கள், வேடர்கள் அவர்கள் வேட்டையாடிய பொருட்களை கையில் எடுத்துவருவது, ஒரு திருமால் கோயிலின் முன் அமர்ந்திருக்கும் முனிவர்கள் என பலதரப்பட்ட காட்சிகள் அழகுற புடைப்புச் சிற்பங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.