

அந்தக் காலங்களில் கிராமத்து மண் வீடுகள் ஒரு சதுர வரிசை அல்லது நீளமான வரிசையில் இருக்கும். அதில் வாழ்ந்த மக்கள் வயல்களில் விளையும் தானியங்கள் தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகளை பங்கிட்டு ஒருவருக்கொருவர் உதவிகளை செய்து நிம்மதியாக வாழ்ந்தனர்.
அறிவியல் பெருகப் பெருக மனிதர்களுக்குள் இருந்த இடைவெளி அதிகமாகி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக்கூட அறியாமல் வாழும் நிலைதான் இன்று.
ஆனால் இந்தக் காலத்திலும் ஒரே சாலையில் ஒரு கிராமம் முழுவதும் வசிப்பது பெரும் அதிசயத்தை தருகிறது. அந்த ஆச்சரிய கிராமம் உலகில் எங்கிருக்கிறது தெரியுமா?
போலந்து தலைநகர் வார்சாவிலிருந்து 180 மைல் தெற்கே
ஒரு சிறிய நகரத்தில் உள்ள சுலோசோவா (Suloszova) எனும் கிராமம்தான் அது. Kraków நகரத்திலிருந்து 29 கிமீ தொலைவில் அரிதான சிறப்பு கொண்டு உள்ளது இந்த கிராமம். சுமார் 6,000 மக்கள்தொகை கொண்ட அவர்கள் அனைவரும் ஒரே தெருவில் வசிப்பதுதான் வியக்கத்தக்க விஷயம்.
போலந்தின் இதயப்பகுதியில் ஒரே சாலை நீண்ட வீதியாக (linear village) ஒரே கிராமமாக உள்ள இதன் 9 கிலோமீட்டர் நீளமான சாலை இருபக்கமும் நீல–சிவப்பு கூரைகள் வேய்ந்த அழகிய வீடுகள், அதன் பின்னால் கோதுமை உள்ளிட்ட பயிர்களுடன் பச்சைப் பசேலென்ற விவசாய நிலங்கள் சூழ இது ஒரு அழகான “patchwork” ஒட்டு வகை நிலக்காட்சியை உருவாக்குகிறது இந்த கிராமம்.
போலந்தின் வரலாற்று குடியேற்ற அமைப்பில் முக்கியமான வகைதான் இந்த (linear village) வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஒரே நேர்கோடு அல்லது தெரு/சாலை /நதி/வழித்தடம் ஆகியவற்றைப் பின்பற்றி வரிசையாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும். சீரான, ஒழுங்கான பரப்பளவு பிரிப்பு, ஒவ்வொரு வீட்டிற்கும் சாலை, மாடம், விவசாய நிலம் என்ற அமைப்புடன் விளங்கும் இந்த கிராமங்களில் பெரும்பாலும் கருப்பு மண் விவசாய பகுதிகளில் காணப்படும்.
இது பொதுவாக 2 விதமாக இருக்கும்: Ulicowka (street village) எனப்படும் விதத்தில் வீடுகள் ஒரு முக்கிய நேர்த்தெருவின் பக்கங்களில் அமைந்திருக்கும். வீடுகளின் பின்னால் நீளமான நெறிய strip fields (நீளப் பண்ணைகள்) என போலந்தில் பரவலாக காணப்படும் மிகவும் பொதுவான வடிவமாகிறது.
இரண்டாம் வகையான Rzędówka (row village) வீடுகள் ஒரே வரிசையில் அமைந்திருக்கும். ஆனால் முக்கிய தெருவில்லாமல் குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட "நிர்வகிக்கப்பட்ட" கிராமமாக இருக்கும்.
இந்த சாலை கிராமங்கள் சுமார் 12–15ஆம் நூற்றாண்டுகளில் போலந்தின் “அரண்மனை மற்றும் சர்ச்சுக் குடியேற்ற விரிவாக்கத்தின்” போது பரவலாக நிறுவப்பட்டது என்றும் நிலத்தை அளவிடப் பயன்பட்ட ஜெர்மன் லோக்கேஷன் சட்டம் (German Law villages) இதை வடிவமைக்க பங்கு வகித்தது எனவும் கூறப்படுகிறது.
இப்போது மீண்டும் சுலோசோவா (Suloszova) கிராமம் வருவோம். கோட்டைகளும், சாலைப்பக்கமான பாறை கோபுரங்கள், அழகான இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் போலந்தின் மிகச்சிறிய பூங்காவான ய்சோவ் தேசிய பூங்கா — Ojców National Park உள்பட பயிர் நிலங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு கண்களை விரிக்க வைக்கும் காட்சி களாகும் என்பது நிச்சயம்.
சுமார் 5,800–6,000 மக்கள் வாழும் இந்த கிராமத்தில் உள்ள எல்லோருமே சாலைமேலே அல்லது அருகில் வசிக்கிறார்கள். இந்த ஒரு சாலையில் மட்டுமே கட்டுமானம். இதன் காரணமாக ஒன்று பட்ட community உணர்வு வலுவாக உள்ளது. இது ஒருதனித்துவமான சமூக வாழ்க்கையை அனுபவிக்க ஏதுவாகிறது.
இங்கு பரபரப்பான பெரிய மால் மற்றும் அதையொத்த வேலை வாய்ப்புகள் போன்ற நகரப் பயன்பாடுகள் இல்லாததால் நகர வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையில் விருப்பமுள்ளோருக்கு இது சிறந்த இடமாக உள்ளது. விவசாயம், நாட்டுப்பயிர்கள், இயற்கை சூழல், மெதுவான தளத்தில் வாழ்வு என இந்த கிராமம் முற்றிலும் வேறுபட்ட, இயற்கைமயமான அனுபவத்தை வழங்குகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற விசித்திரங்கள் இருந்தாலும் பண்டைய சரித்திரம், இயற்கை விவசாயம், சுற்றுலா ஈர்ப்புடன் உள்ள மக்கள் ஒற்றுமையுடன் வசிக்கும் உலகின் ஒரே நீண்ட சாலை இதுவாகத்தான் இருக்கும்.