சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அனைவரும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் நடந்தே சென்றார்கள். இதைத்தான் அந்த காலத்தில் 'நடராஜா சர்வீஸ்' என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள். அப்போது பெரும்பாலோர் பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் சைக்கிள் மட்டுமே. 1975 ஆம் ஆண்டுகளில் வசதி படைத்தவர்கள் சைக்கிளில் ஒரு சிறிய மோட்டாரைப் பொருத்தி இயக்கத் தொடங்கினார்கள். அதிகபட்சமாக மணிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். சைக்கிளை கஷ்டப்பட்டு மிதிக்க இயலாதவர்கள் இதைப் பயன்படுத்தலாம், அவ்வளவுதான். இதில் வேகமாக எல்லாம் செல்ல முடியாது.
காஞ்சிபுரத்தில் எங்களுடைய நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வரும் போது ஒரு புதுமாதிரி மோட்டார் சைக்கிளில் வருவார். அப்போது வருடம் 1978. அதன் பெயர் ஸ்வேகா (Suvega). பெரிய சக்கரங்கள், ஒரு ஹேண்ட்பார், ஹெட்லைட், ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருப்பதைப் போல ஒற்றை இருக்கை. இருக்கைக்குக் கீழ் பெட்ரோல் டேங்க். நடுவில் பெடல். இதுதான் அன்றைய மோபெட். எனக்குத் தெரிந்த முதல் மோபெட் இதுதான். ஸ்வேகா சூப்பர் 50 (Suvega Super 50) என்ற பெயரில் தயாரானது. அந்நாட்களில் இதை வைத்திருந்தால் தனி மரியாதை. 1980 வரை இந்த மோபெட்டைப் பலர் பயன்படுத்தினார்கள்.
இதே காலகட்டத்தில் எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் டார்ட் (Dart) என்றொரு மோபெட்டில் பள்ளிக்கு வருவார். டார்ட் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். அது மோட்டார் சைக்கிள் போலவும் இல்லாமல் மோபெட்டைப் போலவும் இல்லாமல் ஒரு அமைப்பில் இருக்கும். இதன் பெட்ரோல் டேங்க் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் மாதிரி செவ்வக வடிவத்தில் முன்புறத்தில் அமைந்திருக்கும். மோட்டார் சைக்கிளில் உள்ளது போலவே அதே இடத்தில் இந்த வண்டிக்கும் டேங்க் இருப்பதால் வண்டியில் அமர காலை பின்புறம் தூக்கிப்போட்டுத்தான் வண்டியில் ஏற வேண்டும். க்ளெட்ச்சை அழுத்தி பெடல் செய்துதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும். அப்போது பயன்பாட்டில் இருந்த மற்றொரு மோபெட் லூனா (Luna). பார்ப்பதற்கு மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்கும். இதையும் பெடல் செய்துதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
1980 களில் மிகப்பிரபலமாக இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் ராஜ்தூத் நிறுவனத்தின் பாபி. இது மிகவும் உயரம் குறைந்ததாகக் காணப்படும். ஸ்கூட்டர் சைசில் இரண்டு சக்கரங்கள். பெட்ரோல் டேங்க் இந்த வண்டியின் அளவை ஒப்பிடும் போது சற்றே பெரியது, கிக்ஸ்டாட்டர் தனியாகவும் கியர் ராட் தனியாகவும் இருக்கும். இது அந்நாளைய இளைஞர்களின் கனவு பைக்காகத் திகழ்ந்தது. இதன் பின்னர் டிவிஎஸ் 50 மோபெட் வெளி வந்து ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இவர்களே தொடர்ந்து சேம்ப் (Champ), எக்செல் சூப்பர் (TVS XL Super) போன்ற வெற்றிகரமான மோபெட்டுகளை தயாரித்தார்கள். ஹீரோ மெஜஸ்டிக் என்றொரு மொபெட்டும் பலரால் உபயோகிக்கப்பட்டது.
மக்களால் 1985 களில் மிகவும் விரும்பப்பட்ட ஒரு மோபெட் மோபா (Mofa). மிக எளிமையான வாகனம். விலை குறைவு மற்றும் அதிக மைலேஜ் கொடுத்த காரணத்தினால் பலர் இதை விரும்பி வாங்கிப் பயன்படுத்தினார்கள். அப்போது இதன் விலை 3,500 ரூபாய். இதே காலகட்டத்தில் பஜாஜ் நிறுவனம் சன்னி என்றொரு ஆட்டோ கியர் வாகனத்தை வித்தியாசமான டிசைனில் வெளியிட்டது.
அக்காலத்தில் பிரபலமாகத் திகழ்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஜாவா (Jawa). இதனுடைய பெட்ரோல் டேங்க் சற்றே வித்தியாசமாக இருக்கும். இதே போல மற்றொரு மோட்டார் சைக்கிள் யெஸ்டி (Yezdi). இதற்குப் பின்னர் அக்காலத்தில் வசதி படைத்தவர்கள் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் ராஜ்தூத் (Rajdoot). அதிக வசதி படைத்தவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் புல்லட். ஆங்காங்கே பலர் ஸ்கூட்டர்களையும் பயன்படுத்தி வந்தார்கள். தற்காலத்தில் பல வகையான ஸ்கூட்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் வந்துவிட்டன.