காதல் சின்னம் தாஜ்மஹால் – இதன் பின்னணி காதல் கதை தெரியுமா?

காதல் சின்னம் தாஜ்மஹால் – இதன் பின்னணி காதல் கதை தெரியுமா?

காதல் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ்மஹாலை உருவாக்கியது மும்தாஜ் - ஷாஜகான் ஆகியோரது காதல் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால், அதன் பின்னே இன்னொரு காதல் கதை வாழ்வது யாருக்கெல்லாம் தெரியும்?

மும்தாஜை இழந்த சோகத்தின் உச்சியில் திக்கு முக்காடிகொண்டிருந்தான் ஷாஜகான். அவன் துக்கத்தில் அனைவரும் பங்கேற்றனர். அரண்மனை அமைதியானது, பறவைகள் இறகுகளை விரிக்கவில்லை. 7 லட்சம் வீரர்களின் தலைவன் மும்தாஜின் கல்லறை அருகே உணர்வின்றி கல்லறைக்கு சமமாய் கல்லாய் நித்தம் அமர்ந்திருந்தான். அரச வேலைகளும் நின்றன. இந்த நிலையின் விளைவை எண்ணிப் பயந்த ஷாஜகானுடைய நண்பன் ஆசிப், வைத்தியரை அழைத்தான். சிங்கமென கர்ஜித்து கொதித்து எழுந்த ஷாஜகான் ஆசிப்பை ஏசிவிட்டு தன் நிலையின் விடை வைத்தியம் இல்லை; ஓவியம் என்று ஒரு திசையை காட்டினான்.

கையில் ஓவியத்தை சுருட்டி எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் சொல்லப்படாத காதல் கதையின் நாயகன் ஹரின்.

அவன் எடுத்து வந்த ஓவியத்தின் நான்காவது மாதிரியைப் பார்த்தும் ஷாஜகான் திருப்தி அடையவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய ஹரின்  ஓவியத்தை தூரம் போட்டுவிட்டு தன் புதுமனைவி திலோத்தியோடு நேரங்கள் செலவழிக்க தொடங்கினான். அன்று ஒவ்வொரு நிமிடமும் காதலால் கரைந்தது, இல்லை காதல் காலத்தை கரைத்தது. வீட்டு வேலைகளில் உதவி செய்தும், கை கால்கள் அமுக்கியும், அவளை ஓவியம் ஆக்கியும், கிடைத்த வழி எல்லாம் காதலை  கொடுக்கத் தொடங்கினான். கடலுக்கும் எல்லை கரை. ஆனால், அன்று மகிழ்ச்சியின் எல்லையை அவர்களது காலம் தேடிக்கொண்டிருந்தது. கதவு தட்டும் சத்தம். திலோத்தியின் தலையை கோதிவிட்டிருந்தவன் கதவை திறக்கச் சென்றான் ஆசிபின் ஓலை!!

அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்த ஹரின் திலோத்திவுக்கு அதனை படித்ததும் மேலும் அதிர்ச்சி உற்றான். . “ஐந்தாவது மாதிரி இறுதி மாதிரியாக இல்லை என்றால் தலை துண்டிக்கப்படும்”.

இரவு முழுவதும் பகலுக்கு நேர்மாறாக இருந்தார்கள். ஹரின் ஓவியம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். திலோத்தி அவனைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். காதல் விடை அளித்தது. மும்தாஜ் அழகானவள். ஷாஜகான் அவளை இழந்த துயரத்தில் உள்ளான். இருவரின் காதல் சின்னம்மாயிருக்க வேண்டும் என்றால் அழகும் துயரமும் கலந்த ஓர் ஓவியமாக இருக்க வேண்டும். ஷாஜகான் நிலைமை ஹரினுக்கு தெரியும். ஆனால், ‘கலை’ என்பது உணர்வில் பிறப்பது.

மறுநாள் அரசவைக்கு சென்றாள், திலோத்தி. அரசன் முன் நின்று ஒரு மாதம் அவகாசம் கேட்டாள் ஓவியம் முடிப்பதற்கு. கொடுத்த நேரத்தை சுட்டிக்காட்டினான் ஷாஜகான். மௌனம் காத்த திலோத்திக்கு “சரி! ஒரு மாத அவகாசம் தருகிறேன்” என்று அனுமதி பறந்தது.

அன்றிலிருந்து ஒரு மாதம் ஹரின் ஓவியக்கலையை தள்ளி வைத்தான். பலகையில் ஒட்டரை படர்ந்தது. திலோத்தி திகட்ட திகட்ட காதலை அவனிடம் விதைத்தாள். காதல், மகிழ்ச்சி என அனைத்தையும் கலவையாக்கி ஊட்ட ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு தினமும் அந்த காதலுக்கு புதுப்புது அர்த்தங்களைத் தேடி கண்டுபிடித்தான். கலைக்கு தேவை காதல் என்பது ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டிருந்தாள் திலோத்தி. உணர்ந்துகொண்டிருந்தான் ஹரின். இரவு, பகல் வித்தியாசம் அறியாமல், பசி தெரியாமல், சூரியன், நிலா காணாமல் யமுனா நதிக்கரை அலை சத்தம் கேட்காமல் காதலில் மூழ்கினர்.

ஒரு மாதம் முடிந்தது. அடுத்த நாள் தாஜ்மஹாலின் ஓவியம் அரசவையை வந்தடைந்தது. அரசர் பாராட்டி பரவசமடைந்து ஓவியனுக்கு பல பரிசுகளை அளிக்க கட்டளையிட்டார். அரசவை அமைதியானது. ஷாஜகான் ஆலிப்பை பார்த்தார். சொல்ல முடியாத துயரம். யமுனை நதி நேற்று இரவு அதனிடம் தஞ்சம் அடைந்த திலோத்தி உடலை கரை ஒதுக்கியது. கடிதம் பார்த்து திகைத்து நின்ற ஹரின் ஷாஜகான் நிலைமையை அறிந்தான். ஷாஜகானாகவே மாறி ஓவியத்தை வரைந்தான். துக்கமும் அழகும் கலந்து தாஜ்மஹால் ஓவியம் உருவானது. ஆனால் ஷாஜகானைபோல் அவன் தாஜ்மஹால் கட்டவில்லை. யமுனையில் விழுந்து திலோத்தியுடன் சென்று காதலையே கல்லறையாகக்  கட்டினான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com