
கபடி என்றும், சடுகுடு என்றும், பலிஞ்சடுகுடு என்றும் அழைக்கப்படுகின்ற நமது தமிழ்நாட்டின் தேசீய விளையாட்டின் பின்புலத்தைச் சற்றே ஆராய்ந்தோமானால், ஆச்சரியமான முடிவுகள் வந்து நம்மைப் பிரமிக்கச் செய்கின்றன!
ஏறு தழுவுதல் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் தமிழக வீர விளையாட்டு! அது ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது! ஜல்லிக் கட்டில் காளைகளைப் பிடித்து அடக்க ஏதுவான பயிற்சியைப் பெறுவதற்காகவே, அக்காலத்தில் கபடியை விளையாட ஆரம்பித்தார்களாம்.
கை+பிடி=கபடி என்று ஆனதாம்! கைகளைப் பயன்படுத்தி எங்கே, எப்படி, எவ்வாறு பிடித்தால் எதிரியை வெற்றி கொள்ள முடியும் என்பதற்கான நுணுக்கங்களைப் போதிப்பதே கபடியின் நோக்கம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது!
இங்கு நாம் இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலை நாடுகளில் காளைகளுடன் மோதுபவர்கள், அவற்றைக் கத்தியால் குத்தி ரணப்படுத்துவார்கள். ஆனால் நமது ஜல்லிக்கட்டிலோ, கைகளே ஆயுதங்கள்!
காளைகளை அடக்குவது மட்டுமே போட்டியின் வெற்றியே தவிர அவற்றைப் புண்படுத்துவதோ, வீழ்த்துவதோ அல்ல!
கைகளைச் சாதுரியமாகப் பயன்படுத்துவதற்கும், எதிரியின் பலத்தையும், பலவீனத்தையும் நன்கு எடை போட்டு, அதற்குத் தகுந்தவாறு நமது கைகளைப் பயன்படுத்தி, எதிரே உள்ளவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கும் பயன்படும் நுட்பங்களைப் பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டால், வெற்றி நிச்சயம்!
கேரளாவிலும், தென் தமிழகத்திலும் வர்மக் கலை இதற்காக நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உரிய இடங்களில், சரியான வேகத்தில் நரம்பு மண்டலங்களில் தாக்கி, எதிரியை நிலைகுலையச் செய்து, குறிப்பிட்ட அந்த உறுப்புகளின் செயல்பாட்டைக் குறைத்தோ, முழுவதுமாக நிறுத்தியோ விடுவதை வர்மக் கலை செய்வதாக, உணர்ந்தோர் உணர்த்துவர்! இந்தியன் தாத்தா அதனைத்தான் பின்பற்றித் தவறு செய்தவர்களைத் தண்டித்தார்-திரைப்படத்தில்!
போருக்குத் தயாராவோர் வாள், வில், வேல் போன்ற பயிற்சிகளோடு எதிரியின் வியூகத்தை அனுமானித்து அதனைத் தகர்க்கும் விதமாகச் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் வெற்றி உறுதியாகும்!
பாரதப்போரில் பல வியூகங்கள் பின்பற்றப்பட்டனவாம்! பதினேழு விதமான வியூகங்கள் போர்க்களத்தில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை எளிதாக மனத்தில் நிறுத்தப் பாடலாக்கிக் கொடுத்துள்ளேன்.
வியூகங்கள் பலவென்றாலும்
வியத்தகு பாரதத்தில்
பதினேழு வியூகங்களைப்
பதினெட்டு நாட்போரில்
செய்தே போரிட்டதாய்
செப்புமே நம்மிதிகாசம்!
அசுரம் தேவம்
அழகிய பிறைச்சந்திரன்
வான்மண்டலம் வஜ்ராயுதம்
வளைந்த நல்கொம்பு
வந்துபோகும் கடலலை
பூமாலை பூத்ததாமரை
முதலை ஆமை
முழுதான நாரை
முத்தான கருடன்
திரிசூலம் வண்டி
சக்கரம் ஊசி
என்றே வியூகங்களை
ஏகமாய் வகுத்துவைத்தே
போரிட்டார் நம்முன்னோர்!
சரி! இப்பொழுது கபடிக்கு வருவோம். கபடியும் வியூகங்களை அடிப்படையாகக் கொண்டதே. சில டீம்கள் சக்கர வியூகம் அமைத்துக் கொள்வார்கள்! அதாவது பாடி வரும் எதிரியை உள்ளே நன்றாக இறங்க வைத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரமாகச் சுற்றி, அவுட்டாக்கி விடுவார்கள். சிலர் பிறைச் சந்திரன் வடிவத்தில் நின்று பாடி வரும் எதிரியை உள்ளே முன்னேற விடாமல் தடுப்பார்கள்! சிலர் பறக்கும் கருட வடிவத்தை அமைத்துக் கொள்வார்கள்.
கருடனின் இறக்கை போன்று, இரு புறமும் வலுவானவர்கள் நின்று எதிரியைப் பிடித்துத் தோற்கடிப்பார்கள். பாடி வருபவரின் பலம், திறமை இவற்றைப் பொறுத்தே வியூகம் வகுக்கப்பட வேண்டும்.
இதிலிருந்து நமது கவனத்திற்கு வருவது என்னவென்றால், கபடி என்பது ஏதோ மூச்சை விடாமல் ஓடிப்போய் எதிரியைத் தொட்டுத் திரும்பும் சாதாரண விளையாட்டல்ல. அதில் வர்மம் இருக்கிறது; வியூகம் இருக்கிறது; இவற்றைத் திறமையாகப் பயன்படுத்தும் நுணுக்கம் இருக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே நமது கபடி வீரர்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் வெல்வது எளிதாகும். பலம் மட்டும் வெற்றிக்கு வழி வகுத்து விடாது. அந்தப் பலத்தை மிக நுணுக்கமாகப் பயன்படுத்தும் ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சியின்போதே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
கபடி ஒரு பயிற்சிதான். ஆம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல! சகலத்திற்கும் அந்தப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது. வாழ்க்கையைச் சிறப்பாக்கும் எதுவும் உயர்ந்ததே!
கபடியும் உயர்ந்ததே! எனவேதான் அது நமது தமிழகத்தின் தேசீய விளையாட்டு!
தேசீய விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழ்வோம்!-வியூகம் வகுத்து!