அயோத்தியில், கோசலை புதல்வனாக, தசரத ராமனாகப் பிறந்த போது அந்நகரம் எப்படி இருந்திருக்கும் என்பதை நமக்கு உணர்த்தியது ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடந்த ராம் லல்லாவின் பிராணப் பிரதிஷ்டை வைபவம்.
நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் கூட, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமர் ஆலயத்தினுள் தமிழ்நாட்டின் மங்கல வாத்தியமான நாதஸ்வரமும் வட இந்திய ஷெனாய் மட்டுமே ஸ்ரீராமர் முன்பு வாசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் ஸ்ரீராமர் பிரதிஷ்டை வைபவத்தில் நமது திருவாரூர் மண்ணிலிருந்து நாதஸ்வரக் கலைஞர் பிரகாஷ் இளையராஜா அவருடைய 9 வயது மகன் கவின் இருவரின் நாதஸ்வர நிகழ்ச்சி பிரதமர் மோடி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. R. கணேசன் உடன் நாதஸ்வரம் இசைக்க, கோவிந்தராஜ் தவில் இசைத்தார்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத இந்த நிகழ்வு குறித்து பேசிய நாகஸ்வர கலைஞர் பிரகாஷ் இளையராஜா கூறியதாவது, “மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாதமியின் 2020 ஆம் ஆண்டிற்கான ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்றேன். அரசு நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நாகஸ்வரம் இசைக்க சங்கீத நாடக அகாதமி எங்களுக்கு வாய்ப்புகள் வழங்கி வருகிறார்கள். தலைநகரில், ஜி20 உச்சி மாநாட்டின் போது, இந்தியாவிலிருந்து பல வாத்தியக் கலைஞர்களை ஒருங்கிணைத்து ‘பாரத் வாத்யோத்சவம்’ என்ற நிகழ்ச்சியிலும் உலகத் தலைவர்கள் முன்னிலையில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அயோத்தியில் கோவில் உள் பிரகாரத்தில் அமர்ந்து வாசித்தது மிகப்பெரிய பாக்கியம். மறக்க முடியாத, பரவசமான அனுபவம்.ஸ்ரீராமர் மீதான பல கீர்த்தனங்களை வாசித்தோம். தீபாராதனையின் போது மூதறிஞர் இராஜாஜி அவர்கள் எழுதிய ‘குறையொன்றும் இல்லை’ பாடலை வாசித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தந்தது.
பிரதமர் பூஜை முடிந்து வெளியே வரும் வேளையில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ இசைத்துக் கொண்டிருந்தோம். நின்று வாசிப்பைக் கேட்டு, என் மகன் பெயரையும் கேட்டு ஆசீர்வதித்தார். ராமர் சன்னிதியில் அமர்ந்து சிறப்பு தரிசனமும் பெற்றோம். இது மாதிரி சந்தர்ப்பம் மீண்டும் அமையுமா என்பது நிச்சயம் கேள்விக்குறிதான்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்” பிரகாஷ் இளையராஜா.
நாதஸ்வரக் கலைஞர் சின்னமனூர் விஜய் கார்த்திகேயன், தவில் கலைஞர் விராலிமலை கார்த்திக் ஆகியோர் அகாதமி ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்டு,
நம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாதஸ்வர இசையை அயோத்தி ஸ்ரீ ராமபிரான் ஆலயத்தில் வழங்கியது நம் தமிழ் மண்ணுக்கும், நாதஸ்வரம் தவிலுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என்று தமிழகத்திலிருந்து பங்கேற்ற பிற கலைஞர்களைப் பற்றியும் நினைவுகூற தவறவில்லை பிரகாஷ் இளையராஜா.