தஞ்சை பெரியகோயில் ரகசியங்களும் மர்மங்களும்: ஒரு அலசல்!

Tanjore temple mystery
Tanjore temple mysteryImage Credits: World History Encyclopedia
Published on

லகிலேயே கோயில்கள் கட்டுவதில் சிறந்து விளங்கியவர்கள் என்று சொன்னால், அது தமிழர்கள்தான். இந்தியாவிலே இதுவரை கட்டப்பட்ட கோயில்களிலேயே மிகப் பெரியது தஞ்சை பெருவுடையார் கோயில்தான் என்று பிரிட்டானிய தகவல் களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலை பார்க்கும் பது ஏற்படும் ஈர்ப்பையும், மெய்சிலிர்ப்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தஞ்சை பெரியகோயில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய பொக்கிஷமாகும். இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ரகசியத்தையும், மர்மத்தையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருவர் பேசிக்கொண்டிருப்பது போன்ற ஓவியம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த ஓவியத்தில் தாடி வைத்திருப்பவர், ராஜராஜனின் குரு கருவூர் தேவர் என்றும் அவருக்கு அருகில் இருப்பது ராஜராஜ சோழன் என்றும் இணையதளங்களில் காதுவழி செய்தியாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது தவறான கருத்து. அந்த ஓவியத்தில் இருக்கும் இருவரும் சனகாதி முனிவர்கள். ராஜராஜனின் ஓவியம் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று தில்லை பொன்னம்பலத்தில் தனது மூன்று மனைவியுடன் வழிபடும் காட்சியும், இன்னொன்று தஞ்சை பெரியகோயில் ஈசன் முன்பு அமர்ந்து வழிபடும் காட்சியும்தான். எனவே, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஓவியத்தில் இருப்பது ராஜராஜனும், கருவூர் தேவனும் அல்ல.

கோயில் சிற்பங்களில் விமானத்தின் உச்சியில் தொப்பி போட்டுக்கொண்டு வெள்ளைக்காரர் போன்ற உருவம் ஒன்று காணப்படும். வெள்ளைக்காரர்கள் நம்மை ஆட்சி செய்யப் போவதை அன்றே கணித்தார் ராஜராஜன் என்று கூறியிருப்பார்கள். ஆனால், இதுவும் தவறு. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்தச் சிலையை பிற்காலத்தில் எவரேனும் சேர்த்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கோயிலுக்கு முன்பு பிரம்மாண்டமான நந்தி சிலை உள்ளது. இது ராஜராஜன் வைத்தது என்றும், அந்த நந்தி ஆண்டுதோறும் ஒரு அங்குலம் வளர்வதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் தவறான கருத்தாகும். அந்த சிலை சோழர்களின் ஆட்சிக்கு பின்னர் வந்த நாயகர்களால் வைக்கப்பட்டது. நந்தி சிலை வளர்கிறது என்று சொல்வதும் முற்றிலும் பொய்யான தகவல்.

ராஜராஜ சோழனுக்கு தீராத கருங்குஷ்ட நோய் இருந்ததாகவும் அதை சரிசெய்வதற்காகவே தஞ்சை பெரிய கோயிலை கட்டி வழிபட்டார் என்றும் ஆதாரமற்ற கதை ஒன்று சொல்லப்படுகிறது. ஆனால், ராஜராஜ சோழன் தனது இறுதி காலம் வரை ஆரோக்கியத்துடன் இருந்தார் என்றும் அவரே நேரடியாக போர்க்களத்திற்கு சென்று பல நாடுகளைக் கைப்பற்றி உலகமே திரும்பிப் பார்க்கும் வீராதி வீரனாக வாழ்ந்தார் என்று கல்வெட்டுகளும், செப்புப்பட்டையங்களும் கூறும் சான்றுகள் உள்ளன. அப்படியிருக்கும் பட்சத்தில், அவர் நோய் வந்ததால்தான் இந்தக் கோயிலைக் கட்டினார் என்று சொல்லப்படுவது நம்ப முடியாத ஒன்றாகும். அதேபோல, ராஜராஜன் இக்கோயிலின் உச்சிக்கு ஏறிச்சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதும் வதந்திதான். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

இதையும் படியுங்கள்:
வியப்பூட்டும் தமிழர்களின் சிற்பக்கலை அதிசயம்!
Tanjore temple mystery

அதேபோல, இந்தக் கோயில் கோபுரத்தின் நிழல் தரையில் படாது  என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கோயில் கோபுரத்தின் நிழல் தரையில் படும். அதற்கு ஆதாரமாக நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன.

நூற்றி இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன்பு வரை தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டியது யார் என்று ஒருவருக்குமே தெரியாது. ஆனால், இந்த ரகசியத்தை உலகுக்கு தெரியப்படுத்தியது ஒரு ஆங்கிலேயன். காடுவெட்டி சோழன் என்பவர்தான் இக்கோயிலை கட்டியதாக ஜி.யூ.போப் எழுதியிருந்தார். ஆனால், 1886ம் ஆண்டு அப்போது இருந்த ஆங்கிலேய அரசு ஜெர்மன் நாட்டு ஹீல்ஸ் என்பவரை கல்வெட்டு ஆராய்ச்சியாளராக நியமித்தது. அவர்தான் தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பற்றி ஆராய்ச்சி செய்து இந்த வரலாற்றுச் சின்னத்தை கட்டியவர் ஒரு தமிழன் என்றும் அவர்தான் ராஜ ராஜ சோழன் என்றும் இவ்வுலகிற்குக் கூறினார். வரலாற்று சம்பந்தமான குறிப்புகள் காலவெள்ளத்தில் அடித்துச் சென்றுவிடலாம் என்று முன்யோசனையாகத் திட்டமிட்ட ராஜராஜன் இதைப் பற்றிய அனைத்து குறிப்புகளையும் கோயில் கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தியுள்ளார். அந்தக் கல்வெட்டுகள்தான் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com