
பண்டையக் காலங்களில் தமிழர்கள், ஒவ்வொரு நிகழ்விற்கும், குறிப்பிட்டப் பாடல்கள், நடனங்கள், இசைக் கருவிகள் போன்றவற்றை பயன்படுத்தினர். நிகழ்வுகளுக்கேற்ப பாடல்களும், தாளங்களும் வேறுபடுகின்றன. அதன் வரிசையில் தாதராட்டமும் ஒன்று. திருமாலின் அடியவர்களாகிய தாசர்கள் திருமாலை போற்றிப் பாடும் விதமாகவும், ஆண்கள் மட்டுமே ஆடும் நடனமாகவும் விளங்குகிறது தாதராட்டம். இந்த ஆட்டத்தை நாமக்கல் மாவட்டம், தொட்டியப்பட்டி ஊரைச் சேர்ந்த நாயக்கர்கள் மட்டுமே ஆடுகின்றனர் எனக் கூறப்படுகிறது.
இந்நாட்டின் கலைத்துவம் மிக்க பண்டைய மரபு, வியக்கத்தக்க வகையில் தான் உள்ளது. பல்வேறுக் கருத்துக்களை இசையின் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திறன் இசைக்கு உள்ளது.
சேமக்கலம் பற்றி அறிந்திருப்போமா?
சமய சடங்குகள் குறிப்பாக சிவன் கோவில்களில் பூஜை நேரங்கள் மற்றும் இறந்த சடங்குகளுக்கு பயன்படுத்தும் ஒரு வித இசைக் கருவி. வெண்கல உலோகத்தாலான சேமக்கலத்தை ஒரு தடித்த, சிறிய கட்டையால் அடிக்கும் போது எழும்பும் சத்தத்தை ரசிப்பவர்களும் உண்டு. இதனை சேகண்டி எனவும் அழைக்கின்றனர்.
இந்த இசைக் கருவியின் ஓசை எங்கிருந்து கேட்டாலும், அங்கு ஒரு இறப்பு என்று கணிக்கும் அளவிற்கு இன்றும் பழக்கப்பட்ட ஓசையாக அமைகிறது. கோவில் திருவிழாக்களிலும், சமய சடங்குகளில் ஆடப்படும் தாதராட்டத்திலும் சேமக்கலத்தை உபயோகிக்கிறார்கள்.
பள்ளிகளில் மாலை வேளையில் 4.20 மணிக்கு அடிக்கப்படும் ’மணியின் சத்தம்’ எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? பள்ளியின் மணியை அடித்தவுடன் ஓட்டம் பிடித்து வீட்டிற்கு சென்ற நாட்களே சுகம். அந்த மணியைப் போன்ற வட்ட வடிவத்தில் காணப்படும் இந்த சேமக்கலம், பள்ளி நினைவலைகளைத் தூண்டும் வகையில் அமைகிறது.
தாதராட்டம், இசை, பாடல் மற்றும் நடனம் போன்ற முக்கிய அங்கங்களை ஒன்றர கலக்கிறது. இதில் உபயோகிக்கப்படும் சேமக்கலம், வெண்கல மணியோசைப் போல் ஒலித்து நீண்டநேரம் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த இசைக் கருவியை ’கஞ்சக் கருவி’ என்றும் அழைக்கிறார்கள்.