தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்!

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்!

ஞ்சாவூர் என்றதும் நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோயில் மட்டுமன்று, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளும்தான். களி மண்ணால் செய்யப்படும் இந்த பொம்மைகள் தஞ்சை மண்ணின் அடையாளமாக விளங்குகின்றன. மேலும் இவை, தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடியவை. காவிரி ஆற்றின் களி மண் கொண்டு செய்யப்படும் இந்த பொம்மைகள் உலகெங்கும் புகழ் பெற்றவை. ‘தலையாட்டி பொம்மை’ என்பது ராஜா மற்றும் ராணி என இரண்டு பொம்மைகளைக் குறிப்பதாகும்.

இந்த பொம்மைகளின் அடிப்பகுதியில் பெரியதாகவும், எடைமிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும், எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இந்த பொம்மைகளை சாய்த்து எந்தப்புறம் தள்ளினாலும் கீழே விழாமல் மீண்டும் பழைய நிலையிலேயே நிற்கும் வகையில் இவை உருவாக்கப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. ராஜா, ராணி பொம்மைகள் மட்டுமல்ல, மங்கையர்கள் நடனமாடுவது மாதிரியான பொம்மைகள் மற்றும் தாத்தா, பாட்டி பொம்மைகள் ஆகியவையும் தற்காலத்தில் உருவாக்கப்படுகின்றன.

கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், நாடகம் போன்ற பல கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சையில் 19ம் நூற்றாண்டில் இந்த பொம்மைகள் சிறப்புற்றிருந்தன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இந்த பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் சிறப்புடன் மதிக்கப்பட்டனர்.

இந்த பொம்மைகளைச் செய்ய முதலில் அதன் அடிப்பாகம் தயாரிக்கப்படுகிறது. வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற வடிவத்தில் சுத்தமான களிமண் நிரப்பி அது இரண்டு நாட்கள் நிழலிலும் பின்னர் இரண்டு நாட்கள் வெயிலிலும் உலர வைக்கப்படுகிறது. நிரப்பப்படும் களி மண்ணுக்கு ஏற்றாற்போல் பொம்மைகள் செங்குத்தாக நிற்கின்றன. பின்னர் மேல்பாகம் தயாரிக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றது. அதன் பிறகு அவை உப்புத்தாள்களால் நன்கு தேய்க்கப்பட்டு கண்கவர் வண்ணங்கள் தீட்டப்பட்டு உலர வைக்கப்படுகின்றது. அந்தக் காலத்தில் களி மண் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பொம்மைகள் தற்போது பிளாஸ்டிக், காகிதம், மரத்தூள் ஆகியவை கொண்டு செய்யப்படுகின்றது.

உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவற்றை ஒரு கம்பியில் பொருந்தி ஆடும்படி உருவாக்கப்படுகின்றன. தஞ்சாவூர் செல்பவர்கள் இந்த பொம்மைகளை வாங்காமல் வருவதில்லை என்றே சொல்லலாம். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் 1999ம் ஆண்டு சட்டத்தின்படி தஞ்சையின் உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. தஞ்சாவூர் பக்கம் போனால் கண்டிப்பாக தலையாட்டி பொம்மை வாங்கி வந்து உங்கள் வீட்டில வையுங்கள். அதன் அழகே தனி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com