நம்முடைய வரலாறையும் வாழ்வியலையும் சொல்லக்கூடிய பல்வேறு கலைகளில் ஒன்று தான் சிற்பக் கலைகள். கலைகள் என்பதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே கடந்து போய்விட முடியாது, அதன் ஒவ்வொரு கல்லிலும் ஓராயிரக்கணக்கான வரலாற்று நிகழ்வுகள் ஒளிந்திருக்கின்றன.
இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ளும் போது அதனால் அடையும் ஆச்சரியங்களுக்கு அளவே இருக்காது என்று கூட சொல்லலாம். அத்தகைய கலைகளில் ஒன்றான சிற்பக் கலை அதிக அளவில் இடம் பெற்றிருக்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
சேலம் மாவட்டத்தில் உள்ளது தாரமங்கலம் சிவன் கோயில். 90 அடி உயர ராஜ கோபுரத்துடன் உச்சியில் 7 கலசங்களுடன் மேற்கு திசை நோக்கி மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த தாரமங்கலம் சிவன் கோயில் ஒரு தேர் போன்ற வடிவிலும், அதனை யானை மற்றும் குதிரை படைகள் கட்டி இழுத்துக் கொண்டு செல்வது போலவும், அந்தத் தேரின் ஒரு பகுதியில் அச்சு முறிந்திருப்பது போலவும் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
திருமால் தாரை வார்த்து கொடுக்க, சிவனுக்கும் பார்வதிக்கும் இங்குதான் திருமணம் நடந்ததாகவும் அதனால்தான் இது தாரமங்கலம் என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சிவபெருமானின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் வகையிலும், பிரம்மாவின் சிறப்பை போற்றும் வகையிலும் இங்கு பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலின் நுழைவாயிலில் சுமார் 20 அடி அகலம் கொண்ட வேங்கை மரத்தால் செய்யப்பட்ட மரக்கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலில் முன்புறம் ஆறு கற்களால் செதுக்கப்பட்ட யாழி உருவங்களும் அந்த யாழியின் வாயில் ஒரு பெரிய சுழலும் கல் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுழலும் கல்லை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம், ஆனால் அக்கல்லை அதிலிருந்து வெளியே எடுக்க முடியாது. இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள யாழிக்கு நடுவில் நான்கு தூண்களில் குதிரை மற்றும் யானையில் சென்று வீரர்கள் போர் புரிவது போன்ற சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் மையத்தில் சுமார் 20 பிரம்மாண்ட தூண்களுடன் அமைந்த மகா மண்டபம் அமைந்துள்ளது.
ராமாயண கதைகள்:
கோவிலில் மண்டபத்தில் ராமாயணத்தில் இடம்பெறும் ராமர் வில் எடுத்து அம்பு விடுவது போன்று சிற்பம் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் சுக்ரீவனும் வாலியும் சண்டை போடுவது போன்று சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் ராமர் அம்பு விடுவது போன்று அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் அருகே நின்று பார்த்தால் சுக்ரீவன், வாலி சண்டையிடுவது போன்ற அமைக்கப்பட்ட சிற்பத்தை பார்க்க முடியும். ஆனால் வாலி, சுக்ரீவன் சண்டை போடும் சிற்பத்திற்கு அருகில் நின்று பார்த்தால் ராமன் அம்பு விடுவது போன்ற சிற்பத்தை பார்க்க முடியாது. ராமாயண கதையின்படி ராமன் மறைவாக நின்று வாலி மீது அம்பு எய்துவார் என்பதை மிகவும் தத்ரூபமாக விளக்கும் வகையில் இந்த இரண்டு சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மன்மதனும் ரதியும்:
மன்மதன் கிளியின் மீது அமர்ந்து மலர் அம்பை எடுத்து ரதி மீது விடுவது போன்றும், ரதி மறைவாக நின்று மன்மதனை காண்பது போலவும் மிகவும் தத்ரூபமாக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
சூரிய தரிசனமும் சந்திர தரிசனமும்:
ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில் வரும் மூன்று நாட்களான 9 முதல் 13ஆம் தேதி வரையிலான உத்திரயாண, தட்சணயான புண்ணிய காலங்களில் சந்திரன் மற்றும் சூரியனின் ஒளி கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் லிங்கத்தின் மீது விழும் சந்திரன் மற்றும் சூரிய ஒளி ராஜகோபுரங்களின் வழியே, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, மூன்று உள்வாயிலை கடந்து, கருவறையில் அமைந்துள்ள லிங்கத்தின் மீது படுவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் நிகழும் இந்த அற்புதமான நிகழ்வினை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி சிவபெருமானை தரிசனம் செய்கிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
மண்டபத்தின் முகப்பு கூரை:
மண்டபத்தின் முகப்பு கூரையில் பல்வேறு குரங்குகள் அதன் இயல்பான நிலையில் இருப்பது போன்று பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மண்டபத்தில் நீண்ட மதில் சுவர்களில் நீர்வாழ் உயிரினங்களான ஆமை, முதலை, மீன் போன்ற உயிரினங்கள் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன.
சித்தர்கள் மற்றும் முனிவர்கள்:
கோவிலினுள் உள்ள தூண்களில் பதஞ்சலி முனிவர், ஹயக்ரீவர் போன்ற பல்வேறு வகையான முனிவர்களின் உருவங்களும், சித்தர்களின் உருவங்களும், சித்தர்கள் கல் யானைக்கு கரும்பு கொடுப்பது போன்ற சிற்பங்களும் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று கை, மூன்று கால்கள் உடைய தெய்வங்களின் சிலைகளும் மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் கோயில்:
கைலாசநாதர் கோவிலின் முன்புறத்தில் 9 கற்களால் செதுக்கப்பட்ட சித்தி விநாயகர் கோவில் உள்ளது. முழுக்க முழுக்க கற்களால் செதுக்கப்பட்ட இந்த கோவிலும் ஒரு சிறப்பான சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம்.
நுட்பமான கட்டிடக்கலை:
இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் உலகிலேயே மிகச் சிறிய உயிரினமான எறும்புகள் நுழைய துளைகளை விட்டு செதுக்கிய சிற்பங்கள் அதிகமாக உள்ளது. அதேசமயம் மழைக்காலங்களில் கோவில்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கோவில்களின் மேற்புறத்திலும், கோவில்களின் கோபுரங்கள் மீதும் விழும் மழை நீர் தேங்காமல் துளைகளின் வழியாக நேரடியாக வழிந்து அருகிலுள்ள நீர் தேக்கங்களை சென்றடையும் வகையில் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் நம் முன்னோர்களுக்கு இருந்த மிக நுட்பமான அறிவினை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
எண் கோண வடிவ தெப்பக்குளம்:
இக்கோவிலின் தெப்பக்குளமானது எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கல் எரிந்தால் அந்தக் கல் எட்டு இடங்களிலும் மோதிவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விடுவதாக நம்பப்படுகிறது. மேலும் இக்கோவிலில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சொக்கநாதர் கோவிலுக்கு ரகசியமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.
பல்வேறு விதமான நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில். ஒரு கால கட்டத்தில் சிற்பிகளை அழைத்து கோவிலை வடிவமைத்து கட்டச் சொன்னால், 'தாரமங்கலம் கோவில் அளவுக்கு நுட்பமாக கட்ட முடியாது' என்றும் 'இந்த நிபந்தனையை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நாங்கள் பணிகளை தொடர்கிறோம்' என்றும் அவர்கள் சொன்னதாக பல்வேறு கதைகள் உள்ளன.
இவ்வளவு நுட்பமான வரலாற்றையும் வாழ்வியலையும் உணர்த்தக்கூடிய சிற்பக் கலைகளைக் கொண்ட இக்கோவிலை பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்கு அதனை பரிசளிப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள தலையாய கடமையாகும்.