

பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்னும் புகழ்பெற்ற எழுத்தாளர் மேற்கு வங்காளத்தில் இருந்தார். இவர் இந்திய நாட்டை வெறும் நிலமாக பார்க்காமல் எல்லோரையும் அரவணைக்கும் பாரத மாதாவாக உருவகப்படுத்தி ஒரு படத்தை உருவாக்க நினைத்தார். 1770 வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சன்னியாசிகள் கழகம் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதினார். 1882 ஆம் ஆண்டு 'ஆனந்த மடம்' என்ற பெயரில் அந்த நாவலை அவர் வெளியிட்டார்.
நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து வெளிக்கொண்டு வர போராடும் துறவிகள் அவர்கள் தாய்நாட்டின் மீது இருக்கும் பக்தியை வெளிப்படுத்துகிற உருக்கமான பாடல் அந்த நாவலில் இருந்தது. அதில் இருந்த ஒரு முக்கிய வார்த்தை தான் இந்த வந்தே மாதரம்(Vande Mataram). அப்போதைக்கு இந்த வார்த்தை பெரிதாக பிரபலமடையவில்லை என்றாலும் 1896 ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் இந்த பாடலை முதல் முதலில் மேடையில் பாடினார்.
அப்போதுதான் இந்த பாடலை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தனர். 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாக பிரிக்க முடிவு செய்தபோது மக்கள் கொதித்து எழுந்து வீதியில் நின்று போராட தொடங்கினார்கள். அப்போது இந்த வந்தே மாதரம் என்னும் வார்த்தைதான் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றினைத்தது. இது வெறும் நாவல் பாட்டாக இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவில் சுதந்திர முழுக்கமாக மாறியது. இதை பார்த்த ஆங்கிலேய அரசு மிரண்டு போனது.
அதனால் 'வந்தே மாதரம்' என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மக்களை அடித்தார்கள், ஜெயிலில் துன்புறுத்தினார்கள். இதற்கு பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 வந்தே மாதரம் பாடல் தேசிய பாடலாக அங்கிகரிக்கப்பட்டது. வந்தே மாதிரம் என்பதற்கான அர்த்தம் 'தாயே உன்னை வணங்குகிறேன்' என்பதாகும். இதில் தாய் என்பது நம்முடைய தாய்நாட்டை குறிக்கிறது.
இந்தப் பாடல் முழுவதும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இது சமஸ்கிருதம் மற்றும் வங்காளம் ஆகிய இரு மொழிகளும் கலந்த கலவை ஆகும். இது அந்த காலத்தில் 'மணிப்பிரவாள' நடை போன்ற ஒரு தனித்துவமான பாணியில் அமைந்தது.
ரவீந்திரநாத் தாகூர் இப்பாடலுக்கு முதன்முதலில் மெட்டமைத்துப் பாடினார். இருப்பினும், இன்று நாம் அகில இந்திய வானொலியில் கேட்கும் அதிகாரப்பூர்வமான மெட்டை அமைத்தவர் பண்டிட் வி.டி. பலுஸ்கர் (Pandit V.D. Paluskar) ஆவார்.
'ஆனந்த மடம்' நாவலில் இந்தப் பாடல் நீண்டதாக இருந்தாலும், இந்திய அரசு அதன் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்றுக்கொண்டது.
1907-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச சோசலிச மாநாட்டில், மேடம் பிகாஜி காமா முதன்முதலில் இந்தியக் கொடியை ஏற்றியபோது, அதில் 'வந்தே மாதரம்' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
1950-ல் இதைப் பிரகடனப்படுத்தியபோது, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், "வந்தே மாதரம் பாடல், தேசிய கீதமான 'ஜன கண மன'விற்கு இணையான அந்தஸ்தைப் பெறும்" என்று அறிவித்தார்.