நிலத்தில் எவ்வாறு நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனவோ, அதைவிட அதிகமான அளவு உயிரினங்கள் கடலில் வாழ்ந்து வருகின்றன என்பது இயற்கையின் சுவாரசியம். ஆனால், ஒரு இன மக்கள் கடலில் மட்டும்தான் வாழ்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! பஜாவ் என்ற இன மக்கள் பல நூற்றாண்டுகளாக கடலில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அரை நாடோடி வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த இந்த பஜாவ் மக்கள், கடலுடன் ஒரு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வாழ்ந்து வந்த இந்த பழங்குடி மக்கள், பின்னர் அதிகமாக பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பிரிந்து குடிப்பெயர்ந்தார்கள்.
அவர்கள் இன்று வரை கடிகாரம், காலண்டர் என எதுவுமே இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய பிறந்தநாள் தேதி கூட தெரியாதாம். இவர்களின் வரலாறு, கலாச்சாரம் பற்றி நிறைய பேர் நிறைய கூறினாலும், அவை இன்றும் ஒரு மர்மமாகவே இருந்து வருகின்றன. Lepas என்ற படகு போன்ற வீடுகளை நீரின் மேல் அமைத்து, அதில்தான் இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அதேபோல் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் மட்டுமே அவர்கள் நிலத்தை நோக்கி செல்கிறார்கள். மீண்டும் நிலைமை சரியானவுடன், மறுபடியும் வீடு அமைத்து கடலில் வாழ்கிறார்கள். உலகின் முதல் மற்றும் கடைசியாக கடலில் வாழும் மக்கள் என்றால், அது பஜாவ் இன மக்கள்தான்.
அதேபோல் இவர்கள் மீன்பிடி திறமைக்கும், முத்து எடுக்கும் திறமைக்கும் பெயர் போனவர்கள். கடலுக்கு அடியில் வெகு நேரம் மூச்சு விடாமல் இருப்பதிலும் இவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும். அதாவது, இவர்கள் மூச்சை அடக்கிக்கொண்டு 13 நிமிடங்கள் வரை நீருக்கு அடியில் இருப்பார்களாம். அதேபோல் அவர்களுக்கு 200 அடி ஆழம் வரை கடலுக்குச் செல்லும் திறமையும் உண்டு. நிலத்தில் இருப்பவர்களின் உடல் அமைப்பைவிட இவர்களுடைய உடல் அமைப்பு மாறுப்பட்டிருக்கும். மூச்சையும், உடலையும் எந்த சமயத்திற்கு ஏற்றவாரு எப்படி மாற்றலாம் என்பது போன்ற நுனுக்கங்களும் அவர்களுக்கு அத்துப்படி.
கடலை மட்டுமே சார்ந்து வாழும் இந்த மக்களில் நிறைய பேர், இப்போது வெளி இடங்களுக்குச் சென்று நிலத்தில் வாழ்கிறார்கள். ஆனால், தங்களது பாரம்பரியத்தையும், பாரம்பரிய தொழிலையும் மறக்காத சிலர் இன்றும் கடலிலேயேதான் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக மற்ற இடங்களைவிட மலேசியாவில் அதிகளவு இன்றும் பஜாவ் மக்கள் கடலில் வாழ்ந்து வருவதாகவே கூறப்படுகிறது.