

வரலாறு பல விசித்திரமான நிகழ்வுகளைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. அதில் மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் இன்றுவரை புதிராக இருக்கும் ஒரு நிகழ்வுதான் 1518 ஆம் ஆண்டின் நடன பிளேக்.
ஜூலை 1518-ல், புனித ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஸ்ட்ராஸ்பர்க்கில் (தற்போதைய பிரான்ஸ்) இந்த விசித்திர நிகழ்வு தொடங்கியது. ஃப்ரா டிராஃபியா என்ற பெண் திடீரென வீதியில் இறங்கி நடனமாடத் தொடங்கினார். அங்க இசையும் இல்லை. எந்தவொரு கொண்டாட்டமும் இல்லை. ஆனால், அவரது உடல் கட்டுக்கடங்காமல் ஆடிக்கொண்டே இருந்தது.
ஒரு வாரம் கழிந்த நிலையில், மேலும் 34 பேர் அவருடன் இணைந்து நடனமாட ஆரம்பித்தனர். ஆகஸ்ட் மாதத்திற்குள், சுமார் 400 பேர் இந்த நடன நோயில் சிக்கினர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வலியால் கதறினாலும், அவர்களால் நடனத்தை நிறுத்த முடியவில்லை. மேலும், தூக்கமில்லாமலும், உணவு உட்கொள்ளாமலும் பல நாட்கள் தொடர்ந்து ஆடினர். தொடர்ந்து ஆடியதால் ஏற்பட்ட சோர்வு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக சிலர் உயிரிழந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.
நிலைமை மோசமடைவதைக் கண்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர். இந்த மக்கள் இரத்தக்கொதிப்பால் அவதிப்படுவதாகவும், அவர்கள் இன்னும் அதிகமாக ஆடினால் அந்த வேகம் குறைந்து நோய் குணமாகும் என்றும் கருதினர்.
இதற்காக நகரின் மையப்பகுதியில் ஒரு பெரிய மேடை அமைக்கப்பட்டு, வாத்தியக் கலைஞர்கள் வரவழைக்கப் பட்டனர். ஆனால், இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இசைக்கு ஏற்றவாறு மக்கள் இன்னும் தீவிரமாக ஆடத் தொடங்கினர், இது அதிகப்படியான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த மர்மமான நிகழ்விற்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராயும் ஆய்வாளர்கள் மூன்று முக்கியக் கோட்பாடுகளை முன் வைக்கின்றனர். அவை முறையே,
கோதுமை மற்றும் ரை (Rye) போன்ற தானியங்களில் வளரும் ஒரு வகை பூஞ்சை மூலம் ஏற்படும் எர்கோட்டிசம் நச்சு. இது ஒருவித மாயத்தோற்றத்தையும் உடல் நடுக்கத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும், இது இவ்வளவு நீண்ட காலத்திற்கு மக்களைத் தொடர்ந்து ஆட வைக்குமா என்பது சந்தேகமே.
அக்காலத்தில் ஸ்ட்ராஸ்பர்க் மக்கள் கடும் பஞ்சம், நோய் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய அதீத உளவியல் அழுத்தம், ஒரு குழுவினரை ஒரே மாதிரியான விசித்திரமான செயலில் ஈடுபடத் தூண்டும். இதை வெகுஜன ஹிஸ்டீரியா என்றழைக்கின்றனர். இது மிகவும் நம்பத்தகுந்த காரணமாகக் கருதப்படுகிறது.
மத ரீதியான நம்பிக்கையின்படி, புனித விட்டஸ் என்ற புனிதரின் கோபத்திற்கு ஆளானால், அவர்கள் இத்தகைய கட்டுக்கடங்காத நடனத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று மக்கள் அஞ்சினர். இந்த பயமே பலரை உளவியல் ரீதியாகப் பாதித்து ஆட வைத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இதில் தப்பிப் பிழைத்தவர்கள் அருகிலுள்ள ஒரு மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, இந்த நடனப் பிளேக் படிப்படியாக நின்றது.
ஆனால், இன்றுவரை இதற்கான காரணம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை.