‘த கிராம்போன் கேர்ள்' கெளஹர் ஜான்!

‘The Gramophone Girl|’ Gowhar John!
‘The Gramophone Girl|’ Gowhar John!

ந்தியாவில் முதன் முதலாக 78 rpm வேகத்தில் இயங்கும் கிராம்போன் இசைத்தட்டுகளில் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரரான கெளஹர் ஜான் பிறந்தபோது அவரது அம்மா அவருக்கு வைத்த பெயர் ஏஞ்சலினா யோவர்டு (Angelina Yeoward). பிறகு முஸ்லிம் மதத்துக்கு மாறி கெளஹர் ஜான் ஆனார்.

கெளஹர் ஜான் பிறந்தது உத்திரப்பிரதேசம் என்றாலும், அவர் ஆர்மேனிய வம்சத்தைச் சேர்ந்தவர். அதாவது, கெளஹரின் அம்மா பெயர் விக்டோரியா ஹெம்மிங்ஸ். இவர் ஆர்மேனிய வம்சத்தவர் என்றாலும் பிறந்தது இந்திய மண்ணில்தான். குழந்தைப் பருவத்திலிருந்தே இசையும், கதக் நடனமும் கற்றுத் தேர்ந்தவர் விக்டோரியா. திருமணம், ஏஞ்சலினா பிறப்பு, கணவருடன் மன வேறுபாடு காரணமாகச் சட்டப்படி பிரிவு எனப் பல்வேறு தருணங்களைக் கடக்கிறார் விக்டோரியா.

தனது மகளுக்கு எட்டு வயதாகும்போது அவருடன் பனாரஸ் செல்கிறார் விக்டோரியா. அங்கு இஸ்லாமிய மதத்தின் மேல் ஏற்பட்ட மரியாதை காரணமாக அம்மதத்துக்கு மாறுகிறார். தனது பெயரை மாலக் ஜான் என்றும், மகள் பெயரை கெளஹர் ஜான் என்றும் மாற்றிக்கொள்கிறார். தொடர்ந்து இரண்டு வருடங்கள் தனது இசையாலும், கதக் நடனத்தாலும் பனாரஸில் நல்ல பெயர் சம்பாதித்தவர், அங்கிருந்து மகளுடன் கொல்கத்தாவுக்கு குடி பெயர்கிறார். அங்கு நவாப் வாஜித் அலிஷாவின் (Nawab Wajid Ali Shah) அரண்மனையில் நாட்டியக் கலைஞராகப் பொறுப்பேற்கிறார். தனது மகளை, கொல்கத்தாவின் சிறந்த நடன ஜாம்பவான்களிடமும், இந்துஸ்தானி இசைக்கலைஞர்களிடமும் தனித்திறன் வளர்த்துக்கொள்ளச் சேர்த்து விடுகிறார்.

இசையிலும், நடனத்திலும் தேர்ந்த மகள் கெளஹர் ஜானின் அரங்கேற்றம், தர்பாங்கா ராஜ் அரண்மனையில் நடைபெறுகிறது. பிறகு அந்த அரண்மனையிலேயே `அரசவை நர்த்தகியாக' பணியமர்த்தப்படுகிறார் கெளஹர் ஜான்.

ஜூன் 26 ,1873ல் பிறந்த கொஹர் ஜான் அரசவை நர்த்தகியானபோது அவருடைய வயது வெறும் 14தான். அதன் பிறகு, தனது காலில் கட்டிய சலங்கையைக் கழட்டி வைக்கக்கூட அவகாசமில்லாமல் கொல்கத்தா எங்கும் தனது நடன நிகழ்ச்சிகளை நடத்தினார் கெளஹர்.

செல்லுமிடங்களெல்லாம் ரசிகர்கள் கொண்டாட, `முதல் நடன மங்கை' என்று பட்டம் கொடுக்கப்படுகிறது. `ஹம்தம்' என்ற பெயரில் கஜல் இசைப் பாடல்களையும் இவர் எழுதியிருக்கிறார். கெளஹர் ஜான் இந்துஸ்தானி இசையிலும் வல்லவர் என்பதால் இந்தியாவின் புகழ்பெற்ற கிராம்போன் கம்பெனி, தேடி வந்து இவருடைய பாடல்களை ரெக்கார்டு செய்கிறது.

இதையும் படியுங்கள்:
மன வலிமை உள்ளவர்கள் கைக்கொள்ளாத விஷயங்கள் என்ன தெரியுமா?
‘The Gramophone Girl|’ Gowhar John!

இதனால் தனது பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் என்கிற சிறப்பும் கெளஹருக்குக் கிடைக்கிறது. அதையொட்டி, `த கிராமபோன் கேர்ள்' என்று இவரை கூகுள் கொண்டாடியது.

பெங்காலி, குஜராத், தமிழ், மராத்தி, அராபிக், பெர்ஷியன், பிரெஞ்ச், இங்கிலீஷ் என்று பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கிற கெளஹர் ஜான், இந்தியாவின் முதல் ஆல்பத்தை வெளியிட்ட பெண் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர்.

இதனிடையே இந்த கான குயிலுக்கு ஒரு காதல் தோல்வி, அதன் பிறகு நடந்த கல்யாணமும் கணவருடைய ஒழுக்கமின்மையால் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதையெல்லாம் மறைத்துக்கொண்டு சென்ற இடமெல்லாம் தனது இசையால் சிறப்புக்களை மட்டுமே பெற்று வந்த கெளஹர், 1928, ஜனவரி மாதம் இதே நாளில் மறைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com