திருநெல்வேலி என்ற பெயரை கேட்டதுமே நமக்கெல்லாம் சட்டென மனதில் வருவது நாவூர வைக்கும் திருநெல்வேலி அல்வா தான். இந்த திருநெல்வேலி அல்வா திருநெல்வேலியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற ஒன்றாகும். திருநெல்வேலி அல்வா என்றாலே நாக்கில் நீர் சுரக்கும். இதை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த அல்வா ஒரு ஜெல்லி போன்று பொன் நிறத்தோடு நெய் மிதக்க, பார்த்தாலே பரவசமாக இருக்கும்.
இத்தகைய அல்வாவுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு. தெரியுமா உங்களுக்கு?
முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மக்கள் தான் இதை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த இனிப்பை செய்யும் இனத்தினரை ராஜ்புட்ஸ் (rajputs) என்று அழைத்தனர். அந்த இனத்தினர் திருநெல்வேலி ஜமின்தார் அவர்களுக்கு சமையல் செய்ய சொக்கம்பட்டி வந்தனர். அப்போது அவர்கள் தான் அந்த அல்வாவை அங்கு செய்தனர். இவர்களின் மூலமாகத் தான் இந்த அல்வா திருநெல்வேலியில் அறிமுகமானது.
இந்த அல்வா 19-ம் நூற்றாண்டில் அறிமுகமாகி தெருக்கள் தோறும் விற்கப்பட்டது. அதற்கு பிறகு 1882-ம் ஆண்டில் திரு.ஜெகன் சிங் அவர்களால் திருநெல்வேலியில் ஒரு கடை அமைக்கப்பட்டு அதற்கு திருநெல்வேலி அல்வா கடை என்று பெயர் சூட்டபட்டது. இந்த கடையை இந்த அல்வாவின் தந்தை என்றே கூறலாம்.
அதற்கு பிறகு 1940களில் பிஜிலி சிங் என்பவரால் 'இருட்டு கடை அல்வா' துவங்கப்பட்டது. இப்போதும் அவருடைய மூன்றாம் தலைமுறையினர் அக்கடையை நடத்துகிறார்கள். இந்த பெயரே தற்போது வரை பேரும் புகழும் பெற்று விளங்குகின்றது.
அன்று முதல் இன்று வரை இந்த பெயர் இன்னும் மாறவே இல்லை. இப்போதும் இந்த கடையில் 40 வாட்ஸ் பல்பே உபயோகப்படுத்தப்படுகிறது.
திருநெல்வேலி அல்வாவை வழங்கி வரும் இந்த இருட்டுக்கடை நிறுவனத்திற்கு ஜனாதிபதியின் விருதும் கிடைத்துள்ளது.
அல்வா பெரும்பாலும் கோதுமை மற்றும் சர்க்கரையால் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு வகை ஆகும். இந்த அல்வா இந்தியாவில் மட்டுமல்லாமல் கிழக்கிந்திய நாடுகள், வடக்கு ஆசியா, மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா நாடுகள், ஈரோப்பிய நாடுகள், மற்றும் மாளத்திய, அரேபிய நாடுகளிலும் பிரபலமாக இருக்கிறது.
இத்தகைய அல்வாவை தயாரிக்க குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும். தமிழ்நாட்டில் அல்வா என்றாலே அது திருநெல்வேலி அல்வா தான்.
அல்வாவில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் கேரட் அல்வா, பாதாம் அல்வா, பைனாப்பிள் அல்வா, பீட்ரூட் அல்வா, ஆப்பிள் அல்வா, சுரைக்காய் அல்வா, பூசணிக்காய் அல்வா என பல வகைகள் இருக்கின்றன.
ஆனாலும் கோதுமை அல்வாவிற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை அதுவும் குறிப்பாக திருநெல்வேலி அல்வாவிற்கு!