கிராமத்து கிழவிகளின் சொலவடைகள் - அதன் அர்த்தங்கள்... தெரிஞ்சுக்கலாமே!

Idioms
Idioms
Published on

நாம ஏதாவது ஒரு வேலையை செய்தாலும், நண்பர்களை பார்க்க வெளியே சென்றாலோ, வெளியே சென்று வீட்டுக்கு தாமதமாக வந்தாலோ, வீட்டில் அம்மா அப்பாவை எதிர்த்து பேசினாலோ, அதிக நேரம் போனை பார்த்துக் கொண்டிருந்தாலோ..... என்று எது செய்தாலும் அதை சுட்டிக்காட்டும் விதமாக நக்கலாகவும், கிண்டலாகவும் நம் வீட்டில் உள்ள பாட்டிகள் சொலவடைகளை நம்மைப் பார்த்து சொல்வதை கேட்டிருப்போம்.

பாட்டிகள் சாதாரணமாக பேசும்போது கூட சும்மா சரளமா சொலவடைகளை சொல்ல கேட்டிருப்போம். ஒரு சில சொலவடைகளுக்கு நமக்கு அர்த்தம் என்னவென்றே தெரியாது..! இருந்தும் ஒவ்வொரு நாளும் பாட்டி சொல்வதை கேட்டுக்கொண்டு, “உனக்கு ஒரு வேல இல்ல.. சும்மா வாய்க்கு வந்தத பேசிகிட்டு இருக்க..! அட போ கிழவி” என்று நாம் கூறிவிட்டு கடந்து விடுகிறோம்.

ஆனால் பாட்டிகள் சொல்லும் ஒவ்வொரு சொலவடைகளுக்கு பின்னாலும் அர்த்தம் இருக்கு! வட்டார வழக்குகளில் சொலவடைகளுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கு! பாட்டிகள் சொல்லும் அப்படிப்பட்ட ஒரு சில சொலவடைகளையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம்...

1. "அடியாத மாடு படியாது"

அடிபணிந்து அடக்கமாக நடந்து கொள்பவர்கள் தான் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். அடிபணியவில்லை என்றால் முன்னேற்றத்தை அடைய முடியாது.

2. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

அமிர்தமே ஆனாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது நஞ்சாக மாறிவிடும்..! எ:கா; உண்ணும் உணவு, உழைப்பு.

3. "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"

கோபத்தில் பேசுபவர்கள், தன் நினைவில்லாமல் வார்த்தைகளை புத்தி கெட்டவர்கள் போல் கொட்டுவார்கள்..!

4. "உக்கார இடம் கேட்டவன், படுக்கப் பாய் கேட்டானாம்..!"

ஒருவரின் உதவியை நாம் நாடும் போது முதலில் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

5. "அப்பன் அருமை செத்தா தான் தெரியும்"

அப்பா காட்டிய அன்பும், பண்பும், பாசமும், அப்பா இறந்த பின்பு தான், நாம் உணர்கிறோம்.

6. "அஞ்சு (ஐந்து) பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டியாவான்"

ஆடம்பரமான தாய், பொறுப்பில்லா தந்தை, துரோகமுள்ள சகோதர உறவு, ஒழுங்கற்ற மனைவி, சொல் பேச்சை கேட்காத பிள்ளைகள். இந்த ஐந்தையும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்.

7. "மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கலாமா..?"

மண் குதிர் (புதைக்குழி, புதை மணல், புட்கள் நிறைந்த திடமற்ற மணல் பகுதி) நம்பி ஆற்றில் இறங்க கூடாது. அதேபோல் மேலோட்டமான அறிவோடு ஒரு செயலில் இறங்க கூடாது.

8. "எலி கிட்ட சொன்னா அது வால ஏவுதாம்..!"

தமக்கு கிடைத்த பொறுப்பை (வேலை) பிறரிடம் கொடுத்து பார்க்கச் சொல்லும் போது, தன்னை அறியாமல் தன்னைத்தானே /தாமே நாம் தாழ்த்தி எடை போட்டுக் கொள்கிறோம். இதனால் அந்த பொறுப்பை நாம் சிறப்பாக முடிக்காமல் போய்விடுகிறோம்.

9. "ஊரெல்லாம் உறவு ஒரு வாய்ச்சோறில்லை"

ஊரெல்லாம் நமக்கு உறவு போல தெரிஞ்சாலும் ஆபத்துன்னா ஒருத்தரும் வரப்போவதில்லை.

10. "அஞ்சுல (ஐந்தில்) வளையாதது அம்பதுல (ஐம்பதில்) வளையுமா..?"

சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் நற்பண்புகளை விதைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் வயதானாலும் ஒழுக்க நெறியை விட்டு மாற மாட்டார்கள். இல்லையென்றால் அடிபணிந்து வளைந்து கொடுக்க மாட்டார்கள்.

11. "செருப்பின் அருமை வெயிலில் தெரியும்"

செருப்பு காலில் இருக்கும் வரை வெயில் தெரிவதில்லை. செருப்பு இல்லாமல் போகும்போது வெயில் தெரிகிறது. அதேபோல்தான் ஒரு சிலரின் (அம்மா, அப்பா, நண்பன், தாத்தா, பாட்டி, ...) உன்னதமான உறவு.

12. "அடி மேல அடி வைத்தால் அம்மியும் நகரும்"

தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால், சாதிக்க முடியாததை கூட நம்மால் சாதிக்க முடியும்..! தொடர் முயற்சியே வெற்றியைத் தரும்..!

இப்படிதாங்க பல சொலவடைகள் இருக்கின்றன. அதற்கு அர்த்தங்களும், எதிரும் புதிரும் ஆக தான் இருக்கின்றன. பாட்டிகள் கூறும் சொலவடைகளை கேட்டு கேட்டு வாழ்ந்த காலம் எல்லாம் மலையேறி விட்டன. இருந்தும், இப்போதுள்ள குழந்தைகளுக்கு இது போன்ற சொலவடைகளை பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து அதன் அர்த்தங்களையும் புரிய வைத்தால் அவர்களுக்கு கேட்க ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com