மண்பானையின் மகத்துவம்: இயற்கைக்குத் திரும்புவார்களா பொதுமக்கள்?

Clay Pot
Clay Pot

நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் நம் உடல் நலத்திற்கான ஆதாரமாகும். அதில் பல பொருள்கள் காலப்போக்கில் அழிந்து வருகின்றன. ஆனால், மண்பானை மட்டும் ஓரளவு நிலைத்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொங்கல் பண்டிகையும், கோடை வெப்பமும் தான். பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவும், கோடை வெப்பத்தைத் தணிக்கவும் தான் பலரும் மண்பானையை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். மண்பானையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

களிமண்ணில் இருந்து தயாரிக்கப்பட்டு தண்ணீர் மற்றும் பிற பொருள்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் தான் மண்பானை. கோடைகாலத்தில் அதிக வெப்பத்தில் இருந்து உடலைக் காத்துக் கொள்ளவும், உடல் சூட்டைக் தணிக்கவும் மண்பானை குடிநீர் பெரிதும் உதவுகிறது.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நாம் குடிக்கும் குளிர்ந்த நீர், அப்போதைக்குத் தான் சில்லென்ற உணர்வைத் தரும். ஆனால், அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது பலரும் அறிந்த உண்மை. இருப்பினும், உடல்நலத்தை விடவும் சில்லென்ற குடிநீரைக் குடிப்பதையே மக்கள் பலரும் விரும்புகின்றனர். உடல் நலத்தைக் காக்க விரும்பினால், மண்பானை குடிநீரை அருந்துங்கள். இது தான் சிறந்த ஆரோக்கிய நடைமுறையாகும்.

கோடையில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் மண்பானை குடிநீரை குடித்துப் பழகினால், ஆரோக்கியம் சீராக மேம்படும். நமது ஆரோக்கியத்தை விட வேறெதுவும் முக்கியமில்லை என்ற மனநிலைக்கு அனைவரும் வர வேண்டும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்பானையை அனைவரது வீட்டிலும் தொடர்ந்து பயன்படுத்தினால், அது நமது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, மண்பானை தயாரிக்கும் குயவர்களின் பொருளாதாரச் சூழலிலும் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

மண்பாண்டப் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்துவது, நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என சித்த மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். மண்பானை குடிநீரில் தூசிகள் உள்பட நம் கண்ணுக்குத் தெரியாத நச்சுகள் ஏதேனும் இருந்தால், மண்பானை அவற்றையெல்லாம் வடிகட்டி நன்னீராக மாற்றிக் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் குளிர்ச்சியைத் தரும் இதமான மண்பானை தண்ணீர்!
Clay Pot

மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது மட்டுமின்றி, சோறு செய்வதும், மண் சட்டியில் குழம்பு வைத்து சாப்பிடுவதும் மிகவும் நல்லது. முன்பெல்லாம் செம்பு பாத்திரம் மற்றும் மண்பானையில் தான் சோறு செய்து சாப்பிடுவார்கள். ஆனால், இன்று அந்த பழக்க வழக்கம் முற்றிலும் மறைந்து விட்டது. உடல் நலனில் அக்கறையுடன் இருக்க நினைத்தால், தற்போது மறைந்த பழக்கத்தை நிச்சயமாக மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக இயற்கையோடு கலந்த வாழ்க்கையை பொதுமக்கள் பலரும் விரும்புவதால் செக்கு எண்ணெய், இயற்கை விவசாயம் மற்றும் மண்பானை என உடல் நலத்திற்கான வாழ்வியல் முறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். இது இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கும், கோடை வெப்பத்திற்கும் மட்டுமின்றி நாள்தோறும் மண்பானையை பயன்படுத்தி வாருங்கள். இன்றைய காலகட்டத்தில் நலமுடன் வாழ இது மிகச் சிறந்த வழியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com