

ருமேனியா ஐரோப்பாவின் 12 வது பெரிய நாடு மற்றும் அந்த ஒன்றியத்தின் மக்கள் தொகையில் 6வது இடத்தில் இருக்கும் நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் பக்தியுள்ள நாடுகளில் ருமேனியாவும் ஒன்றாகும். மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதம் பேர் ஆர்த்தடாக்ஸ் கிறித்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள்.
உலகின் மிகப்பெரிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் 15 ஆண்டுகளாக கட்டப்பட்டு, கடந்த அக்டோபர் மாதத்தில் அதன் கதவுகள் பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. அந்த தேவாலயத்தின் பெயர் பீப்பிள்ஸ் சால்வேசன் கதீட்ரல் (People's Salvation Cathedral) என்பதாகும்.
130 மீட்டர் (426.5 அடி) உயரத்தில் மத்திய புக்கரெஸ்ட் 'ஸ்பை ரியாஸ்' மலை மீது அந்நாட்டு பாராளுமன்ற அரண்மனையை நோக்கி உள்ளது இந்த 'மக்கள் இரட்சிப்பு கதீட்ரல்'. இந்த ரோமானிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் 5000 பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம். உலகிலேயே மிக உயரமான ஆர்த்தடாக்ஸ் கட்டமைப்பாகவும் இருக்கிறது.
பரப்பளவு, உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஆர்த்தடாக்ஸ் கதீட்ரல் இது தான்.132 மீ உயரம், நீளம், அகலம், உயரம் என முப்பரிமாண அளவில் 3,23,000 கன மீட்டர் கொள்ளவு கொண்டது.
கதீட்ரலின் உட்புறம் தங்க மூலாம் பூசப்பட்ட சுவர்களில் 300 க்கும் மேற்பட்ட புனிதர்கள் மற்றும் மதசின்னங்கள் ஓவியங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது 17,800 சதுர மீட்டர் (191,000 சதுர அடி) பரப்பளவை உள்ளடக்கியது. தேவாலய கதவுகள் 50 க்கும் மேற்பட்ட புனிதர்களின் வெண்கல உருவங்களை கொண்டுள்ளன.
2025 அக்டோபர் 26 ஆம் தேதி கான்ஸ்டான்டினோப்பிளின் புனிதர் முதலாம் பர்த்தலோமிவ் மற்றும் ருமேனியாவின் புனிதர் முதலாம் தேசபக்தர் டேனியல் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் இது புனிதப் படுத்தப்பட்டது.
இந்த தேவாலயம் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டாவது இடத்தில் உள்ள செயிண்ட் பீட்டர் மற்றும் பால் கதீட்ரலை விட சுமார் 13 மீட்டர் (42.5 அடி) உயரமானது. மேலும் தரை பரப்பளவில் மிகப்பெரிய ஆர்த்தடாக்ஸ் கட்டமைப்பாகும். பாராளுமன்ற அரண்மனைக்குப் பின்னால் அமைந்துள்ள இது, அரண்மனையை விட 50 மீட்டர் (164 அடி) உயரமாகவும், நகரத்தின் ஒரு அடையாளமாகவும் உள்ளது.
இது உலகின் மிகப்பெரிய தேவாலய சலவைக்கல் தளத்தைக் கொண்டுள்ளது (உள்ளறை அலங்காரம் சுமார் 18,000 சதுர மீட்டர் (193,750 சதுர அடி). இதில் சுமார் 3,000 சதுர மீட்டர் (32,292 சதுர அடி) பரப்பளவு கொண்ட பலிபீடத்தின் மொசைக் அடங்கும். இந்த மொசைக்கில் வெனிஸிலிருந்து கண்ணாடி டெசரே மற்றும் இத்தாலியின் பியட்ராசாண்டாவிலிருந்து வந்த கராரா கல் உள்ளன.
இந்த கட்டடம் சுமார் ஆறாயிரம் வழிபாட்டாளர்களையும், ஆயிரம் பேர் கொண்ட தேவாலய பாடகர் குழுவையும் வரவேற்கும். இதில் நான்கு லிஃப்ட்கள் இயங்குகின்றன. மேலும் 20 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 12.5 மைல்கள்) தொலைவில் கேட்கக்கூடிய சுதந்திரமாக ஆடும் 25 டன் எடையுள்ள மணியும் இருக்கிறது. அதில் டேனியலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கதீட்ரல் மைய குவி மாடத்தில் சுமார் 23 அடி உயரமுள்ள ஒரு சிலுவையும் உள்ளது. விளக்கு மற்றும் சிலுவை இல்லாத உலகின் உயரமான குவிமாடம் கொண்ட கதீட்ரல், இதன் வெளிப்புற குவிமாடம் 121 மீ உயரம் கொண்டது.
இதன் கட்டுமான செலவு 314 மில்லியன் டாலர்கள். இதில் 10 சதவீதம் தேவாலயத்தின் நிர்வாகத்தினுடையது. மற்றவற்றை நன்கொடையாக பெற்று கட்டிடம் முடிக்கப்பட்டது.1881 ம் ஆண்டு இந்த கதீட்ரல் கட்டும் திட்டம் முதலாம் கரோல் மன்னர் ஆட்சியின் போது முன் மொழியப்பட்டது. ஆனால் இரண்டு உலகப் போர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி காரணமாக திட்டம் தடைபட்டு பின்னர் கதீட்ரலுக்கான கட்டுமானம் 2010 இல் தொடங்கியது.
அதன் பலிபீடம் 2018 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவரை இதற்கு €270 மில்லியன் ($313 மில்லியன்) செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை பொது மக்களின் நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளன. தற்போது இங்கு நாளொன்றுக்கு 30 முதல் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வருகின்றனர்.