கம்பீரக் கதை சொல்லும் சேலை கலாச்சாரம்!

உலக சேலை தினம் (21.12.2023)
The saree culture of majestic storytelling
The saree culture of majestic storytellinghttps://sharechat.com

சேலை கட்டும் பெண்களுக்கும் கம்பீரம் உண்டு என்று உலகுக்கு உணர்த்திய பெண் ஆளுமைகள் அநேகர் இந்தியாவில் உண்டு. அன்றும் இன்றும் இந்தியப் பெண்கள் அணியும் சேலைக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. சேலை என்பது உலகின் மிகப் பழைமையான பாரம்பரியமிக்க ஆடை வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் பெண்கள் அணியும் சேலை மாறி, சுடிதார், குட்டை சட்டை, கவுன் போன்றவைகளும் ஆண்கள் அணியும் வேட்டி மறைந்து பேண்ட் மற்றும் ஜீன்ஸ் போன்றவைகளும் நாம் வாழ்வில் இடம் பிடித்தாலும், இன்றும் விழாக்கள், திருமணங்கள், பாரம்பரிய நிகழ்வுகளில் வேட்டி, சேலைகளுக்குத்தான் மவுசு அதிகம்.

இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் சேலையை அணிவதற்கு 80க்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன என்கின்றனர். எட்டு முழத் துணியை அழகான மடிப்புகளாக மாற்றி அவரவர் உடலுக்குப் பாந்தமாக அணிவதில் பெண்கள் பெருமைகொள்ளும் அதே வேளையில், இன்றைய நாகரிகப் பெண்கள் அவசரதிற்கு சேலை கட்டுவதைத் தவிர்ப்பதும் இருந்தே வருகிறது. எனினும் சேலையில் இருக்கும் அழகியல் மற்ற உடைகளில் இல்லை என்பதும் பல பெண்களின் கருத்தாக உள்ளது.

இந்தியாவின் அடையாளமாக விளங்கும் தொழில்களில் முக்கியமானது நெசவு. பெரும்பாலான நெசவாளர்களின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது சேலை. தங்கள் கற்பனையில் வண்ண வண்ண நூல் இழைகள் கொண்டு உருவாகும் சேலை பெண்களின் மனம் கவரும் டிசைன்களில் ஒன்றாகப் பாராட்டுப் பெறும்போது நெசவாளர்களின் மனம் தங்கள் தொழிலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறது. இவர்களின் படைப்பாற்றலை கவுரவிக்கும் விதமாகவும் எதிர்வரும் தலைமுறையினர் நமது கலாச்சாரங்களில் ஒன்றான சேலையின் பெருமைகளை அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 21 சர்வதேச சேலை தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சேலை என்பது வெறும் அழகின் அடையாளமாக மட்டுமல்ல, வீர மங்கைகளின், சாதனைப் பெண்களின் உடையாகவும் இருந்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது எனலாம். ஆம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின்   வீரமங்கையான ஜான்சி ராணி சேலை கட்டிக்கொண்டுதான் கையில் வாள் ஏந்தி போரிட்டார். கருணையில் சிறந்த அன்னை தெரசாவின் வெள்ளை நிற சேலை அவரின் எல்லையற்ற சேவையை இன்றளவும் நமக்குத் தெரிவிக்கிறது.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமை பெற்ற மகாராஷ்டிராவில் பிறந்த சாவித்திரிபூலே என்பவர் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க சென்றபோது வந்த தாக்குதல்களை முறியடித்து கையில் மாற்று சேலையோடு சென்று பாடம் நடத்தினார் என்கிறது வரலாறு. கேரளாவின் முளர்ச்சி பரம்பில் பெண்கள் சேலையை கட்டக்கூடாது என்று அதிகார வர்க்கத்தால் அடக்கப்பட்டபோது அதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தியவர்கள் அங்குள்ள பெண்கள். இப்படி நிறைய சம்பவங்கள் சேலையை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.

முறத்தால் புலியை விரட்டிய சங்க கால பெண் அணிந்ததும் சேலைதான். எதிரிகளை விரட்டி அடிக்கும் இந்தக் காலப் பெண்கள் அணிவதும் சேலைதான். அன்றைய பாட்டி அவ்வையார் முதல் நவீன அலங்காரப் பதுமைகள் வரை அனைவருக்கும் ஏற்ற உடையாக இருந்த, இருக்கும் சேலைகளில் பலவித ரகங்கள் உள்ளது. அவற்றில் அனைவராலும் விரும்பப்படும் பட்டு சேலைகள் பல ஊர்களில் பலவிதப் பெயர்களுடன் உருவாகிறது. வாரணாசியில் பனாரஸ் சேலை, மைசூரில் மைசூர்ப்பட்டு, கேரளாவில் செக்முண்டு, பெங்காலியில் பல்கரிப்பட்டு, மகாராஷ்ட்ராவில் பைத்தானி, தமிழகத்தில் காஞ்சிப் பட்டு, சேலம் இளம்பிள்ளை என்று இருந்தாலும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பாரம்பரியமும் கலாச்சார பெருமைகளும் உண்டு.

இதையும் படியுங்கள்:
இசையால் வசமாகா இதயமுண்டோ?
The saree culture of majestic storytelling

தற்போது டெக்னாலஜி முன்னேற்றத்தால் கைகளால் உருவான சேலை ரகங்கள், விசைத் தறியினால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலக அரங்கில் சேலைகள் தயாரிப்பு 38 ஆயிரம் கோடி வர்த்தக மதிப்பை கொண்டுள்ளது என்றும், இது அடுத்த ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சேலைகளை அணிவது மட்டுமல்ல, அந்த சேலைகளில் தங்கள் கைவண்ணத்தால் முத்து கண்ணாடி ஜரிகை போன்றவற்றைப் பதித்து வீட்டில் இருந்தே பொருளாதாரம் பெறுவதிலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். அந்த வகையில் நம் அழகியலின் அங்கமாகவும் நாட்டின் அடையாளமாகவும் திகழும் பெண்களின் உடையான சேலையின் பெருமையை நாம் இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com