சிக்கு கோலம் - இது கலை மட்டுமல்ல. அறிவியலும் கூட..

Chikku kolam
Chikku kolam
Published on

தமிழ்நாடும் சிக்குக் கோலமும்:

தென்னிந்தியாவில் பாரம்பரிய கலைகளில் கோலமும் ஒன்று. தினமும் அதிகாலையிலும், சிலசமயங்களில் மாலையிலும் வீடுகளுக்கு முன்பாக கோலமிடும் வழக்கம் உண்டு. தமிழ்நாட்டின் பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ள தனித்துவமான கோலம் தான் இந்த சிக்கு கோலம். ரங்கோலி மற்றும் பிற கோல வகைகள் வட மாநிலங்களில் இருந்து தழுவி வந்தன. சிக்குக் கோலத்தை புள்ளிகோலம், கம்பிக் கோலம், சுழி கோலம் எனப் பல பெயர்களில் அழைப்பார்கள். பெயருக்கேற்றவாறு சிக்குக் கோலங்கள் வரைவதற்கு மிகவும் சிக்கலானவை.

கோலமும் அறிவியலும்:

கோலங்கள் வடிவங்கள், புள்ளிகள், கோடுகள் மற்றும் வளைவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது. ஆகவே, இவை கணித அறிவியலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன. ஒரே சீரான இடைவெளியில் கோலப் புள்ளிகளை வைத்தல், புள்ளிகளை தொடாமல் அதைச் சுற்றி வரைதல், ஆரம்பித்த இடத்தில் கொண்டு வந்து முடித்தல், கைகள் எடுக்காமல் வரைதல் போன்ற சிக்குக் கோலமிடுதலில் உள்ள விதிகள் கணிதத்துடன் ஒன்றி உள்ளன. கோலங்கள் கணக்கீட்டு மானுடவியலில் (Computational Anthropology) ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சமகால கலை மற்றும் கலை வரலாற்றுடன் வலுவான உறவைக் கோலங்கள் கொண்டிருப்பதால், அவை ஊடகத் துறையிலும், பிற கலைத்துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பரதக்கலை!
Chikku kolam

கோலமும் உடல் ஆரோக்கியமும்:

அதிகாலையில் எழுந்து கோலமிடுவது ஒரே சமயத்தில் மனதிற்கும் உடலுக்கும் பயிற்சி அளிக்கும் உடற்பயிற்சியாக விளங்குகிறது.

கோலமிடுதல், மலசனா (squat) மற்றும் உட்கடாசனம் (chair pose) மற்றும் வஜ்ராசனம் போன்ற ஆசனங்களின் தோரணைகளுடன் பொருந்துவதாக உள்ளது. உடலை வளைவு மற்றும் நெகிழ்வுத் தன்மையுடன் வைத்துக் கொள்வதற்கு கோலமிடுதல் ஒரு பயிற்சியாக விளங்குகிறது.

புள்ளி முறை அல்லது கோடுகளை அமைப்பதற்கு மனக் கணிதம் தேவை. ஒரு விரிவான கோலம் போட்டு முடிக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். அதுவரையில் மனதை கோலத்தில் மட்டுமே நிலைநிறுத்தி இருப்போம். எனவே, கோலமிடுதல் தியானம் செய்வதுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

இன்றைய சூழலில், அதிகாலையில் எழ வேண்டும் என்றாலே, "அச்சச்சோ அது மிட்நைட் ஆச்சே..! இதுல எங்க அதிகாலை எழுந்து கோலம் போட" என்று நீங்கள் முனங்குவது காதில் விழுகிறது. இருந்தாலும், தற்போது அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளுள் தமிழ்நாட்டிற்கே உரித்தான சிக்குக் கோலமும் இடம் பிடித்துள்ளது. பொழுதுபோக்கு, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சி போன்ற செயல்பாடுகளை தன்னுள்ளே கொண்டுள்ள கோலம் எனும் கலையை காப்பது நமது கடமையல்லவா.?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com